top of page
Search

05/12/2024, பகவத்கீதை, பகுதி 111

அன்பிற்கினியவர்களுக்கு:

ஒன்பதாம் அத்தியாயத்தில் இருபத்தி இரண்டாம் பாடல்வரை பார்த்துள்ளோம். தொடர்வோம்.

எல்லாம் பக்தி மயம் இந்த அத்தியாயத்தில்!


குந்தியின் மகனே, நான் சொல்வதைக் கேள்! யார் எந்தக் கடவுளரை வணங்கினாலும் அவர்களும் என்னையே வணங்குகிறார்கள். என்னைத்தான் வணங்குகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை! அறியாமையே காரணம். – 9:23


எல்லா யாகங்களிலும் உணவை உண்பவனும் பயனை அளிப்பவனும் நானே! என்னை மனிதர்கள் அறிவதில்லை. ஆகையினால் அவர்கள் நழுவி வீழ்கின்றனர். – 9:24


தேவதைகளை வணங்குபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்; பிதிருக்களை வழிபடுபவர்கள் பிதிர்களை அடைகிறார்கள்; பூதங்களைத் தொழுதால் பூதங்களை அடைவார்கள்; என்னை பூசிப்பவர்கள் என்னை அடைவார்கள். – 9:25


யாரை வணங்கினாலும் என்னையே வணங்குவது என்றார் பாடல் 9:23இல். ஆனால், என்னை அடைய என்னை வணங்கு என்கிறார்!


மனச்சுத்தியுடன் ஒரு பச்சிலையையோ, ஒரு பூவையோ, அல்லது நீரையோ எனக்குச் சமர்ப்பித்தால் நான் அவற்றை ஏற்றுக் கொள்கிறேன். – 9:26


ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பாடியதனைப் போலச் சொல்கிறார். தூய மனது, சில பூக்கள், வாயினால் பாட்டு, மனத்தினால் சிந்தனை. அவ்வளவே என்றார் ஆண்டாள் நாச்சியார்.


பக்தி செலுத்த வேறு எதுவும் பெரிதாகத் தேவை இல்லை என்கிறார்.


… தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். --- பாடல் 5, திருப்பாவை, ஆண்டாள் நாச்சியார்

 

ஆண்டாள் நாச்சியாருக்கும் ஆண்டவனுக்கும் இடையில் இருந்த பாவனைக்குப் பெயர் நாயகன் நாயகி பாவம்!

 

ஆனால், அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையினில் நட்பு பாவனை! இந்தப் பாவனையில்தான் உரையாடலையே தொடங்கினார்.

 

ஆனால், அந்தப் பாவனை இங்கு மாறுபாடு அடைகிறது.

 

கீதாசாரியர் தொடர்கிறார்:

 

அர்ஜுனா, நீ எதனைச் செய்தாலும் அதனை எனக்கு அர்ப்பணமாக்கிவிடு. இவ்வாறு சரணடைவதனால் புண்ணிய பாவங்களில் இருந்து விடுபடுவாய். விடுபட்டு முடிவினில் என்னை வந்து அடைவாய். – 9:27-28

 

எனக்கு எல்லாரும் சமம். எனக்கு விருப்பமானவர்கள் என்றோ, வெறுக்கத்தக்கவர்கள் என்றோ யாரும் இல்லை. ஆனால், என்னைப் பூசிப்பவர்கள் என்னிடம் உள்ளனர்; நானும் அவர்களிடம் உள்ளேன். – 9:29

 

தீய ஒழுக்கத்தில் பயணப்படுபவனும் வேறு நாட்டம் இன்றி என்னைப் போற்றுவானாயின் அவன் நன்னடத்தை உள்ளவன் என்றே கருதற்குரியவன். ஏனெனில், அவன் திட சிந்தனையுடன் என்னையே நன்றாகப் பற்றிக் கொள்கிறான். – 9:30

 

அவன் விரைவினில் தரும சிந்தனையுடையவனாக மாறிவிடுவான்; மனம் அமைதி பெறுவான்; என்னுடைய பக்தன் என்றும் நாசமடையமாட்டான் என்பதனை அர்ஜுனா, நீ உண்மையில் உணர்ந்து உலகிற்கு அறிவிப்பாய். – 9:31

 

அடுத்து உள்ள இந்த 9:32 - 33 பாடல்களை முன்னரே பார்த்துவிட்டோம். காண்க 28/11/2024, பகவத்கீதை, பகுதி 104.

 

இந்த அத்தியாயத்தின் முடிவுரையாக:

என்னிடம் மனத்தை வைத்து, என் பக்தனாகி, என்னைப் பூசித்து, என்னையே வணங்குவாயாக! என்னையே உத்தமக் கதியாகக் கருதி உள்ளத்தை நிலை நிறுத்தி என்னையே வந்தடைவாய். – 9:34

 

இவ்வாறு இந்த அத்தியாயம் முற்றுப் பெறுகிறது.


நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

4 views0 comments

Kommentare


Post: Blog2_Post
bottom of page