அன்பிற்கினியவர்களுக்கு:
ஒன்பதாம் அத்தியாயத்தின் அடி நாதம் பக்தி. பக்தியினால் சரணடைதல் என்ற கருத்து சொல்லப்படுகிறது.
அடுத்துத் தொடரும் விபூதி யோகம் என்னும் பத்தாம் அத்தியாயத்தில் எல்லாம் நானே என்னும் கருத்து முன் வைக்கப்படுகிறது.
பூதி என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உள. அவற்றுள் பயன், செல்வம், அனுபவம், பெருமை என்னும் பொருளில் பெரும்பாலும் இலக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வி என்னும் முன்னொட்டுப் பூதியை மிகப் பெரிய பூதி என்று ஆக்குகிறது. நாயகன் என்றால் தலைவன்; விநாயகன் என்றால் தலைவர்களுக்கெல்லாம் தலைவன் என்பது போல!
எனவே, விபூதி என்றால் கிடைக்கப் பெறும் பேறுகளுக்குகெல்லாம் சிறந்த பேறு. இதனைக் குறித்துச் சிந்திக்கும் பகுதி விபூதி யோகம்.
பரமாத்மா சொல்லத் தொடங்குகிறார்:
எனக்கு நெருக்கமான வீரனே, உனக்கு மீண்டும் சொல்கிறேன்; உனது நலம் நாடி இதனைச் சொல்கிறேன். – 10:1
என்னுடைய பெருமையைத் தேவ கணங்கள் உணருவதில்லை; சிறந்த முனிவர்களும் உணர்வதில்லை; தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் எல்லா வகையிலும் நான் முதற் காரணன் அன்றோ? – 10:2
அநாதி காலம் தொட்டே உள்ள என்னை, பிறப்பில்லாத என்னை, உலகுக்கெல்லாம் மகேச்சுவரனான என்னை எவன் ஒருவன் அறிகிறானோ அவன் மனிதர்களுள் மதி மயக்கம் நீங்கியவன்; அவன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை அடைகிறான். – 10:3
புத்தி, ஞானம், மதி மயக்கமின்மை, பொறுமை, உண்மை, உடலால் உள்ளத்தால் அடக்கம், இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, துன்புறுத்தாமை, சம நிலை, போதுமென்ற மனம், தவம், தானம், இகழ், புகழ் உள்ளிட்ட பல விதமான பாவனைகள் என்னிடமிருந்தே உண்டாகின்றன. – 10:4-5
உலகத்தில் தோன்றியவர்கள் அனைவரும் ஏழு பெரும் முனிவர்களிடமிருந்தும், நான்கு மனுக்களின் வழி வந்தவர்கள். அவர்கள் என்னைப் போன்றே சக்தி வாய்ந்தவர்கள்; என் மனத்தினின்றே உதித்தவர்கள். – 10:6-7
எவன் என்னுடைய இந்தப் பெருமைகளையும், யோகச் செயல்களையும் உள்ளபடி அறிகின்றானோ அவன் ஐயமின்றி இருப்பான். நானே அனைத்திற்கும் மூலம், என்னிடமிருந்தே அனைத்தும் பெருகுகின்றன என்று உணர்ந்தவர்கள் என்னியே பூசனை செய்வார்கள். – 10:8
சிந்தையை என்னிடம் வைத்து, என்னையே உயிர் மூச்சாய் கொண்டிருப்பவர்கள் தங்களுக்குள் என்னயே போதித்துக் கொண்டும் என்னுடைய செயல்களை எடுத்து ஓதிக்கொண்டும் திருப்தியடைகிறார்கள்; மகிழ்ச்சி கொள்கிறார்கள். – 10:9
நிலை பெற்ற உள்ளத்துடன் என்னயே பூசிக்கும் இவர்களுக்கு என்னுடன் இணையும் பொருட்டு புத்தி யோகம் அளிப்பேன். – 10:10
அவர்களுக்கு, என் அருளால் அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை அளித்து ஒளிர்விடச் செய்கிறேன். – 10:!1
அடுத்து அர்ஜுனன் பேசுவதாக அமையும் பகுதி. நீண்ட நேரம் அமைதியாக இருந்தவன் பேசத் தொடங்குகிறான். அவன் எந்த ஐயத்தினையும் எழுப்பவில்லை. மாறாக நீ முன்னர் சொன்னதை மீண்டும் ஒரு முறை சொல் என்கிறான்.
நாளைத் தொடர்வோம், நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments