அன்பிற்கினியவர்களுக்கு:
தியானம் செய்வது எப்படி? தொடர்ச்சி
ஒரு விரிப்பின் மீது, வேண்டுமானால் (ஒரு தலையணை இட்டு,) அமர்ந்து கொள்ளலாம். (இலவம் பஞ்சுத் தலையணையைத் தவிர்த்துவிடுங்கள். அது காலப் போக்கில் கெட்டிப்பட்டுவிடும்.
பத்மாசனம், அந்த ஆசனம், இந்த ஆசனம் என்று எதுவும் தேவையில்லை!) உங்களுக்கு எப்படி அமர்ந்தால் சுகமோ அப்படி அமர்ந்து கொள்ளுங்கள். – 6:11
தியானத்தில் அமருவதற்கு முன் குளிப்பது நல்லது; குளிக்க முடியாவிட்டால் முகம், கை, கால் உள்ளிட்டவைகளைத் தண்ணிரால் சுத்தம் செய்து கொள்ளவும். – நாகூர் ரூமி
ஆசனத்தில் சுகமாக அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொள்ளவும். உள்ளேயும் வெளியேயும் முச்சுச் சென்றுவருவதனைக் சிறிது நேரம் கவனிக்கவும். தலை முதல் கால்வரை பொறுமையாக மனக் கண்ணால் சிறிது நேரம் பார்த்துக் கொண்டேவர வேண்டும். ஒவ்வொரு அங்கங்களாகப் பார்த்துக் கொண்டு வரும் பொழுது அந்த அந்த அங்கங்கள் தளர்வுறும் (relax). அதன் முடிவினில் மீண்டும் மூச்சினை சிறிது நேரம் கவனியுங்கள். பின்பு மெதுவாகக் கண்களைத் திறக்கவும். இவ்வாறு தொடர்ந்து தினந்தோறும் குறிப்பிட்ட அதே நேரத்தில் செய்து கொண்டுவர வேண்டும். சித்தச் சுத்திக்காகவே இந்தப் பயிற்சியினைச் செய்தல் வேண்டும். – 6:12
தியானத்தில் அமரும் பொழுது உடல், தலை, கழுத்து ஒரே ஒழுங்காகவும் அசையாமலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மூக்கின் நுனியில் கவனத்தை வைக்க வேண்டும். (மூச்சினைக் கவனிக்க ஆரம்பித்தாலே மூச்சு ஒரு நிதானத்திற்கு வரும்). மனத்தை இங்கே அங்கே என்று அலைபாயாமல் இருக்கவும் உதவும். – 6:13
மூச்சு நிதானம் ஆக ஆக மனம் ஒரு முகப்படும்; அப்பொழுது நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும். இறையருளை நாடுபவர்கள் இறை சிந்தனை செய்யலாம்; இயற்கையின் சக்தி என்பவர்கள் அச் சக்தியைச் சிந்திக்கலாம். – 6:14
(ஆனால், எதனையும் வலிந்து செய்யாதீர்கள். இந்தப் பயிற்சியின் கால அளவு இருபது விநாடிகளுக்கு மேலாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும்,)
தியானப் பயிற்சி செய்பவன் மன அமைதி அடைகின்றான். – 6:15
இந்தத் தியானப் பயிற்சியானது செயல்களைச் செய்யும் பொழுது நிதானத்தைக் கொடுக்கும்.
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ னாமே. – பாடல் 604, பகுதி 8 - தியானம், மூன்றாம் தந்திரம், திருமந்திரம், திருமூலர் பெருமான்
நாட்டம் = கண்கள் இரண்டின் பார்வையையும்; நடு மூக்கில் வைத்திடில் = மூக்கின் நுனியில் வைத்திடில்; வாட்டமும் இல்லை = உள்ளத்திற்குத் தளர்ச்சியில்லை; மனைக்கும் அழிவில்லை = உடலுக்கும் அழிவில்லை; ஓட்டமும் இல்லை = உயிர் இங்கும் அங்குமாக ஓடுவதும் இல்லை; உணர்வில்லை = புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும்; தானில்லை = தன்னை மறந்து இயற்கையுடன் ஒன்றும் நிலை வரும்; தேட்டமும் இல்லை = ஆசைகளும் அழியும்; சிவன் அவனாமே = அவ்வாறு பயிற்சி செய்பவன் இயற்கையுடன் ஒன்றிவிடுவான்.
கண்கள் இரண்டின் பார்வையையும் மூக்கின் நுனியில் வைத்திடில் உள்ளத்திற்குத் தளர்ச்சியில்லை; உடலுக்கும் அழிவில்லை; உயிர் இங்கும் அங்குமாக ஓடுவதும் இல்லை; புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும்; தன்னை மறந்து இயற்கையுடன் ஒன்றும் நிலை வரும்; ஆசைகளும் அழியும்; அவ்வாறு பயிற்சி செய்பவன் இயற்கையுடன் ஒன்றிவிடுவான்.
பரமாத்மா மேற்கண்ட ஆறு பாடல்கள் (6:10-15) மூலம் தியானம் செய்வது எப்படி என்று சுருக்கமாகச் சொன்னார்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments