அன்பிற்கினியவர்களுக்கு:
அர்ஜுனன் கூறியது:
நீயே பரப்பிரம்மம், நீயே உயர்ந்த உறைவிடம், தூய்மையினும் தூய்மை, மேலும், எல்லா ரிஷிகளும், தேவ ரிஷியாகிய நாரதரும், அவ்வாறே, அஸிதரும், தேவலரும், வியாசரும் உன்னை நித்யக் கடவுளாகவும், ஜோதி மயமான முழு முதல் தெய்வமாகவும் பிறப்பில்லாதவன் என்றும் கூறியுள்ளார்கள். அவ்வாறே நீயும் எனக்கு எடுத்துரைத்தாய். – 10:12-13
கேசவா, நீ எனக்கு உரைப்பதெல்லாம் உண்மை என்றே உணர்கின்றேன். எனினும் தேவர்களும் அசுரர்களும் உன்னை அறிந்தவர்களில்லை. – 10:14
புருஷோத்தமா, உலகைப் படைப்போனே, உலக நாயகனே, தேவர்களுக்கெல்லாம் தேவனே, உலகின் அதிபதியே, நீயே உன்னை முழுமையாக அறிந்தவன். – 10:15
உன்னுடைய அருமை பெருமைகளை, இந்த உலகில் நீ வியாபித்திருக்கும் தன்மையை உன்னையன்றி உரைப்பதற்கு உற்றவர் யார்? – 10:16
எப்பொழுதும் உன்னையே நான் சிந்திப்பது எங்கனம்? நீ எவ்வெவ் வடிவங்களில் சிந்திக்கத் தக்கவனாய் உள்ளாய்? ஜனார்த்தனா, நீ இதுகாறும் சொன்னவை என் காதுகளில் அமுதமாகப் பாய்ந்தது. ஆனால், இன்னும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. எனவே, உன்னுடைய அருமை பெருமைகளை மீண்டும் நீ சொல்ல வேண்டும். – 10:17-18
பகவான் சொல்லத் தொடங்குகிறார்:
எனக்குப் பிரியமானவனே என்னுடைய அருமை பெருமைகளுள் முக்கியமானவற்றை மட்டும் எடுத்துச் சொல்கிறேன். (ஏனெனில்) என்னுடைய பெருமைகளுக்கு எல்லை எனப்து இல்லையன்றோ? – 10:19
எல்லா உயிர்களின் உள்பொருள் நான்; அவ் உயிர்களின் தோற்றமாகவும், அவ் உயிர்களின் பெருக்கத்திலும், மறைவிலும் நானே இருக்கின்றேன். - 10:20
முன்னை முழுப் பொருள்களுள் (ஆதித்தயருள்) நான் விஷ்ணு; ஓளி வீசும் பொருள்களுள் நான் சூரியன்; காற்றினில் நான் மரீசி; நட்சத்திரங்களுள் நான் சந்திரன்; வேதங்களுள் நான் சாம வேதம்; தேவர்களுள் நான் இந்திரன்; புலன்களூள் நானே மனது; உயிர்களுள் நானே உணர்வு; ருத்திரர்களுள் சங்கரன்; யக்ஷ ராக்ஷஸர்களுள் நான் குபேரன்; வசுக்களுள் அக்னி; மலைகளில் நானே மேரு; புருகிதர்ளுள் பிரகஸ்பதி; படைத் தலைவர்களுள் கந்தன்; நீர்நிலைகளுள் கடலாக உள்ளேன். – 10:21-24
மகரிஷிகளுள் நான் பிருகு; சொல்களுள் நான் ஒரெழுத்து; வேள்விகளுள் நான் மன வேள்வி (ஜெபம்); அசையாப் பொருள்களுள் நான் இமாலயம்; மரங்களுள் அரச மரம்; தேவ ரிஷிகளுள் நாரதர்; கந்தர்வர்களுள் சித்திரரதன்; சித்தர்களுள் கபிலர்; குதிரியகளுள் உச்சை சிரவசு; யானைகளுள் ஐராவதம்; மனிதர்களுள் அரசன்; - 10:25-27
ஆயுதங்களுள் வஜ்ராயுதம்; பசுக்களுள் காமதேனு; பிறப்போரில் நான் மன்மதன்; பாம்புகளுள் வாசுகி; நாகப் பாம்புகளுள் நான் அனந்தன்; நீர் வாழ்வோரில் நான் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தன்னைக் கட்டியவர்களுள் நான் யமன்; - 10:28-29
அசுரரில் நான் பிரகலாதன்; இயங்குனவற்றுள் நான் காலம்; விலங்குகளுள் சிங்கம்; பறவைகளுள் கருடன் நானே. – 10:30
“நீ எவ்வெவ் வடிவங்களில் சிந்திக்கத் தக்கவனாய் உள்ளாய்?” என்ற அர்ஜுனனின் வினாவிற்கு (பாடல் 10:17) விடையளிக்கும் விதமாக இப்படிப் பட்டியல் நீள்கின்றது!
ஒவ்வொரு பொருள்களுள் அந்தக் காலத்தில் சிறந்தவையாகக் கருதப்பட்டவை எவை என்று நாம் மேற்கண்ட பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நாளைத் தொடர்வோம், நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments