நன்றி, நன்றி, நன்றி.
கண்கண்ட தெய்வமாக வேண்டுமா?
இன்றைய தினம் இந்த தொடர் துவங்கி 50வது தினம். பெருத்த மகிழ்ச்சி. நகர்ந்த நாள்களில் நுகர்ந்த இனியர்களுக்கு நனிநன்றிகள் உரித்தாகுக.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில் நல் லகதிக்கு யாதும்ஓர் குறைவுஇலை;
கண்ணில்நல் அஃதுஉறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.
--– திருஞானசம்பந்தர் தேவாரம்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் = இவ் உலகத்திலே நல்ல வண்ணம் சிறப்பாக வாழலாம்; வைகலும் = எப்போதும்; எண்ணில் = சிந்தித்தோமேயானால்; நல் லகதிக்கு யாதும்ஓர் குறைவுஇலை = நல்ல தொரு நிலைக்கு ஒரு குறையும் இல்லை;
உதாரணம் வேண்டுமா?
கண்ணில்நல் அஃதுஉறும் = கண்ணுக்கினிய;
கழுமல வளநகர்ப் = சீர்காழியில்; பெண்ணில் நல் லாளொடும் = நல்லதொரு இல்லாளொடு; பெருந்தகை இருந்ததே = பெருமானார் இருந்ததே.
இத் தேவாரம் திருக்குறளின் அடியொற்றியே அமைந்துள்ளது. இல்வாழ்வின் சிறப்பை விளக்க, இறைவன் என்கிற பெருந்தகை, நம்மை போலவே, இல்லறத்திலே சீர்காழியிலே சிறந்து வாழ்ந்துளான் என்பது ஒரு குறியீடு.
ஐம்பதாவது நாளான இன்று, குறள் 50 ஐ பார்க்கலாம்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” ---குறள் 50; இல்வாழ்க்கை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் = வாழும் வகையறிந்து விதித்தன செய்து விலக்கியன ஒழித்து இல்வாழ்வில் வாழ்பவன்;
வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் = மேலான தெய்வங்களாக போற்றப்படுவான்.
கண்கண்ட தெய்வமாக வேண்டுமா? மிக எளிது. நாம் ஏற்கெனவே பார்த்த குறள்கள் 41,42,43 ல் சொல்லியவாறு இல்வாழ்க்கையின் பதினொரு கடமைகளை செய்து, அதுவும், குறள் 49ல் சுட்டியவாறு ,பிறன் பழிப்பது இல்லாயின் அவர்களே கண்கண்ட தெய்வங்கள் என்கிறார் நம் வள்ளுவப்பெருந்தகை.
நல்ல வண்ணம் வாழுவோம். மீண்டும் சந்திப்போம். நன்றியுடன்,
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments