top of page
Search

08/11/2024, பகவத்கீதை, பகுதி 84

அன்பிற்கினியவர்களுக்கு:

தியானத்திற்கு எட்டு நிலைகள் என்பதனை முன்னர் திருக்குறளைச் சிந்திக்கும் பொழுது பார்த்துள்ளோம். காண்க 20/07/2021 (147) https://foxly.link/easythirukkural_தியானம்.

 

மீள்பார்வைக்காக:

1. இயமம் = செய்யக் கூடாதவற்றைச் செய்யாமல் இருக்க முயலுவது;

2. நியமம் = இயமம் கைவந்த பின் செய்ய வேண்டியதைச் செய்யப் பழகுவது;

3. ஆசனம் = இயமம், நியமம் கைகூடிய பின்  பல நிலைகளில் சும்மா உட்கார்ந்து பழகுவது;

4. பிராணாயாமம் = மேலே சொன்ன மூன்றும் கைவரப்பெற்றவர்கள் மூச்சினைச் சீர் செய்ய முயல்வது. – இந்த நான்கும் ஆயத்த நிலைகள். இதெல்லாம் சரியாக வந்துவிட்டால் அடுத்து வரும் நான்கு நிலைகள்தாம் உண்மையான யோக முயற்சிகள்.

5. பிரத்தியாகாரம் = மனத்திலே நல்ல எண்ணங்களும் வரும்; அல்லனவும் வரும். அல்லவற்றை நல்லது கொண்டு மாற்றுவதுதான் பிரத்தியாகாரம்.

இருள் இருக்கிறது என்றால் இருளுடன் போராட முடியாது. அதற்குத் தீர்வு வெளிச்சத்தைக் கொண்டுவருவதுதான் அதனைப் போல. நல்லதை இட்டு  அல்லதை ஒடுக்கப் பழக வேண்டும்;

6. தாரணை = பல நல்ல எண்ணங்கள் பல் வேறு திசைகளில் செல்லும்; அதனையெல்லாம் ஒன்றுபடுத்தி ஒரு எண்ணமாக மாற்றும் பயிற்சி;

7. தியானம் = (இப்போதான் தியானமே ஆரம்பிக்கணும், நேராகவே தியானப் பயிற்சியை ஆரம்பிச்சுடறாங்க!) தியானம் என்பது எண்ணங்களை ஒன்று படுத்தினோம் அல்லவா அந்த எண்ணங்களிலேயே ரொம்ப நேரம் மனத்தில் வைத்திருக்கும் பயிற்சி;

8. சமாதி = அந்த எண்ணத்தையும் ஒடுக்குவதுதான் சமாதி

 

பரமாத்மா தியானத்திற்கு அடிப்படையான இயமம் நியமங்களைச் சொல்லப் போகிறார் அடுத்து வரும் பாடலில்.


அர்ஜுனா, உணவினை அதிகமாக உண்பவனுக்குத் தியான யோகம் கைக் கூடாது; உண்ணாமல் பசியுடனும் இருந்து வருத்திக் கொள்பவனுக்கும் அமையாது; அதிகமாக உறங்கவும் கூடாது; உறங்காமல் இருப்பவனுக்கும் கூடாது. – 6:16

 

மிதமான உணவு; சற்றுச் சிறிய நடை; மிதமான உழைப்பு; மிதமான உறக்கம்; விழிப்புடன் இருத்தல் உள்ளிட்டவற்றைக் கைக்கொண்டால் தியான யோகமானது துன்பங்களைத் துடைக்கும் கருவியாக இருக்கும். – 6:17

 

யுக்தன் என்ற சொல்லை இந்த அத்தியாயத்தில் பயன்படுத்துகிறார். யுக்தன் என்றால் அறிவுடையவன் என்று எடுத்துக் கொள்ளலாம். அஃதாவது, மனம் அமைதியைப் பெறும் வழியை அறிந்தவன்.

 

தியானம் பழகப் பழக மனம் ஒரு நிலைக்கு வந்துவிடும். சித்தம் (எண்ணங்கள்) மன சாட்சியுடன் (ஆத்மா) இணைந்துச் செல்லும். புத்தி அதனில் நிலைத்து நிற்கும்; அலை பாயாது.

 

பரமாத்மா தொடர்கிறார்:

 

எப்பொழுது சித்தமானது மன சாட்சியுடன் (ஆத்மாவுடன்) ஊன்றி நிற்கிறதோ, அப்பொழுது, அனைத்துப் பற்றுகளும் நீங்கும். அவனே மனம் அமைதியுறும் வழியினை அறிந்தவன். அவனே யுக்தன். – 6:18

 

சிறு தீயிற்குக் காற்றுப் பகை; பெருந்தீயிற்கு அதுவே துணை. ஆனால், காற்று அசையாமல் இருந்தால் விளக்கானது நின்று நிதானமாக எரிந்து ஒளியினை வழங்கிக் கொண்டிருக்கும்.

 

பரமாத்மா தொடர்கிறார்:

 

மன சாட்சியினிடம் (ஆத்மாவினிடம்) பொருந்தி இருக்கும் கலையைக் கற்றவன் மன அமைதியுடன் இருப்பான். காற்று அசைவற்று இருக்கும் இடத்தில் விளக்கின் சுடர் அசைவதில்லை. நின்று நிதானமாக ஒளியினை வெளியிடும் என்னும் உவமையை பெரியோர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். – 6:19

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

 

6 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page