அன்பிற்கினியவர்களுக்கு:
நான் யார் என்று சொல்லிக் கொண்டே வருகிறார்.
சுத்தம் செய்யும் பொருள்களுள் காற்று நான்; ஆயுதங்களைப் பயன்படுத்துவோரில் இராமன் நான்; மீன் களில் சுறா நான்; ஆற்களுள் கங்கை நான். – 10:31
பாடல் 10:20 இல் சொன்னதை மீண்டும் பாடல் 10:32 இல் சொல்கிறார்.
உயிர்களின் தோற்றமாகவும், அவ் உயிர்களின் பெருக்கத்திலும், மறைவிலும் நானே இருக்கின்றேன்; அறிவினில் அதியாத்ம அறிவு நான்; வாதம் செய்வோரிடம் வாதமும் நானே! – 10:32
அ(த்)தியாத்மா (अध्यात्म) என்றால் என்ன? பாடல் 8:3 இல் ஆத்ம ஞானம் என்ற பொருளில் பார்த்தோம். இஃது ஒரு தனிப்பட்ட அனுபவம் (personal experience). நாமே உணர்ந்து கண்டறிவது. இந்த அனுபவத்தை வேறு எவ்வகையினிலும் அறிய இயலாது.
எழுத்துகளுள் அகரம் நான்; தொகைகளில் (ஸமாஸம்) இரட்டைத் தொகையாக இருக்கிறேன் (துவந்துவ ஸமாஸம்); அழிவில்லாத காலமும் நானே; படைப்பாளிகளுள் உயர்ந்தவன் நானே. – 10:33
அனைத்தையும் உறுதியாக அழிக்கும் மரணம் நான்; தோன்றுபவைகளுள் தோற்றம் நான்; பெண்மையின் இயல்புகளில் புகழ், செழிப்பு, சிறந்த பேச்சு, நினைவாற்றல், புத்தி, திடசித்தம், பொறுமை நானே. – 10:34
சாம வேத த்தில் பிருஹத் சாமம் நான்; சந்தங்களுள் காயத்ரீ நான்; மாதங்களுள் நான் மார்கழி; பருவங்களுள் நான் மலரும் பருவம். – 10:35
சாமவேதம் என்பது இசை நயம் மிக்கப் பாடல்களைக் கொண்டது என்கிறார்கள். சாமம் என்றாலே மன அமைதிக்கு வழி வகுப்பவை என்று பொருளாம். அவற்றில் நள்ளிரவில் பாடக்கூடியதாம் இந்த பிருஹத் சாமம்.
பகவத்கீதைக்கு நம் கவியரசர் கண்ணதாசன் உரை எழுதியுள்ளார். உரை மட்டுமா எழுதியுள்ளார்? பகவத்கீதையின் இந்தப் பத்தாம் அத்தியாத்தைப் படித்துவிட்டு எழுதிய பாடல் போல உள்ளது கீழ்காணும் பாடல். ஒரு வேளை அந்தக் கீதாசாரியன் இந்தப் பாடலை முன்பே அறிந்திருந்தால் இன்னும் சிலவற்றையும் அவரின் பாடலாகவும் இணைத்திருப்பார்!
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை - அவள்
கவிஞனாக்கினாள் என்னை! – கவியரசு கண்ணதாசன், பாவமன்னிப்பு 1961
சங்க கால இலக்கியங்களை எளிய நடையினில் திரைப்படப் பாடலாக ஆக்கும் வல்லவர் நம் கவியரசர் கண்ணதாசன்.
சங்க காலக் கவிதைகள் மட்டுமல்ல, நம் சம காலத்தில் வாழ்ந்து மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதைகளும் திரைப் பாடல்களாக உருமாறி உச்சம் தொடுகின்றன!
எதனையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் சிறிது வேகம் குறையும். அப்பொழுதைக்கு அப்பொழுது சற்று மாறுதல் தேவை! ஆகையினால் இந்த இடையீடு!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments