அன்பிற்கினியவர்களுக்கு:
… நெஞ்சுக்கு தேவை மனசாட்சி – அது
நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி …
கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே … என் அண்ணன் 1970, கவியரசு கண்ணதாசன்
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி! அதுவே நீதி தேவன்! ஆனால் அந்த நீதி தேவன் அரங்கத்துக்கு வரமாட்டான்! நம்முள்ளுக்குள்ளே இருந்து கொண்டு கவனித்துக் கொண்டுதான் இருப்பான்!
மனசாட்சியுடன் (ஆத்மா) ஒத்துப் போய்விட்டால் என்றும் பேரானந்தமே! இதற்குதான் தியானம் கைக் கொடுக்க வேண்டும் என்பதனைச் சொல்லிக் கொண்டு வருகிறார்.
அடுத்துவரும் நான்கு பாடல்கள் தொடர் பாடல்கள்!
எங்கு எண்ணங்கள் (சித்தம்) மனசாட்சியோடு (ஆத்மா) ஒன்றி அமைதியடைகிறதோ மனசாட்சியை அறிந்து அதனுடனே ஒன்றி இன்பம் எய்துகிறானோ, கரவாகிய புத்தியைக் கடந்து புலன்களின் தூண்டுதலில் இருந்து விலகி பேரின்பம் அடைகிறானோ, எங்கு நிலை பெற்றால் உண்மையில் இருந்து வழுவதில்லையோ, எந்த மகிழ்ச்சியைப் பெற்றால் அதனைவிட வேறு ஒன்று இருப்பதாக நினைக்க முடியாதோ, எந்த நிலையில் பெரும் துக்கங்களும் தூசிகளாகத் தெரியுமோ, அந்த நிலையே தியான யோகம் என்று அறி! அதனையே உறுதியாகப் பற்றிக் கொள். – 6:20-23
அஃதாவது, மனசாட்சியைக் கண்டறியத்தான் தியானம். அதனிலேயே பொருந்தி மன அமைதி பெற்று மகிழ்வுடன் இருப்பது தியான யோகம்.
நம்மாளு: அது சரி! இந்தத் தியான யோகத்தையெல்லாம் போர் முனையிலேயா சொன்னார்?
ஆசிரியர்: போர் முனையினிலும் மனம் அமைதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதனைக் குறிப்பதாகவும் இருக்கலாம்..
இக்கருத்துகள் அவர் எப்பொழுதுமே சொல்லிக் கொண்டிருப்பவையாகத்தான் இருந்திருக்கும். போர் முனையில் அவற்றைச் சுட்டிக் காட்டியிருப்பார். இல்லை, அவனின் கவனத்திற்கு வந்திருக்கும். அவற்றை நாம் அறிந்து கொள்ளும்விதமாக நூலாசிரியர் விரித்துச் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். திரைப்படங்களில் வரும் “நினைத்துப் பார்க்கும்” (flash-back) காட்சிகளைப் போன்று!
திருமூலர் பெருமான் என்ன சொல்கிறார் என்று கேட்போம். வெளியே எவ்வளவு ஆரவாரங்கள் இருப்பினும் மனமானது அமைதியில் ஒன்றி இருக்க வேண்டும் என்கிறார்.
வானம் இடிந்து விழுவது போல இடி இடித்தால் என்ன?
பெரிய கடல் பொங்கி எழுந்தால் என்ன?
காட்டுத் தீப் பற்றி உடல் வெந்தால் என்ன?
ஊழிக் காற்றுப் போல சூறாவளி அடித்தால் என்ன?
(வெளியே ஏற்பட்ட அந்த ஆரவாரங்கள் என்னை ஒன்றும் செய்யா.) என் மனம் உயிருக்கு உயிரான மனசாட்சியுடன் (ஆத்மா) ஒன்றும் தியானத்தைச் செய்து கொண்டிருப்பேன்.
வான்நின்று இடிக்கில் என் மாகடல் பொங்கில்என்
கான்நின்று செந்தீக் கலந்துடன் வேகில்என்
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என்
நான்ஒன்றி நாதனை நாடுவேன் நானே. – பாடல் 2850, திருமந்திரம், (அறிஞர் ஞா. மாணிக்கவாசகன் உரை விளக்கம், பதினோராம் பதிப்பு, உமா பதிப்பகம்.)
கான் = காடு; சண்டம் = புயல், சூறாவளி; மாருதம் = காற்று
மதம் பிடித்த யானை துரத்தினால் என்ன?
கூர்மையான அம்பு உடலைத் துளைத்து இரு கூறாக அறுத்தால் என்ன? காட்டுப் புலிகள் சூழ்ந்தால் என்ன?
(இவை எல்லாம் என்னை ஒன்றும் அசைக்க முடியா.)
என் சிந்தையில் எம்பெருமான் வைத்திருக்கும் மனசாட்சியாகிய ஞானத்து உழவை நான் உழுது (தியானித்துக்) கொண்டிருப்பேன்.
ஆனை துரக்கில்என் அம்புஊடு அறுக்கில்என்
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என்
ஏனைப் பதியினில் எம்பெருமான் வைத்த
ஞானத்து உழவனை நான் உழுவேனே. - பாடல் 2851, திருமந்திரம், (அறிஞர் ஞா. மாணிக்கவாசகன் உரை விளக்கம், பதினோராம் பதிப்பு, உமா பதிப்பகம்.)
இஃதே தியான யோகம்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Opmerkingen