அன்பிற்கினியவர்களுக்கு:
புறத்திலே சூறாவளி அடித்தாலும் அகத்திலே அமைதி இருக்க வேண்டும். இதற்குப் பயிற்சி செய்ய வேண்டும். அஃதே தியான யோகம்.
பரமாத்மா மேலும் தொடர்கிறார்:
ஆசைகளின் பின் செல்லத் தூண்டும் தீர்மானங்களை (சங்கல்பம்) மொத்தமாக மனத்தால் ஒழித்து புலன களை தன் மட்டில் திரியாமல் தடுத்து உறுதியுடன் கூடிய புத்தியினால் மெல்ல மெல்ல அமைதியை நாட வேண்டும். மனசாட்சியுடன் ஒன்றி தவிர்க்க வேண்டிய சிந்தனைகளை ஒடுக்குக. – 6:24-25
அரிசியை நீரில் இட்டு வேக வைக்கும் பொழுது அப்போதைக்கு அப்போது வெந்துவிட்டதா என்று சோதித்துப் பார்ப்பது போல மனத்தின் சிந்தனைகளைச் சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளும் இது நடந்திடல் வேண்டும்.
விமானம் பறக்க ஆரம்பித்துவிட்டதே என்று எந்த விமானியும் எஞ்சினிற்குள் (Engine) செல்லும் பெட்ரோலை (Petrol) நிறுத்துவதில்லை! எரிபொருளை இட்டு எரித்துக் கொண்டு இருந்தால்தான் தொடர்ந்து பறக்கும். செல்ல வேண்டிய இடமும் சென்று சேரும்.
தியான முயற்சி என்பது ஒரு தொடர் நிகழ்வு.
பரமாத்மா தொடர்கிறார்:
ஒரு நிலையில்லாததும், எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டிருப்பதும் மனத்தின் இயல்பு. அதற்கு உரிய காரணிகளைக் கவனித்து நீக்க நீக்க அடங்கும். அவ்வாறு மீட்டு அமைதியுடன் மனசாட்சியுடன் ஒன்றும்படி செய்தல் வேண்டும். இவ்வாறு மனம் அமைதி பெறும் பொழுது இயற்கையோடு ஒன்றுதல் சாத்தியம். அவனுக்கு மன மகிழ்ச்சி திண்ணம். – 6:26-28
யோக முயற்சியால் சம நோக்குடன் இயற்கையோடு ஒன்றியவன் தன்னை எல்லாப் பொருள்களிலும், எல்லாப் பொருள்களிலும் தன்னையும் காண்பான். 6:29
யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி
தஸ்யாஹம் ந ப்ரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி – 6:30
யஹ = எவன்; மாம் = என்னை (இயற்கையை); ஸர்வத்ர = எங்கும்; மயி = என்னிடத்தில்; ஸர்வம் ச = எல்லாவற்றையும்; பச்யதி = காண்கிறானோ; தஸ்ய = அவனுக்கு; அஹம் = நான்; ந ப்ரணச்யாமி = காணாமற் போவதில்லை; ஸ ச = அவனும்; மே = எனக்குக்; ந ப்ரணச்யதி = என் பார்வையைவிட்டு விலகுவதுமில்லை.
எவன் என்னை (இயற்கையை) எங்கும், என்னிடத்தில் எல்லாவற்றையும் காண்கிறானோ, அவனுக்கு நான் காணாமற் போவதில்லை; அவனும் என் பார்வையைவிட்டு விலகுவதுமில்லை. – 6:30
நாளைச் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments