அன்பிற்கினியவர்களுக்கு:
பல அருளாளர்கள் இறைவனைக் குறித்துப் பாடும் பொழுது “எல்லாம் நீ” என்று சொல்வது இயல்பு.
மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். – பாடல் 8, சிவவாக்கியர் பாடல்கள்
பகவத்கீதையினுள் பகவானே அவன் எவ்வாறானவன் என்று அவனே சொல்வதுபோல அமைத்துள்ளார்கள்.
விபூதி யோகமென்னும் அத்தியாயத்தைத் தொடர்ந்து விசுவரூப தரிசன யோகம் என்னும் பதினோராம் அத்தியாயம் அமைந்துள்ளது.
பல விபூதிகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றைக் காட்சிப்படுத்த முடியுமா என்கிறான். அவனின் ஐயப்பாடுகள் அவனை விட்டு அகலுவதில்லை!
அர்ஜுனன் சொல்கிறான்:
என் மீது அருள் பூண்டு, ஆத்ம ஞானமென்னும் இரகசியத்தை நீ சொல்லக் கேட்டு என்னுடைய மயக்கம் தீர்ந்தது. தாமரைக் கண்ணா, உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் உன்னிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். அழிவில்லாத உன் மகத்துவத்துவத்தையும் கேட்டேன். – 11:1-2
பரமேசுவரா, எவ்வன்ணம் உன்னை நீ வர்ணித்தாயோ அவ்வண்ணமே நான் உன்னை அறிந்தேன். எனினும், புருஷோத்தமா உன்னுடைய அந்த அரும் பெரும் வடிவங்களைக் காண விரும்புகிறேன். அவற்றை என்னால் காண முடியும் என்று நினைத்தாயானால் நீ எனக்கு அழிவில்லாத உன் வடிவங்களைக் காட்டு. – 11:3-4
(வினாக்களைத் தொடுக்கும் முறையினைக் கவனிக்க)
பகவான் சொல்லுகிறான்:
பார்த்தா, என்னுடைய தெய்வத்தன்மைகள் பல வகை; பல நிறம்; பல வடிவம். மேலும், அவை பல நூறு; பல்லாயிரக் கணக்காக விரியும். அவற்றைப் பார். – 11:5
ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; உருத்திரர்களையும் அசுவினி தேவர்களையும் பார்; மருந்துகளைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத ஆச்சரியங்கள் பலவற்றைப் பார். – 11:6
(ஆதித்யர்கள் என்றால் பழங்காலத் தேவர்கள்; வசுக்கள் என்பார் நெருப்புடன் தொடர்புடைய தேவர்கள்; ருத்திரர்கள் என்பார் துன்பத்தைத் துடைக்கும் கடவுளர்கள். அசுவினி தேவர்கள் மருத்துவம் சம்பந்தப்பட்டவர்கள்.)
அர்ஜுனா, அசையும் அசையா அனைத்துப் பொருள்களையும் என் உடலில் காண். இன்னும் வேறு என்ன காண நினைக்கிறாயோ அவற்றையும் இங்கே காண். – 11:7
உன்னுடைய ஊனக் கண்களால் என் வடிவங்களைக் காண இயலா. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். அவற்றால் என்னுடைய பன்மையைப் பார். – 11:8
சஞ்சயன் சொல்லுகிறான்:
அரசனே, இவ்வாறு பகவான் உரைத்துவிட்ட பிறகு பார்த்தனுக்கு தம் அரும் பெரும் உருவினைக் காட்டினான். – 11:9
அவ்வடிவம், பல முகங்களும், பல விழிகளுமுடையது; அற்புதங்கள் நிறைந்தது; பல் வகை ஆபரணங்களையும் ஆயுதங்களையும் தாங்கி நின்ற வடிவம் அது. திவ்ய மாலைகளும் ஆடைகளையும் புனைந்தது. ஆச்சரியங்கள் நிறைந்தது; ஒளிமயமானத் தோற்றமுடன் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நின்ற தோற்றமது. – 11:10-11
வானத்தில் ஆயிரம் சூரியன் உதித்தால் எப்படி ஒளி வெள்ளத்தில் மூழ்குமோ அங்கனம் அவனின் ஒளிக்கு நிகராகக் கூறலாம். – 11:12
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments