அன்பிற்கினியவர்களுக்கு:
பார்த்தா, எல்லா உயிர்களையும் ஒன்று போல் பாவித்துத் தொழுவோன் இயற்கையோடு ஒன்றியவன். இன்பமாயினும், துன்பமாயினும் சம நோக்குடன் கூடியவன் பரம யோகி. – 6:31-32
… கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவாய் விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே … மகாகவி பாரதியின் பாடலை முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். காண்க 02/11/2024, பகவத்கீதை, பகுதி 78
அர்ஜுனனுக்கு கேள்வி எழுகிறது:
மதுசூதனா, எனக்கு என்னமோ சம நிலையில் மனத்தைக் கட்டுவது இயலாது என்றே தோன்றுகிறது. மனத்தின் இயல்பு அலைபாய்வது; அது கீழ் நோக்கியே பாயும்; எது எளிதோ அதனையே பின் பற்றும்; அதனைக் கட்டுதல் காற்றினைக் கட்டும் கடும் முயற்சியைப் போலவே எனக்குத் தோன்றுகிறது. – 6:33-34
பரமாத்மா பதில் சொல்கிறார்.
அர்ஜுனா மனம் கட்டுக்கடங்காததுதான். அதனை நானும் அறிவேன். ஆனால், (தக்க கருவிகளையும், கொள்கலன்களையும் கொண்டு) பயிற்சியால், காற்றினைக் கட்டலாம். மனமும் அவ்வாறே. தன்னைத் தான் கட்டாதவன் எதனைக் கட்டுப்படுத்த இயலும். தன்னை அறிந்தவன், தன்னைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவன், மனத்தைக் கட்டுவது கைக்கூடும். – 6:35-36
அர்ஜுனன் அடுத்து ஒரு தொடர் கேள்வியை வைக்கிறான்:
கண்ணா நீ சொல்வது எல்லாம் சரி. ஒருவன் தியான யோகத்தைக் கடை பிடிக்க முயல்கிறான். அவனின் முயற்சி முழுமை அடையாமல் தடைபடுகிறது. அவனால் முற்றாக முழு பயனும் பெற இயலாமல் போகின்றது. இப்பொழுது அவன் என்ன கதிக்கு ஆளாவான். இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருப்பானா? சூல் கொண்ட முழு மேகம் மழையைக் கொடுக்கும். அவ்வாறில்லாமல் மழை பொழியும் வலுவில்லா மேகம் உடைந்தாற்போல் அழிந்துபடுவானா? எனக்குள்ள இந்த ஐயத்தைத் தயை கூர்ந்து தெளிவாக்கு. உன்னையன்றி யாரால் இந்த ஐயத்தைப் போக்க இயலும் என்கிறான். – 6:37-39
பார்த்தா, தியானப் பயிற்சி என்பது எந்த அளவிற்கு முயல்கிறோமோ அந்த அளவிற்குப் பயனளிப்பது. அவனின் நிலைக்கு ஏற்றார் போல் தெளிவு பெறுவான். இந்தப் பயிற்சியால் தீங்கு ஒன்றும் நிகழாது. அவனின் எண்ண ஓட்டங்கள் அடுத்த அடுத்த நிலைக்குத் தாவும். (Reference points keep shifting) அந்த நிலைக்கு ஏற்றார்போல் தெளிவு பிறக்கும். விட்டதைப் பிடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். இது ஒரு தொடர் முயற்சி. அவன் எப்பொழுதும் தோற்பதில்லை! வெற்றி நிச்சயம். இன்று இல்லையென்றால் நாளை. அவ்வளவே. 6:40-45
(நூலறுந்த பட்டம் வெகு தூரம் பறப்பதற்குள் தாவிப் பிடித்திடல் வேண்டும். முயலாமைதான் தோல்விக்கு வழி வகுக்கும்.)
இந்த உலகைத் துறந்து தவம் செய்கிறேன் என்கிறார்களே அவர்களையெல்லாம்விட, வெற்றுப் படிப்பறிவு கொண்டவர்களைவிட, புலன் கள் சென்றவழி தம் செயல்களைச் செய்பவர்களைவிட, பற்றற்றுச் செயல்களைச் செய்ய வேண்டும் என்ற தியான யோகத்தில் ஈடுபட்டு இருக்கிறானே (இல்லறத்தான்) அவனே உயர்ந்தவன். ஆகையினால் அர்ஜுனா இந்த வகை யோகியாவாய். – 6:46
அடுத்து இந்த அத்தியாயத்தின் முடிவுரையாகப் பரமாத்மா சொல்கிறார்:
எவன் சிரத்தையுடன் (உள்ளமொன்றி மன உறுதியுடன்) இயற்கையுடன் (என்னுடன்) இயைந்து, உள்ளத்தால் இயற்கையைப் (என்னைப்) போற்றி செயல்களைச் செய்கின்றானோ அவன் யோகிகளூள் சிறந்தவன். அவனே யுக்தன் என்பது என்னுடைய முடிவான முடிவு. – 6:47
தியான யோகமென்னும் ஆறாம் அத்தியாயம் முற்றும்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments