அன்பிற்கினியவர்களுக்கு:
உலகின் பலதரப்பட்ட பரிணாமங்களை பரந்தாமனின் அந்த விரிந்த மேனியில் ஒன்றாகக் காண்கிறான் பாண்டவன் என்னும் அர்ஜுனன். அவன் மிகவும் வியப்படைந்து மகிழ்ந்து மனம் மொழி மெய்களால் வணங்கிச் சொல்லத் தொடங்குகிறான், - 11:13-14
அர்ஜுனன் சொல்லுகிறான்:
தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன்; அவ்வாறே பல்வகை உயிர்த் தொகுதிகளையும் காண்கிறேன்; தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரம்மனையும் எல்லா ரிஷிகளையும் தேவப் பாம்புகளையும் காண்கிறேன். – 11:15
உலகிற்கிறைவா, நீயே பெரும் வடிவினன்; பல தோளும், பல வயிறும், பல வாயும், பல கண்களினையும் நின்னுள்ளே தாங்கி எல்லையில்லா உருவத்தினனாய் நின்னை எவ்விடத்தும் காண்கிறேன். உனக்கு முடிவு இது, தொடக்கம் இது, இடை இது என என்னால் பகுத்துக் காண முடியவில்லை. – 11:16
மகுடம் தரித்துக் கதை, சக்கரம் உள்ளிட்டவைகளைத் தாங்கி ஒளிப்பிழம்பாய்க் காணுதற்குக் கூசுமளவிற்குக் கொழுந்து விட்டெரியும் தீயினைப் போலவும், சூரியனைப் போலவும் அளவிடற்கரியதாய் நின்னை காண்கிறேன். – 11:17
நீ அழிவற்றவன், அறிதற்கரிய பரம் பொருள், நீ இவ்வுலகின் உறையுள், நீ மாறுபாடில்லாதவன், என்றும் நிலைத்து இருக்கும் தர்மத்தின் தலைவன், நீ தோற்றமில்லாத அந்த ஆதி புருஷன் என்பது என் துணிபு. – 11:18
(இந்தப் பாடலில் “ஸநாதனஹ புருஷஹ” என்ற சொல் பிரயோகம் காணக் கிடைக்கிறது. இந்தத் தொடருக்கு அறிஞர் அண்ணா சுப்பிரமணியம் அவர்கள் “ஆதி புருஷன்” என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.)
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாட …” என்று பாடுகிறார் மாணிக்க வாசகர் பெருமான் திருவெம்பாவையின் முதல் பாடலில்!
அதே போன்று அர்ஜுனனும் சொல்லுகிறான்:
ஆதியும், இடையும், அந்தமும் இல்லாதவனும் எல்லையில்லாச் சக்தி உடையவனும், கணக்கற்றத் தோளினைச் சந்திர சூரியர்களைக் கண்களாக, ஒளிவிடும் கனலை வாயாக, தன்னொளியால் இவ்வுலகை எரிப்பவனாகிய நின்னை அவ்வாறே காண்கிறேன். – 11:19
மகாத்மாவே வானுக்கும் மண்ணுக்கும் இடையே பரவி எல்லாத் திசைகளிலும் நின்னாலே நிறைந்துள்ளன. உன்னுடைய இந்த நீண்ட நெடிய கோபக் கனல் கக்கும் உருவத்தினைக் கண்டு மூவுலகமும் பயத்தால் நடுங்குகின்றது. – 11:20
தேவக் கூட்டங்கள் உன்னுள்ளே சரண் புகுகின்றனர்; சிலர் அஞ்சியவர்களாய் கரம் குவித்து உன்னைத் துதிக்கின்றனர். முனிவர்களும் சித்தர்களும் நின்னைப் புகழ்ந்து போற்றுகின்றனர். – 11:22
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments