அன்பிற்கினியவர்களுக்கு:
பெருந்தோளாய், பல முகங்களும் விழிகளும் பல கைகளும், பல கால்களும், பல வாய்களும், பல படு பயங்கரமான பல்களுமுடைய உன்னுடைய தோற்றத்தைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் அவ்வாறே. – 11:23
விஷ்ணுவே, வான் முகட்டைத் தொடும் ஒளி நிறைந்த தோற்றம் அதனிலும் பல வண்ணங்களின் கலவை, திறந்த வாய், கனல் வீசும் பெருங்கண்கள் இவற்றைப் பார்த்து நடுக்கமுறும் உள்ளத்தினனாகிய நான் தைரியத்தினையும் அமைதியையும் அடையமுடியவில்லை. – 11:24
அச்சமூட்டும் பற்களை உடைத்தாய், ஊழிக் கனல் போன்ற நின் முகத்தைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை, என் மனம் ஒரு நிலை கொள்ளாமல் நடுங்குகிறது. தேவர்க்கிறைவா, உலகத்திற்கு உறைவிடமானவனே அருள் செய்வாய். – 11:25
அரசாளும் மன்னரின் கூட்டங்களுடன் இந்த திருதராட்டிரனின் மக்களும், அவ்வாறே பீஷ்மரும், துரோணரும், சுதன் மகனாகிய கர்ணனும், நம் பக்கத்திலுள்ள வீரர்களும், கொடிய பற்களுடைய நின்னுடைய கோர வாயினுள் விரைவாக விழுந்து கொண்டுள்ளனர். அவர்கள் பற்களுக்கு இடையில் அகப்பட்டு பொடிப் பொடியாக போவதுபோலக் காண்கிறேன். பல ஆற்று வெள்ள நீர் கடலில் புகுவதனைப் போன்று இந்த வீரர்கள் விரைந்து நின் அனல் பொங்கும் வாயினில் வீழ்கின்றனர். அவ்வாறே, உலகத்து உயிர்களும் அழிவதற்கே உன் வாயினில் புகுகின்றன. – 11:26-29
அனல் கக்கும் வாயினால் உலகமனைத்தையும் விழுங்குகிறாய். எல்லாத் திசைகளிலும் உனது நாவு துளாவுகிறது. விஷ்ணுவே, உன்னுடைய கடுமையான கனல் பார்வையினால் உலகனைத்தும் எரிகின்றன. – 11:30
பயங்கரமான உருவமுடையோனே நீ யார்? எனக்குச் சொல். தேவ தேவா உன்னை வணங்குகிறேன். அருள் புரிவாய். நின் செயலை நான் அறிகிலேன். நின்னை அறிவதற்கு விரும்புகிறேன். – 11:32
அந்த மாபெரும் வடிவத்தினைக் கண்டு கலங்கிய மனத்தினனா அர்ஜுனன் பெரும் நடுக்கமும் கொள்கிறான். அவன் யார்? என்று வினவுகிறான்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios