அன்பிற்கினியவர்களுக்கு:
எச்சரிக்கை: பொறுமையாகப் படிப்பீர்களாக
மறுபடியும் கடவுள் வாழ்த்து (1) அதிகாரத்துக்குப் போகலாம் வாங்க. ஏற்கெனவே முதல் இரண்டு குறள்களைப் பார்த்துவிட்டோம். அடுத்த குறளுக்கு வந்துட்டேன்!
ஆனால், நான் இன்னும் அதற்கு வரவில்லை! என்ன குழப்பமா இருக்கேன்னு பார்க்கறீங்களா? நாம் நம்ம பேச்சு வழக்கிலே சீக்கிரமா வருவதற்கு ‘இதோ வந்துட்டேன்’ன்னு (இறந்த காலத்தில்) சொல்வதில்லையா அதனைத்தான் சொன்னேன்.
சரி, அந்தக் கதை இப்போ எதுக்குங்கறேன்? எதற்கு என்றால், ஒருவன் கடவுளின்பால் அன்பு கொண்டு நினைத்தால் அவன் நினைத்த மாத்திரத்தில் அவன் நினைத்த வடிவத்தில் கடவுள் அவன் மனத்தில் விரைந்து வந்து தோன்றிவிடுவானாம்! ‘வந்துட்டேன்’ என்பது போல (இதைத்தான் கடவுள் மறுப்பாளர்கள் மனச்சாட்சி என்பர்).
அந்த மனச்சான்றாக விளங்கும் கடவுளுடன் ஒன்றிவிட்டால் அவனின் செயல்களில் தூய்மை இருக்கும், நடுவு நிலைமை இருக்கும், பிழையற்ற அறவாழ்வு இருக்கும். அவன் நீடு வாழ்வானாம்! நான் சொல்லவில்லை, நம் வள்ளுவர் பெருந்தகை சொல்கிறார் இப்படி:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். - 3; - கடவுள் வாழ்த்து
சேர்தல் = இடைவிடாது நினைத்தல்; மாணடி சேர்ந்தார் = மாட்சிமை கொண்ட அடிகளை இடைவிடாது நினைப்பவர்களின்; மலர்மிசை ஏகினான் = பூப்போல இருக்கும் மனத்தின் கண்ணே(உள்ளக் கமலத்தின் கண்ணே); ஏகினான் = விரைந்து சென்று அடைவான்; நிலமிசை நீடுவாழ்வார் = (அவ்வாறு இடைவிடாது நினைப்பவர்கள்) எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகிலும் நீடு வாழ்வார்.
மாட்சிமை கொண்ட அடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் பூப்போல இருக்கும் மனத்தின் கண்ணே விரைந்து சென்று அடைவான். அவ்வாறு, இடைவிடாது நினைப்பவர்கள், எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகிலும் நீடு வாழ்வார். இந்த உலகில் நீடு வாழச் சாத்தியமில்லை என்பதனால் இந்த உலகை விட்டு நீங்கிய பின்பும் நீடுவாழ்வார். புகழ் வாழ்வு எய்துவர்.
மூன்று வழிகளில் வழிபடலாம். அஃதாவது மனம், மொழி, மெய்களால் வழிபடுவது.
இந்தக் குறளின் மூலம் மன வழிபாட்டைக் குறிக்கிறார்.
விரிக்க வேண்டியவை நிறைந்தது இப் பகுதி. காலத்தின் அருமை கருதி தற்போது தவிர்ப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
댓글