அன்பிற்கினியவர்களுக்கு:
ஆண்டாள் நாச்சியார் ஆண்டவனின் உள்ளத்தை உணர்ந்தபின் பாடல் 28 இல் இருந்துதான் வேறு பெயர் இட்டு அழைக்கிறாள். அதுவரை, அவனை உண்மையில் சிறுபேர் இட்டு அழைத்தாளா?
அவள் அதுகாறும் அழைத்த பெயர்கள் கீழ்க்காணுமாறு:
நந்தகோபன், நாராயணன், பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், ஆழி மழைக் கண்ணன், பத்மநாபன், மாயன், தாமோதரன், புள்ளரையன், அரி, வித்து, நாராயண மூர்த்தி, கேசவன், தேவாதி தேவன், மாமாயன், மாதவன், வைகுந்தன், முகில் வண்ணன், தென்னிலங்கை கோமான், புள்ளின்வாய்க் கீண்டான், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன், வல்லானைக் கொன்றான், மாற்றானை மாற்றழிக்க வல்லான், மணிவண்ணன், கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே, குலவிளக்கே, தோள் வலியன், விமலா, சீரிய சிங்கம், பூவண்ணன், நெருப்பென்ன நின்ற நெடுமாலே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையே …
என்றெல்லாம் அதுவரை (பாடல் 26 வரை) அவனை அழைத்து வந்தாள். இவைகள் சிறு பெயர்களா என்றால் இல்லை. மரியாதை குறைவான பெயர்களா என்றால் நிச்சயம் இல்லவே இல்லை. அனைத்தும் உயர்வான பெயர்களே! இருப்பினும் சிறு பெயர் என்றாள்!
என் நெஞ்சுக்கு நெருக்கமான நின்னைச் செல்லமாக அழைக்காமல் யாரோ வேற்று ஆள் போல ஏதேதோ பெயரிட்டு அழைத்துவிட்டேன், மன்னித்துவிடு “கோவிந்தா” என்கிறாள்!
கோவிந்தன் என்பது செல்லப் பெயர்! இதனை விட்டுவிட்டு எப்படியெல்லாமோ அழைத்தேனே என்கிறாள். கோவிந்தன் என்றால் பசுக்களின் தலைவன். பசு என்பது குறியீடு.
அர்ஜுனன் அவ்வாறில்லை. ஏ, நீ, போ என்றெல்லாம் மரியாதை குறைவாக அழைத்துவிட்டு அவனின் பரிமாணங்களைப் பார்த்தபின் அஞ்சி நடுங்குகிறான்! அரண்டு புரள்கிறான்!
உருவு கண்டு எள்ளாமை என்றார் நம் பேராசான் குறள் 667 இல். யாராக இருப்பினும் மரியாதையுடன் நடத்துவது மனிதப் பண்பு. மாற்றானாக இருப்பினும் நம்மை நாடிவரின் அவர்க்கும் அன்பு செய்தல் வேண்டும்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (Barack Obama) அவர்கள் பதவியில் இருந்த பொழுது, ஒரு விழாவில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அவர்களை மரியாதை குறைவாக நடத்திவிட்டார். அதனை மனத்தில் வைத்து அவர்களை வென்று அதிபரானார். இப்பொழுது, மீண்டும் அதிபராகியுள்ளார்.
ஒருவரைப் பொது வெளியில் மரியாதை குறைவாக நடத்துவதைப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, அதனைக் கண்ணுற்றவர்களும் சகிப்பதில்லை. நீங்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவீர்கள்.
உலக வரலாற்றின் நெடுகிலும் சான்றுகள் பல உள. சொல்லும் சொல்களில் கவனம் தேவை என்றுதான் அனைத்து இலக்கியங்களும் இயம்புகின்றன.
பகவத்கீதைக்குள் மீண்டும் நாளை நுழைவோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments