அன்பிற்கினியவர்களுக்கு:
அந்தப் பெரும் பயங்கரமான உருவத்தைக் கண்டு அஞ்சி நடுங்குறான் அர்ஜுனன். மீண்டும் பழைய உருவத்திலேயே தோன்றும்படி வேண்டுகிறான்.
ஒப்பற்றவனே, இந்த உலகிற்கு நீதான் தந்தை, நீ பெரியவர்களுக்கெல்லாம் பெரியவன், பூசிக்கத் தக்கவன், மூவுலகிலும் உனக்குச் சமமானவர்கள் யாவரும் இல்லை. உன்னைவிட உயர்ந்தோன் யாவர் இருக்க இயலும்? ஆகையினால், பூசிக்கத்தக்க என் தேவனே உன்னை நான் இதோ கீழே விழுந்து வணங்கி இறைஞ்சுகிறேன். பிள்ளையின் பிழையை தந்தை மன்னிப்பது போலவும், ஒரு நண்பன் செய்யும் பிழையை மற்றொரு நண்பன் போலவும், காதலியின் பிழையை காதலன் போலவும் பொறுத்தருள வேண்டும். – 11:43-44
என்றும் காணாத நின் உருவத்தைக் கண்டு ஒரு புறம் மகிழ்ச்சி இருப்பினும் மறுபுறம் பயமே மேலோங்குகிறது. எனவே, தேவா நினது முந்தைய உருவத்தையே எனக்குக் காட்டு. தேவதேவா, உலகின் உறைவிடமே கருணை செய்வாய். – 11:45
ஆயிரம் தோள்களையுடைவனே, உலகெங்கும் வியாபித்து இருப்பவனே, நீ முன்போலவே மகுடம் தாங்கி நான்கு கைகளுடன் தண்டம் சக்கரம் உள்ளிட்டவைகளை ஏந்தி காட்சி தருவாயாக! – 11:46
(கிருஷ்ணன், இந்த மகாபாரதத்தில் சராசரி மனிதனாகதான் இரு கைகளுடன் தோற்றம் தந்துள்ளான். அதுமட்டுமன்று, இந்தப் போரினில் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்றும் துரியோதனனுக்கு வாக்கும் தந்துள்ளான். இருப்பினும் அர்ஜுனன் ஏன் இவ்வாறு இறைஞ்சுகிறான்?)
பகவான் சொல்லுகிறான்:
அர்ஜுனா எனது அருளால் முன்னர் யாரும் கானாத ஒளிமயமானதும் விரிந்தும் பரந்தும் இருக்கும் எனது ஆத்ம வடிவம் உனக்குக் காண்பிக்கப்பட்டது. இந்தப் பேறு, வேதங்கள் ஓதுவதினாலும், வேள்விகள் பல இயற்றுவதனாலும், பலவித தான தருமங்களும் தவங்கள் செய்வதனாலும் ஒருவர்க்குக் கிடைக்காத பெரும் பேறு. இந்தக் கோர வடிவத்தினைக் கண்டு கலங்க வேண்டாம். இதோ, நீ விரும்பியபடியே என் முன்னை வடிவத்தினைக் காண்பாய். – 11:47-49
சஞ்சயன் சொல்லுகிறான்:
இப்படியாக அந்த பெரும் பயங்கர உருவத்தினைத் தவிர்த்து தமது முன்னை வடிவினைக் காட்டி அர்ஜுனனை ஆறுதல் கொள்ளச் செய்கிறான் கிருஷ்ணன். – 11:50
அர்ஜுனன் சொல்லுகிறான்:
ஜனார்த்தனா, நினது இந்த மனித வடிவத்தினைக் கண்டு அமைதி கொள்கிறேன். மனத் தெளிவினைப் பெற்றவனாய் இயல்பு நிலை எய்துகிறேன். – 11:51
பகவான் சொல்லுகிறான்:
என்னுடைய அந்த அரும் பெரும் உருவத்தினை நீ கண்டனை, அந்த உருவத்தினைக் காண தேவர்கள் விரும்பினாலும் அவர்கள் உன்னைப் போல் கண்டதில்லை. – 11:52
எவ்வாறு நீ கண்டனையோ அவ்வாறு நான் வேதங்களாலும் காண்பதற்கு அரியவன்; தவத்தாலும் அன்று; தானத்தாலும் அன்று; வேள்வியானாலும் அன்று. – 11:53
(முன்னரே இந்தச் செய்தியைச் சில பாடல்களுக்கு முன் அஃதாவது, பாடல் 11:48 இல் அப்படியே சொல்லியிருந்தார்.)
அர்ஜுனா, பெரும் வீரா, என்னை உண்மையில் அறிவதற்கும் காண்பதற்கும் என்னுடன் கூடுவதற்கும் தேவையானது என் மேல் எந்தவிதச் சிதறலும் இல்லாத பக்தி. – 11:54
எனக்கே பணி செய்பவனாகவும் எனக்கே கடமைபட்டவனாகவும், என்னையே அனைத்திலும் மேலானவனாக கருதுவதாலும் என்னிடமே பக்தி செய்வதனாலும் வேறு எவ்வுயிர்களிடமும் பற்று இல்லாமல் இருப்பவனும் எவனோ அவன் என்னையே அடைவான். – 11:55
இவ்வாறு இறுதியாகச் சொல்லி இந்த விசுவரூப தரிசனம் என்னும் பதினோராம் அத்தியாயத்தினை நிறைவு செய்கிறார்.
பதினோராம் அத்தியாயம் முற்றிற்று. மீண்டும் சந்திப்போம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments