top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

16/10/2024, பகவத்கீதை, பகுதி 62

அன்பிற்கினியவர்களுக்கு:

நான்காம் அத்தியாயம் சற்று வித்தியாசமானதாக உள்ளது. இந்த அத்தியாயத்தில்தான் நாம் முதலில் பார்த்த 13 ஆம் பாடல் உள்ளது. காண்க https://foxly.link/பகவத்கீதை_11.

 

பரவலாக அறியப்படும் “பரித்ராணாய ஸாதுனாம்…” என்று தொடங்கும் பாடலும் இந்த அத்தியாயத்தில்தான் அமைந்துள்ளது.

பல செய்திகளின் கலவையைப் பரமாத்மா தெரிவிப்பது போல உள்ளது இந்தப் பகுதி.


உள்ளது உள்ளபடியே உங்களுக்கு:

அர்ஜுனா, இந்தக் கருத்துகளை நான் முன்னர் விவஸ்வானுக்குச் (சூரியனுக்குச்) சொன்னேன்; அவன் அவற்றை மனுவிற்குச் சொன்னான்; மனு இக்ஷ்வாகுவிற்குச் சொன்னான்; இவ்வாறு பல காலம் இவை தொடர்ந்து பின்பற்றப்பட்டன. பின்னர் கால வெள்ளத்தால் இந்தக் கருத்துகள் மறைந்து போயின. நீ எனக்கு நண்பனாக இருப்பதனாலும், நீ இந்தக் கருத்துகளின் தொடர்ச்சியை எடுத்துச் செல்ல முடியும் என்பதனாலும் இந்த உயரிய கருத்துகளை உனக்குச் சொல்கிறேன். – 4:1-3


நம்மாளு: இந்தத் தொடர்ச்சியை எதனால் சொல்கிறார் என்று தெரியவில்லை. அர்ஜுனன் எந்தவிதச் சந்தேகமும் கொள்ளாத பொழுது பரமாத்மாவே சொல்ல காரணம் சரியாக விளங்கவில்லை.


அர்ஜுனனுக்கு உண்மையாகவே அந்த ஐயம் எழுகிறது. கிருஷ்ணன் எப்போது எங்கு பிறந்தான் என்பது அவனுக்குத் தெரியும். அப்படியென்றால் இவனுக்கு முன்னர் தோன்றியவர்களிடம் இவன் எப்படிச் சொல்லியிருக்க முடியும்? இதனைக் கேட்கிறான்.


அர்ஜுனன் கேட்கிறான்: பரந்தாமா, நீ எப்படி உனக்கு முன்னர் பிறந்தவர்களிடம் கூறியிருக்க முடியும்? – 4:4


அதற்குப் பரமாத்மா கீழ்க்காணுமாறு பதில் அளிக்கிறார்:

அர்ஜுனா, நான் பல பிறப்புகள் எடுத்திருக்கிறேன். நீயும் எடுத்திருக்கிறாய். ஆனால், அவை உனக்கு நினைவில் இல்லை! எனக்கு அந்தப் பிறப்புகளில் நான் செய்தவை இப்பொழுதும் கவனத்தில் இருக்கின்றன. எனக்குப் பிறப்புமில்லை; இறப்புமில்லை; எப்படியென்றால் நான் வெவ்வேறு வடிவங்கள் எடுக்கிறேன். எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்பொழுது நான் என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன். அறமற்றவர்களை அழிக்கவும் அறவழியில் நிற்பவர்களைக் காக்கவும் நான் தோன்றுகிறேன். – 4:5-8


இந்த எட்டாம் பாடல்தான் எல்லாராலும் அறியப்பட்ட பாடல்!

இதோ அந்தப் பாடல்:


பரித்ராணாய ஸாதுனாம் வினாஷாய ச துஷ்க்ருதம்

தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே – 4:8

ஸாதுனாம் பரித்ராணாய = சாதுக்களைக் காப்பதற்கும்; துஷ்க்ருதம் வினாஷாய ச = அறமற்றவர்களை அழிப்பதற்கும், மேலும்; தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய = தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்; யுகே யுகே ஸம்பவாமி = யுகங்கள் தோறும் வந்து உதிப்பேன்.


நல்லவற்களைக் காப்பதற்கும், அறமற்றவர்களை அழிப்பதற்கும், மேலும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், யுகங்கள் தோறும் வந்து உதிப்பேன். – 4:8

இது நிற்க.


உயிரியலில் (Biology) ஹோமியோஸ்டாஸிஸ் (Homeostasis) என்னும் ஒரு கருத்து உள்ளது. அது என்னவென்றால் உடலில் சமநிலையைப் பேண இயற்கையிலேயே ஒரு அமைப்பு (system) இருக்கும். அந்த அமைப்பு உடலில் எந்தக் கேடு வந்தாலும் (மிகினும் குறையினும்) அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும். அதிகமாக இருப்பதனைக் குறைக்கும்; குறைந்து உள்ளதை அதிகமாக்கும்.


சமநிலை தவறும்போது அந்த அமைப்பு வேலை செய்ய ஆரம்பிக்கும். சரியும் செய்யும்.


சரி அப்படி இருக்கும்போது நாம் ஏன் சமநிலை தவறுகிறோம். நோய்கள் பீடிக்கின்றன என்றால் அனைத்திற்கும் காரணம் நம் ஆசைகள்தாம். அதுமட்டுமன்று. அவை உடனே சரியாகிவிட வேண்டும் (Fast relief) என்ற பேராசையும் காரணம்.


ஆசைகள் மிகினும் குறையினும் நோய் செய்யும்!


இதனைப் போன்ற அமைப்பு இயற்கையிலும் உள்ளது. அந்தக் கருத்திற்குப் பெயர் சுற்றுச்சூழல் சமநிலை (Ecological balance). இயற்கை தம்மைத் தாமே தகவமைத்துக் கொள்ளும். அவ்வாறுதான் இந்த இயற்கை இத்தனைக் காலமும் இருந்து கொண்டே உள்ளது. எப்பொழுதும் இருக்கும்!


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்




 

4 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page