அன்பிற்கினியவர்களுக்கு:
காலமும் இடமும் எந்தக் குணப் படிநிலைகளில் உள்ளன என்பது ஒரு செயலைச் செய்து முடிக்க மிக முக்கியம். ஆங்கிலத்தில் Strike while the iron is hot என்பார்கள். தமிழில் “காலத்தே பயிர் செய்” என்பார்கள்.
இந்த முக்குணவடிவமான இயக்கம் சக்தி வாய்ந்தது. இதனைக் கடப்பது அரிது. இதற்கு மனத்தில் ஒருமை வேண்டும். ஒருமைக்கு மனம் தியானத்தில் ஈடுபட வேண்டும்.– 7:14
முக்குணங்களைக் கடக்க வடலூர் வள்ளல் பிரான் என்ன சொல்கிறார் என்றால்:
… ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் … வள்ளலார் பெருமான், திருவருட்பா
நல்ல சேர்க்கை இருந்தால் குணங்களில் மாற்றம்வரும். உன் நண்பர்களைச் சொல்; உன்னைப்பற்றிச் சொல்கிறேன்!
அறிவினைக் கொண்டு அனுபவங்களைப் பெறுவது எப்படி என்பது இந்த ஞான விஞ்ஞான யோகம் என்னும் அத்தியாயத்தின் ஒரு குறிக்கோள்.
இந்த முக்குணங்களைக் குறித்த இயற்கை விதிகளை அறியாதவர்கள் தவறுகள் இழைக்கிறார்கள். அந்தச் சுழலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
தீயச் செயல்களைச் செய்பவர்களும், உரிய அறிவினைப் பெறாமல் பயனற்று இருப்போரும் (நான் பொறுப்பில்லை என்னும்) மயக்கத்தினால் தம்மையே அழித்துக் கொள்ளும் செயல்களிலேயே மூழ்கி இருப்பவர்கள். (அவர்கள்) இயற்கை விதிகளைச் சிந்திப்பவர்கள் இல்லை. (என்னைச் சிந்திப்பதில்லை). – 7:15
வாழ்க்கையில் அடிபட்டவன்; அறிவுக் கொள்முதலில் நாட்டமுடையோன் (ஞானத்தைத் தேடுபவன்); செல்வத்தைத் தேடுபவன்; பற்றற்றுத் தம் கடமைகளைக் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று பயணித்துக் கொண்டிருக்கும் அறிவுடையவனும் இயற்கையின் (என்) பெருமையை அறிந்து வணங்குகிறான். இந்த நால்வருள் தம் கடமையை உணர்ந்து செயல்படுபவனே ஞானி. அவனே இயற்கைக்கு (எனக்கு) இயைந்தவன்; இயற்கை (நான்) விரும்புவதும் அவனைப் போன்றவர்களையே. – 7:16-17
மேலே சொன்ன நால் வகையினரையும் குறை சொல்ல இயலாது. அனைவருமே (மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் செயல்களைச் செய்கிறார்கள் என்ற வகையினில்) சிறந்தவர்கள்தாம்.
இவர்களுள் பற்றற்றுக் காரியங்களைச் செய்பவன்தான் உயர்ந்தவன் என்பது என் கருத்து. அவன் இன்னும் அடையவேண்டிய உயரம் ஏதுமில்லை! அவனே இயற்கையாகிறான். – 7:18
இந்த ஒரு வாழ்க்கையிலேயே பல வாழ்க்கையை வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இஃது அவர்களின் அனுபவங்களால் நிகழும். இவர்கள் மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் கொள்கையை அறிந்தவர்கள். “இவரா அவர்” என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.
உயரத்திற்கு உந்திச் செல்லாமல், தலை கீழாகவும் சில சமயம் நிகழும். “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்னும் அளவில் இருப்பார்கள். அவர்கள் விதி விலக்குகள்.
இந்தக் கருத்துகளை அடுத்த பாடலில் குறிக்கிறார்.
(வாழ்க்கையில்) பல பிறப்புகளை எடுக்கிறார்கள்; இறுதியில் உண்மைப் பொருளான இயற்கையைக் கண்டறிகிறார்கள். அவர்களே தலை சிறந்தவர்கள். அவர்களே மகாத்மாவாக பரிணமிக்கிறார்கள். இவர்கள் அரிதானவர்கள். – 7:19
கடமைகளைச் செய்து உயர்வோம்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments