top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

18/10/2024, பகவத்கீதை, பகுதி 64

அன்பிற்கினியவர்களுக்கு:

நான்காம் அத்தியாயத்தின் 13 ஆம் பாடல் நாம் பார்த்ததுதான்.

மீள்பார்வைக்காக:

சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகசஹ

தஸ்ய, கர்தாரம் அபி மாம் வித்தி அகர்தாரம் அவ்யயம் – 4:13


நான்கு வர்ணங்கள் எனது கண்டுபிடிப்பு; குணங்களையும் செயல்களையும் கொண்டு அவை பிரிக்கப்படுகின்றன; இவற்றினை நான் தான் கண்டுபிடித்தவன் என்றாலும் மாறுபாடில்லாத அந்த வேறுபாடுகளுக்கு நான் பொறுப்பாளி அல்லன் என்பதை அறி. – 4:13


செயல்களில் எனக்கு விருப்போ அல்லது வெறுப்போ இல்லை. அஃதாவது, பற்றில்லை. அதன் பலன்களாலும் நான் ஈர்க்கப்படுவதில்லை; இதனை அறிந்தவன் கர்மத் தளைகளால் சிக்கித் தவிக்கமாட்டான். – 4:14


(உனக்கு) முன்பு இருந்தவர்களில் பலர் மன அமைதியுடனே வாழ்ந்தனர்; உலகைவிட்டும் நீங்கினர். அத்தகைய சான்றோர்கள் எவ்வாறு செயல்களைச் செய்தார்களோ அவ்வாறே நீயும் பயணிப்பாய். – 4:15


விதித்தன எவை? விலக்கியன எவை? என்பதனில் அறிவுள்ளவர்களும் குழப்பம் அடைகின்றனர். அவற்றை உனக்குத் தெளிவாக்குவேன். – 4:16


(முதலில்) செயல்களின் இயல்புகள் தெரிய வேண்டும்; அச்செயல்களினால் வரும் கேடுகள் தெரிய வேண்டும்; (அவை மட்டுமல்ல) அந்தச் செயல்களைச் செய்யாமல் விட்டால் அவற்றின் விளைவுகளையும் தெரிந்திருக்க வேண்டும். – 4:17


நம்மாளு: குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி என்பார் வள்ளுவர் பெருந்தகை. காண்க https://foxly.link/easythirukkural_504.


Act of commission and omission என்று செயல்கள் இருவகைப்படும். இவ்விரண்டின் இயல்புகளும் தெரிந்திருக்க வேண்டும். காண்க https://foxly.link/easythirukkural_314.


பதறிய காரியம் சிதறும் என்பார்கள்.


Something is better than nothing என்பார்கள் ஆங்கிலத்தில்!


சும்மாயிருப்பதைவிட ஏதாவது செய்வது மேல் என்று பொருள்படும். மேம்போக்காகப் பார்த்தல் சரியான வாசகம் போல் தோன்றும்.


ஆனால், Nothing is better than nonsense என்பதனையும் அறிந்திருக்க வேண்டும். அஃதாவது, முட்டாள்தனமாகச் செய்வதனைவிட சும்மா இருப்பதே நலம் என்பதும் உணர்ந்து கொள்வது நலம் பயக்கும்.


பரமாத்மா தொடர்கிறார்:

செயலிலும் செயலின்மை இருக்கும்; செயலின்மையிலும் செயல் இருக்கும். இதனை அறிந்தவன் அறிவுடையவன். அவன் எப்பொழுதும் செயல்களில் மன அமைதியோடு ஒன்றியிருப்பான். அவனே யோகத்தில் இருப்பவன். – 4:18


யோகம் என்றால் பொருந்தியிருப்பது என்பதனை கவனத்தில் நிறுத்தவும்.

விருப்பு வெறுப்பில்லாமல் செயல்களைச் செய்பவனின் அறிவு ஞான வேள்வியில் புடம் போடப்பட்டது. அவனே ஞானவான். – 4:19


பற்றில்லாமலும், மன அமைதியுடனும், எவற்றின் மீதும் அதீத விருப்போ, வெறுப்போ கொள்ளாமல் செயல்களைச் செய்து கொண்டு இருந்தாலும் அவன் தன்மட்டில் செயலற்றவன். அஃதாவது சலமிலன். – 4:20


சலமிலன் என்றால் சஞ்சலத்திற்கு ஆட்படாதவன்.


அவா நீக்கி, உடலையும் உள்ளத்தினையும் தன் கட்டுக்குள் வைத்து தேவையான கடமைகளை மட்டும் நிகழ்த்திக்கொண்டிருப்பவன் ஒரு போதும் அறமற்ற செயல்களைச் செய்வதில்லை. – 4:21


வருவதனை ஏற்றுக்கொண்டு, அதனால் விளையும் இன்ப துன்பங்களை நடுவு நிலைமையொடு கடந்து, பொறாமையற்று, வெற்றி தோல்விகளைச் சமமாகப் பாவிப்பனைக் கருமத்தளைகள் தீண்டா. – 4:22


கடமைகளை வேள்விகளாகக் கருதி வேட்பவன் முழுமையடைகிறான். அவன் முடிக்க வேண்டிய செயல்கள் என்று ஏதும் இருக்காது. – 4:23


நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




3 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page