அன்பிற்கினியவர்களுக்கு:
இந்த ஞான விஞ்ஞான யோகம் என்னும் ஏழாம் அத்தியாயத்தை முடிக்கப் போகிறார்.
இந்த அத்தியாயம் அறிவும் செயலும் இணையும் பகுதி என்பதனைப் பல பாடல்களின் மூலம் விளக்கிக் கொண்டுவந்தார். அடுத்து முடிவுரையாக மூன்று பாடல்களைத் தொகுக்கிறார்.
ஒளியைக் கொண்டுதான் இருளை விரட்ட முடியும். இருளை விரட்ட இருளிடம் போராட முடியாது!
விருப்பு வெறுப்பின்றி தம் கடமைகளை ஆற்றுபவர்களும் இயற்கை விதிகளின் மேல் தீரா நம்பிக்கை உடையவர்களும் அவ்விதிகளைப் போற்றுவார்கள்; பின்பற்றுவார்கள். அவற்றை ஒட்டித் தம் செயல்களைத் தகவமைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மூப்புமில்லை; அவர்கள் அழிவதுமில்லை; தாம் செய்ய வேண்டிய செயல்களை அறிந்தவர்கள் அவர்களே. அதிபூதம் (பஞ்சபூதங்களின் கூட்டு), அதிதைவம் (இயற்கையின் இயல்பு), அதியக்ஞம் (செயல்களின் இயல்பு) ஆகிய மூன்றினை அறிந்தவர்கள் ஒருவழியாக இயற்கையோடு (என்னோடு) இணைகிறார்கள். – 7:28-30
முடிவுரையாக என்ன சொல்கிறார் என்றால் நீங்கள் பெற்ற அறிவினைக் கொண்டு செயல்களைச் செய்தால் அந்த அனுபவங்கள் உங்களை இயற்கையோடு இயைந்து செல்லும் இன்பத்தினை வழங்கும்.
செயல்கள் அதுதாம் முக்கியம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். செயல்களைச் செய்ய அறிவு அடிப்படை என்பதனையும் சொல்கிறார். அவ் அடிப்படை அறிவு மூன்று வகைப்படும். அவையாவன: 1. பஞ்ச பூதங்களின் கூட்டினால் ஏற்படும் குண வேறுபாடுகள்; 2. இயற்கையின் இயல்பு அல்லது விதிகள்; 3. செயல்களின் தன்மைகளும் அவற்றின் விளைவுகளும்.
ஞான விஞ்ஞான யோகமென்னும் ஏழாம் அத்தியாயம் முற்றிற்று.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments