அன்பிற்கினியவர்களுக்கு:
ஞான விஞ்ஞான யோகமென்னும் அத்தியாயத்தின் குறிப்பிடத்தக்க கருத்துகள்:
ஞானம் என்றால் அறிவு; விஞ்ஞானம் என்றால் அனுபவம்;
இயற்கையே (நானே) அனைத்துப் பொருள்களுக்கும் வித்து என்று அறி;
முக்குணங்களான சாத்விகம், இராசசம், தாமசம் இயற்கையே! உலகில் காணக் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் குணங்களின் கூட்டினால் உருவாவன என்று அறிந்து கொள்;
முக்குணங்களின் இழுப்பிற்கெல்லாம் ஆளாகி இந்த உலகம் மயங்கிக் கிடக்கிறது. இதன் பின்னால் உள்ள மாறுபாடில்லாத இயற்கை விதிகளை அறி. உன் செயல்களை வடிவமைக்கலாம்;
இயற்கை அறிவானது சென்றன, நின்றன, வருவன என அனைத்தையும் அறியும் ஆற்றல் கொண்டது;
அந்த அறிவினைக் கொண்டு செயல்களைச் செய்தால் அந்த அனுபவங்கள் உங்களை இயற்கையோடு இயைந்து செல்லும் இன்பத்தினை வழங்கும் என்றார்.
ஞான விஞ்ஞான யோகத்தைத் தொடர்ந்து அக்ஷரப்பிரம்ம யோகம் என்னும் எட்டாம் அத்தியாயத்தைச் சொல்லத் தொடங்குகிறார்.
க்ஷரம் என்றால் அழிவிற்கு ஆட்பட்டது என்று பொருள். அக்ஷரம் என்றால் அழிவில்லாதது; பிரம்மம் என்றால் உண்மையான உண்மைப் பொருள்; யோகம் என்றால் அந்தச் சிந்தனைகளுடன் பொருந்தி நிற்றல்.
அக்ஷரப்பிரம்ம யோகம் என்றால் அழிவில்லாத உண்மையான உண்மைப் பொருளைக் குறித்த சிந்தனைகள்.
இது நிற்க.
நம் சிந்தனையைப் பொதுப்படத் திருப்புவோம் சில நொடிகள்.
எது நிரந்தரமானது? நிலைத்து நிற்பது? காலம் கடந்தும் வாழ்வது எது?
புகழ் நிரந்தரமானதா?
நாம் வாழும் காலத்தில் புகழத் தயங்குவார்கள். மறைந்தபின் சிலர் புகழவும் கூடும். அதுவும் சில காலத்திற்குப் பின் மறந்தும் போகும், மறைந்தும் போகும். எனவே புகழும் நிரந்தரமில்லை!
வீர தீரச் செயல்களா?
எத்தனையோ சாதனையாளர்களை இந்தச் சரித்திரம் சந்தித்திருக்கிறது. அனைவரும் மக்களின் மனங்களில் நிலைத்து நீடித்திருப்பதில்லை. தமிழ் வீரத்தின் விளைநிலங்களென சேர சோழ பாண்டியர்களைக் குறிப்பிடுகிறோம். எத்தனை அரசர்களின் பெயர்கள் உங்களுக்கு நினைவிற்கு வருகின்றன? மிகவும் சொற்பம்.
அந்த அரசர்கள் கட்டிய மாட மாளிகைகளா, கூடக் கோபுரங்களா நிரந்தரமானவை?
அவற்றுள் எத்தனை இன்னும் காணக் கிடைக்கின்றன என்றால் மிகவும் குறைவு.
ஒரு அரசன் உருவாக்கியதை அடுத்த அரசன் அடியோடு அழித்து விடுகிறான். பழைய எச்சங்கள் எள்ளளவிற்கும் இருந்துவிடக் கூடாது என்பதில் பின்னால் வருபவன் கவனமாக இருக்கிறான். இருப்பினும் சில, சில காலம் தப்பிப் பிழைக்கலாம். அவற்றிற்கும் ஆயுள் காலம் என்ற ஒன்று உண்டு. எனவே அவையும் நிரந்தரமில்லை.
சாதி, சமயம், மதம் இவை நிரந்தரமானதா?
இல்லை. இவற்றுள் பல அழிகின்றன, மாற்றம் பெறுகின்றன, காணாமலும் போகின்றன! எனவே இவையும் நிரந்தரமில்லை!
கடவுளர்கள் என்று உருவம் அமைத்து வழிபடுகிறோமோ அந்தக் குறியீடுகளும் நிரந்தரமா என்றால் அவையும் நிரந்தரமில்லை. கற்காலத்தில் வழிபட்டுவந்தக் கடவுளர்கள் இப்பொழுது இல்லை!
அறுபத்து மூன்று நாயன்மார்களில் எத்தனை அருளாளர்களின் பெயர்கள் நமக்குத் தெரியும். சமயக் குரவர்கள் நால்வர் பெயரைச் சொல்வார்கள். இன்னும் சிலரைச் சொல்லலாம். அவ்வளவுதான். ஏன் மற்றவர்களின் பெயர் நம் மனத்திற்குள் நுழையவில்லை?
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இறுதியில் நிரந்தரம் என்று நாம் நினைக்கும் பலவும் நிரந்தரமில்லை.
எவைதாம் நிரந்தரம்? இந்தக் கேள்வி எழுகிறதா இல்லையா?
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント