top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

19/12/2024, பகவத்கீதை, பகுதி 125

அன்பிற்கினியவர்களுக்கு:

விருப்பு வெறுப்பற்ற வித்தகன் நான் என்றான் பாடல் 9:29 இல்! அவ்வாறு சொன்னதாலேயே உன் விருப்பம் போல நடந்து கொள்ளலாம் என்று நினையாதே!

 

என் நெஞ்சுக்கு நெருக்கமாக வேண்டும் என்றால் நீ உன்னளவில் ஒழுங்காக இரு என்பதனை பக்தி யோகத்தில் பலவாறு பட்டியலிட்டான். ஒழுக்கமாக இருந்து வணங்கு! நான் உன்னை வாழ்த்துவேன்! என்றான்.

 

ஒழுக்கமாக இருப்பின் எல்லா உயிரும் உன்னைத் தொழும்! இஃதே உண்மை.

 

நாம் அடுத்து க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகமென்னும் பதிமூன்றாம் அத்தியாயத்திற்குள் நுழைவோம்.

 

க்ஷேத்திரம் என்றால் உயிர் தங்கியிருக்கும் இடமாகிய உடல்; க்ஷேத்ரஜ்ஞன்  என்றால் அந்த இடத்தை அறிந்தவன்; விபாகம் என்றால் பிரிவு. எனவே இந்த உடலினைக் குறித்தும் அந்த உயிரினைக் குறித்தும் சிந்திக்கும் பகுதி க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்.

 

கீதாச்சாரியன் சொல்லுகிறான்:

இந்த உடல் க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது; இந்த உடலை அறிந்து இயங்கும் உயிரினை க்ஷேத்ரஜ்ஞன் என்று கூறுவர். – 13:1

 

அர்ஜுனா எல்லா உடலிலும் இருக்கும் உயிர் நானே என்று அறிவாய். உடலையும் உயிரையும் அறியும் அறிவே ஞானம் என்பது என் எண்ணம். - 13:2

 

உடல் என்பது என்ன? எவ்வகைப்பட்டது? எவ்வாறு மாறுபாடுகளுடைத்து? எதனிலிருந்து எது தோன்றிற்று? உயிர் என்பது யாது? இவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன். கேள்! – 13:3

 

இவை முனிவர்களால் பலவிதமாகப் பாடப் பெற்றுள்ளன.  இவை வேதங்களில் பல வழிகளில் தனித்தனியாகவும் பாடப் பெற்றுள்ளன. இவற்றை உறுதி செய்யும் விதமாக காரணங்களுடன் பிரம்ம சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன. – 13:4

அடுத்து வரும் பாடலில் ஆன்ம தத்துவத்தை சுருக்கமாகச் சொல்லுகிறார்.

 

அவற்றைப் பார்ப்பதற்கு முன் திருக்குறளில் உள்ளதைப் பார்ப்போம்.

 

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. - 27; - நீத்தார் பெருமை

 

இந்தக் குறளில் தத்துவங்களை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லிச் சென்றுள்ளார் நம் பேராசான் வள்ளுவப் பெருந்தகை.

 

அஃதாவது, ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். அது போல, நாம் அனுபவிக்கும் சுவைத்தல், பார்த்தல், தொடப்படுதல், கேட்டல், முகர்தல் ஆகிய அனுபவங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும். எதனால் அதனை உள்வாங்குகிறோம்? சருமம், நாக்கு, கண். மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களால் (இவை ஞானேந்திரியங்கள்). இவை போதுமா என்றால் போதா.

 

அவற்றிற்கு வாய், கை, கால், மலவாய், கருவாய் என ஐந்து தேவைகள் இருக்கின்றன (இவை கர்மேந்திரியங்கள்).

 

இவற்றிற்கு மேலும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கருவிகள் (அந்தக் கரணங்கள்) தேவைப்படுகின்றன. தானாக அனுபவிக்க முடியுமா?

 

அதற்குத் தேவை பஞ்ச பூதங்கள் என்று வழங்கப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பொருள்கள்.

 

இதுவரை 24 பொருள்கள் வந்துவிட்டன. இதை 24 நான்கு தத்துவங்கள் என்கிறார்கள். சாங்கியர்கள் இந்த இருபத்து நான்குடன் நிறுத்திக் கொண்டார்கள்.

 

சித்தத்தைப் "பிரகிருதி" என்றும் அழைப்பதுண்டு. எனவே தான், சித்தத்தை முதலாகக் கொண்ட இந்த இருபத்து நான்கு தத்துவங்களும் "பிரகிருதி மாயா தத்துவங்கள்" எனப்படுகின்றன.

 

இப்பிரகிருதியுடன் புருடனான ஆன்மா (வித்தியா தத்துவங்களுள் ஒன்று) இணையும் போதே, உடலும் உயிரும் செயலாற்ற ஆரம்பிக்கின்றது.

 

இந்த இருபத்து நான்கினைப் பெருக்கி சைவ சித்தாந்திகள் முப்பத்து ஆறு தத்துவங்கள் என்கிறார்கள். இவற்றையும் விரித்து தொன்னூற்று ஆறு என்பர்.

 

இவற்றை நல்ல ஆசிரியரை நாடி நாட்டமுள்ளவர்கள் தெளிக.

 

திருக்குறளில் சொல்லியுள்ளது போல இந்த வகைகளைத் தெரிந்து கொள்பவன்தான் க்ஷேத்ரஜ்ஞன் என்கிறார் பாடல் 13:5 இல்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





12 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page