அன்பிற்கினியவர்களுக்கு:
மனத்தினால் வழிபடுவது குறித்து மொத்தம் நான்கு குறள்களை அமைத்தவர் வாக்கு மற்றும் உடம்பினாலே செய்யும் வழிபாட்டிற்கு மொத்தம் மூன்று குறள்களை அமைத்துள்ளார். இதிலிருந்து மனவழிபாடு என்பது உயர்ந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், மனவழிபாடு எல்லார்க்கும் பொருந்துமா என்றால் பொருந்தாது. இதற்குதான், சைவ சமய மரபிலே (அசைவ உணவுக்கும் சைவ சமயத்திற்கும் சம்பந்தம் இல்லை. இதைப்பற்றி பிறகு பார்க்கலாம் ) நான்கு படி நிலைகளை வகுத்துள்ளார்கள். அவை யாவன: 1. சரியை; 2. கிரியை; 3. யோகம்; 4. ஞானம். படி என்றால் ஒவ்வொரு படியாக ஏறுவது இல்லை. (இந்த நான்கையும் மேலும் பகுப்பார்கள் – அதனை இப்போது தவிர்க்கலாம்). இது நான்கு பக்கம் இருக்கும் படிகள் போல. எந்தப் படியிலிருந்தும் இறைவனை அடையலாம்.
சரியை என்பது உடல் அளவிலே செய்யும் முயற்சி. சும்மா, ஒரு கோவிலைக் கடக்கும் போது தலையை ஒரு ஆட்டு ஆட்டிட்டு புத்தி போட்டுட்டுப் போகிறோமோ அது போல! இது ஒன்றும் தப்பில்லை. சிலர், கோவிலுக்கு உள்ளேபோய் ஒரு சுற்றுப் போட்டுட்டுப் போவான் அதுவும் சரியைதான்.
கிரியை என்பது சில வழிமுறைகளை அறிந்துகொண்டு அந்த வழிமுறைகளின் மூலம் வழிபடுவது. இது அடுத்த படி.
யோகம் என்பதற்கு எட்டு நிலைகள் இருக்குன்னு பதஞ்சலி முனிவர் கூறுகிறார். இதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து நம்மாளுங்க ‘யோகா’, ‘மாடர்ன் யோகா’ என்றெல்லாம் காசு பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
அது என்ன எட்டு நிலைகள் என்கிறீர்களா? இதோ, சுருக்கமாக: 1. இயமம் = செய்யக் கூடாதவற்றைச் செய்யாமல் இருக்க முயல்வது; 2. நியமம் = இயமம் கைவந்த பின் செய்ய வேண்டியதைச் செய்யப் பழகுவது; 3. ஆசனம் = இயமம், நியமம் கைகூடிய பின் பல நிலைகளில் சும்மா உட்கார்ந்து பழகுவது; 4. பிராணாயாமம் = மேலே சொன்ன மூன்றும் கைவரப்பெற்றவர்கள் மூச்சினைச் சீர் செய்ய முயல்வது. – இந்த நான்கும் ஆயத்த நிலைகள். இதெல்லாம் சரியாக வந்துவிட்டால் அடுத்து வரும் நான்கு நிலைகள்தாம் உண்மையான யோக முயற்சிகள்.
அடுத்த நிலை 5. பிரத்தியாகாரம் = மனத்திலே நல்ல எண்ணங்களும் வரும் அல்லனவும் வரும். அல்லவற்றை நல்லது கொண்டு மாற்றுவதுதான் பிரத்தியாகாரம். இருள் இருக்கிறது என்றால் இருளுடன் போராட முடியாது. அதற்குத் தீர்வு வெளிச்சத்தைக் கொண்டு வருவதுதான் அதனைப் போல. நல்லதை இட்டு அல்லதை ஒடுக்கப் பழக வேண்டும்; அடுத்தது 6. தாரணை = பல நல்ல எண்ணங்கள் பல் வேறு திசைகளில் செல்லும்; அதனையெல்லாம் ஒன்றுபடுத்தி ஓர் எண்ணமாக மாற்றும் பயிற்சி; 7. தியானம் = (இப்போதான் தியானமே ஆரம்பிக்கணும், நேராகவே தியானப் பயிற்சியை ஆரம்பிச்சுடறாங்க!) தியானம் என்பது எண்ணங்களை ஒன்று படுத்தினோம் அல்லவா அந்த எண்ணங்களிலேயே ரொம்ப நேரம் மனத்தில் வைத்திருக்கும் பயிற்சி; 8. சமாதி = அந்த எண்ணத்தையும் ஒடுக்குவதுதான் சமாதி ---
இப்படி ஆசிரியர் தொடர்ந்ததால் அவர் போக்கிலேயே விட்டுவிட்டேன்.
நாளைச் சந்திப்போம், நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments