அன்பிற்கினியவர்களுக்கு:
எவைதாம் நிரந்தரம்?
சுந்தரர் பெருமானும், திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களும், தெய்வச் சேக்கிழார் பெருமானும் இல்லை என்றால் அறுபத்து மூவர் என்னும் என்ணிக்கைகூட நமக்குக் கிடைத்திருக்காது. எப்படி இவர்கள் மட்டும் நீடித்து நிலைத்துக் காலம் கடந்தும் வாழ்கிறார்கள்?
இதுதான் முக்கியமாக நாம் சிந்திக்க வேண்டியது. இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொல்காப்பியம் இருக்கிறது. எனவே தொல்காப்பியர் இருக்கிறார். அதே போன்று திருக்குறளும் திருவள்ளுவரும்.
தலை சிறந்த உலக இலக்கிய வரிசை இருக்கும் அதனால் அவற்றை இயற்றியவர்கள் இருப்பார்கள்!
சமயக் குரவர்கள் பாடிச் சென்றுள்ளார்கள். வரலாற்றினப் பதிந்துச் சென்றுள்ளார்கள். இதுதான் முதல் குறிப்பு.
அந்த இலக்கியங்கள் இருப்பதனால் அந்த இலக்கியங்களில் குறிக்கப்பட்டவர்கள் பலரும், காலம் கடந்தும் நிரந்தரமாகக் காலம் தோறும் தோன்றும் மக்களின் எண்ண அலைகளில் நீந்திக் கொண்டிருக்கும் வாய்ப்பினையும் பெறுகிறார்கள்.
வல்லவர் வால்மீகி இல்லையென்றால் இராமாயணம் இல்லை; இலக்கிய வித்தகர் வியாசர் இல்லையென்றால் மகாபாரதம் இல்லை. இந்த இரு இதிகாசங்களும் இல்லையென்றால் அந்த இலக்கியங்களில் இருக்கும் பலரைத் தற்காலச் சமுகம் அறியும் வாய்ப்பு இருந்திருக்குமா என்றால் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
சங்கப் பாடல்கள் இல்லையென்றால் அன்று வாழ்ந்தவர்கள் மறக்கப்பட்டிருப்பார்கள். பதிவுகள் இல்லையென்றால் அழிவு நிச்சயம். அறிவின் தொடர்ச்சி இருக்காது. வளர்ச்சியும் இருக்காது.
பதிவுகளைச் செய்வதனில் கவனம் இருக்க வேண்டும்.
எது நிரந்தரமென்றால் எழுத்துகள்தாம் நிரந்தரம் இதுதான் இரண்டாம் குறிப்பு.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றால் 1,2,3, …, அ, ஆ, இ .., மற்றும் A,B,C … போன்றவைகள் என நாம் நினைத்தால் வள்ளுவப் பேராசான் சொன்ன மறை பொருளைத் தவறவிடுகிறோம் என்று பொருள்.
எண்ணங்களும் அவற்றினைச் சரியான முறையினில் பதிவு செய்ய எழுத்துகளும் கண் என்னும் குறிப்பினைப் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தும் பல வகை. விரித்தால் விரியும்.
அக்ஷரம் என்றால் எழுத்து என்றும் பொருள்படும். எழுத்துகள், அஃதாவது, பதிவுகள்தாம் நிலைக்கும். அவ்வாறு காலம் கடந்து நிற்கும் இலக்கியங்கள்தாம் நிரந்தரம்.
இரு வேறு கருத்துகள் (theses) இணைந்தே செல்லலாம்; முரணாக எதிரும் புதிருமாகவும் செல்லலாம் (Thesis and Anti-thesis). கருத்து மோதல்கள் இருக்கலாம்; தவறில்லை. இவை ஒரு புள்ளியில் இணையலாம் (Synthesis). புது முடிவுகள் (New Thesis) உருவாகலாம். இவை எல்லாம்தாம் வளர்ச்சியின் குறியீடுகள். அனைத்திற்கும் அடிப்படை எழுத்துகளும் அவற்றிற்கேற்றப் பதிவுகளும்தாம். இவைதாம் மானுட வளர்ச்சிக்கு நிரந்தரமாக இருக்கும். இருக்க வேண்டும்.
இந்தப் பகவத்கீதையையும் பதிந்து வைத்ததனால் நமக்குச் சிந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
காலமென்னும் சானைக் கல்லில் உரசிப்பார்த்து உயர்ந்தன என்னும் இலக்கியங்கள்தாம் நிரந்தரம். இவைதாம் என்றும் பேசும். இதுதான் முடிவாக மூன்றாம் குறிப்பு.
அக்ஷரப்பிரம்ம யோகமென்னும் சொல்லாடலை நான் இவ்வாறுதான் புரிந்து கொள்கிறேன்.
இருப்பினும் கீதாசாரியர் என்ன சொல்கிறார் என்பதனை நாளைப் பார்ப்போம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Opmerkingen