அன்பிற்கினியவர்களுக்கு:
இந்த அத்தியாயம் தத்துவப் பகுதி. உடல்-உயிர்-தோற்றம் உள்ளிட்டவைகளின் தத்துவ அலசலாக இருக்கலாம் என்பது என் எண்ணம்.
சரி, பாடல்களைப் பார்க்கலாம்.
மஹாபூதான்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச
இந்த்ரியாணி தசைகஞ் ச சேந்த்ரியகோசராஹா – 13:5
இச்ச்சா த்வேஷஹ ஸுகம் துக்கம் ஸங்க்காதச்சேதனா த்ருதிஹி ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேன ஸவிகாரமுதாஹ்ருதம். – 13:6
மகா பூதங்களும், அகங்காரமும், புத்தியும், அவ்வியக்தமும் (வெளிப்படையாகத் தோன்றாத பிரக்கிருதி), பதினோரு இந்திரியங்களும் ( கர்மேந்திரியங்கள் + ஞானேந்திரியங்கள் + மனம்), ஐந்து இந்திரிய தன் மாத்திரைகளாகிய கூறுபாடுகளால் (ஆக மொத்தம் 24) விருப்பு வெறுப்பு, இன்ப துன்ப நிலைக்களனாக இருக்கும் உடல் உயிர் என்னும் இத் தொகுதி கூறப்படும். – 13:5-6
இந்த இரு பாடல்கள் மூலம் உயிர்-உடல் குறித்த இருபத்து நான்கு தத்துவங்கள் சொல்லப்பட்டன.
இவற்றின் மூலம் செய்ய வேண்டியனவற்றை அடுத்து வரும் பாடல்களில் பட்டியலிடுகிறார். அஃதாவது, எவை ஞானம் என்று பட்டியலிடுகிறார். அவையாவன:
தற்பெருமையின்மை, ஆடம்பரமின்மை, அகிம்சை, பொறுமை, நேர்மை, பெரியாரைத் துணைக்கோடல், தூய்மை, விடா முயற்சி, தன்னடக்கம், புலன்களின் நுகர்ச்சியில் விருப்பின்மை, அகங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி, துன்பம் உள்ளிட்டவைகளின் இயைந்த காட்சி உடைமை – 13:7-8
பற்றின்மை, மக்கள், வீடு, சுற்றம் உள்ளிட்டவைகள் தம் உடைமை எனக் கருதாமை, தாம் விரும்பியனவும், தம் விருப்பத்திற்கு மாறானவற்றையும் ஒரு சேர பார்க்கும் சம நோக்கு – 13:9
தனிமையில் நாட்டம், மக்கள் கூட்டத்தின் இரைச்சலிலிருந்து விலகி நிற்றல், என்னிடம் எந்தச் சலனமும் இல்லாத மற்றும் பிறழாத பக்தி – 13:10
ஆத்ம ஞானத்தில் நிலை பெறுவதற்கு விடா முயற்சி, உண்மைப் பொருள்கள் குறித்த ஆராய்ச்சி ஆகிய இவையெல்லாம் ஞானம் எனப்படும். இவற்றினின்று வேறானவை அஞ்ஞானம் என வகைப்படும். – 13:11
எது அறியத்தக்கதோ, எதை அறிந்தால் சாகாத் தன்மையை அடைகின்றானோ அதை மேலே கூறுவேன். பிரம்மம் எனப்படுவது ஆதியில்லாதது, உயர்ந்தது. அதற்குத் தோற்றமும் இல்லை, அஃது, இல்லாமல் போவதும் இல்லை. – 13:12
அடுத்து வரும் பாடல்கள் தத்துவங்களாகவே விரிகின்றன!
அவற்றை ஏதேனும் ஒரு தத்துவ அடிப்படை புரிதல் இருந்தால்தான் புரிந்து கொள்ள இயலும் என்று எண்ணுகிறேன். ஏற்கெனவே, இருபத்து நான்கு தத்துவங்களை சாங்கிய மரபின்படி கீழிருந்து மேலாகப் பார்த்துள்ளோம். ஆனால் அதற்கும் மேலே உள்ள தத்துவங்களை விளங்கிக் கொள்ள அவை போதா.
என் நெஞ்சுக்கு நெருக்கமான தொலை நிலை ஆசான் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் முப்பத்து ஆறு சைவ தத்துவ விளக்கத்தினை ஐயா சொன்ன முறையிலும், அவற்றை நான் புரிந்து கொண்ட வகையிலும் பார்த்துவிட்டு இந்த அத்தியாயத்தைத் தொடருவோம். குறை இருப்பின் அவை எனக்கு; நிறை எல்லாம் என் ஆசானுக்கே.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments