அன்பிற்கினியவர்களுக்கு:
அர்ஜுனன் இந்த எட்டாம் அத்தியாத்தின் தொடக்கத்தில் சில கேள்விகளைக் கீதாசாரியனிடம் முன் வைக்கிறான்.
அர்ஜுன உவாச –
கிம் தத்-பிரம்ம கிம் அதியாத்மா கிம் கர்ம புருஷோத்தம
அதிபூதங் ச கிம் ப்ரோக்தம் அதிதைவம் கிம் உச்யதே. – 8:1
அர்ஜுன உவாச = அர்ஜுனன் கேட்டவை (சொன்னவை);
புருஷோத்தம = புருஷோத்மரே; ப்ரோக்தம் உச்யதே = முன்னர் கூறுயபடி; கிம் தத்-பிரம்ம = அந்த பிரம்மம் என்றால் என்ன?; கிம் அதி ஆத்மா = ஆத்மாவின் இயல்புகள் எவை?; கிம் கர்ம = கர்மம் என்றால் என்ன?; அதிபூதம் ச கிம் = பூதங்களின் இயல்புகளும் எவை?; அதிதைவம் கிம் = இயற்கையின் இயல்புகள் எவை?
புருஷோத்மரே, முன்னர் கூறுயபடி அந்த பிரம்மம் என்றால் என்ன?; ஆத்மாவின் இயல்புகள் எவை?; கர்மம் என்றால் என்ன?; பூதங்களின் இயல்புகளும் எவை?; இயற்கையின் இயல்புகள் எவை? – 8:1
அதியஜ்ஞஹ கதங் கோத்ர தேஹேஸ்மின் மதுசூதன
ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோஸி நியதாத்மபிஹி – 8:2
மதுசூதன = மதுசூதனா; அத்ர = இங்கு; அஸ்மின் தேஹே = இந்தப் பிறப்பில்; அதியஜ்ஞம் கஹ கதம் = செயல்களின் தன்மைகளும் அவற்றின் விளைவுகளும் எங்கனம் அமையும்?; ச பிரயாண காலே = மேலும் இந்தப் பிறப்பில் பயணிக்கும் பொழுது; நியதாத்மபிஹி = நன்மை தீமைகளை அறிந்தவர்கள்; ஜ்ஞேயஹ அஸி = இவ் இயற்கையை (உன்னை) அறிவது எப்படி?
மதுசூதனா, இங்கு, இந்தப் பிறப்பில், செயல்களின் தன்மைகளும் அவற்றின் விளைவுகளும் எங்கனம் அமையும்?; மேலும் இந்தப் பிறப்பில் பயணிக்கும் பொழுது, நன்மை தீமைகளை அறிந்தவர்கள் இவ் இயற்கையை (உன்னை) அறிவது எப்படி? – 8:2
இந்த வினாக்களுக்கு விடையாகப் பரமாத்மா அடுத்து வரும் பாடல்களில் சொல்லத் தொடங்குகிறார்.
அக்ஷரப் பிரம்மம் என்றால் அழிவில்லாத உண்மையான உண்மைப் பொருள். அதன் இயல்புகள் ஒவ்வொரு உயிரிலும் கலந்து இருக்கும். அஃதே அதியாத்மம் அல்லது ஆத்ம ஞானம்; இயக்கத்திற்குக் காரணமான செயல்கள் கர்மம் எனப்படும். – 8:3
அதிபூதம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டு. இக் கூட்டினால் பொருள்கள் தோன்றும், வளரும், பிரியும், மறையும், அழியும் தன்மைத்து. அதிதைவம் என்பது இயற்கையின் இயல்பு. அதியக்ஞம் என்பது செயல்களின் இயல்பு. – 8:4
தன் வாழ்நாள் உள்ளவரை இயற்கையின் இயல்புகளைச் சிந்தித்துச் செயலாற்றுபவன் எவனோ அவன் இயற்கையோடே ஒன்றிப் போகிறான். இதில் சிறிதும் ஐயமில்லை. அவ்வாறில்லாமல் இருப்பவன் இவ்வுலகைவிட்டு மறையும் பொழுது வருத்தம் அடைகிறான். ஆகையினால், இயற்கையோடு இயைந்தே உனது கடமைகளான களங்களை வெற்றி கொள். இடைவிடாது இந்த யோகப் பயிற்சியில் நிற்பவன் இயற்கையோடு இனிதாக இணைந்துவிடுகிறான். – 8:5-8
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments