அன்பிற்கினியவர்களுக்கு:
சைவ தத்துவங்கள் ஒரு அறிமுகம். எச்சரிக்கை: இஃது, மிகவும் கவனமாக உள்வாங்க வேண்டிய பகுதி.
பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமிகு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா முதலான என் அறிவு ஆசான்கள் அனைவரையும் என் மனம் மொழி மெய்களால் போற்றிப் பணிந்து தொடர்கிறேன்.
தத்துவங்கள் என்பன எப்பொழுதும் நிலையான பொருள்களைத் தேடிச் செல்லும். அறிவியலானாலும் சரி, ஆன்மிகமானாலும் சரி அவற்றின் குறிக்கோள் உண்மைப் பொருள்களைக் காண்பதே.
இந்த வகையினில் சைவ சித்தாந்திகள் நிலையான பொருள்கள் எவை, அவற்றின் வகையும் தொகையும் எங்கனம் என்ற தேடலில் இறங்கினார்கள்.
தோன்றிய பொருள்கள் மறையும் தன்மையுடையன என்பது அடிப்படை. நிலையான பொருள் என்றால் அழிவில்லாப் பொருள்.
இல்லது தோன்றாது; உள்ளது மறையாது என்பது சர்காரிய வாதம்.
அழிவில்லாப் பொருள் என்றால் அவை தோற்றமில் பொருள்கள். எனவே, அவற்றைத் தேடினார்கள்.
நேரடியாக சைவ சித்தாந்திகளின் முடிந்த முடிவிற்கு (Thesis) வந்துவிடுகிறேன். அவர்களின் தேடலில் கண்டறிந்த நிலையான பொருள்கள் மூன்று. அவையாவன: பதி, பசு, பாசம்.
பதி என்றால் இறைவன்; பசு என்றால் எண்ணற்ற உயிர்கள்; பாசம் என்றால் பதியையும் பசுவையும் இணைய விடாமல் கட்டி வைத்துள்ள கயிறு என்னும் சடப் பொருள்.
சடப் பொருள் என்றால் அறிவற்றப் பொருள். பதியும் பாசமும் அறிவுள்ள பொருள்.
பாசம் என்றாலே அதன் பொருள் கயிறு என்பதுதான்! பாசக்கயிறு என்கிறோமே அந்தச் சொலவடை நடுசெண்டர் போல! இது நிற்க.
இந்தப் பாசத்தை மலம் என்பார்கள். மலம் என்றால் அழுக்கு. அமலன், விமலன் என்றெல்லாம் பெயரிடுகிறார்களே அந்தப் பெயர்களின் பொருள் மலமற்றவன், அழுக்கற்றவன் என்று பொருள்படும்.
பதி, பசு, பாசம் என்ற மூன்றும் அநாதி காலம் தொட்டே உள்ள பொருள்கள் என்பது முடிபு. அப்பொழுது உயிர்களை இறைவன் படைக்கவில்லையா என்றால் ஆம் என்பதுதான் அவர்களின் ஆச்சரியமளிக்கும் விடை.
பசு மயங்கி மலத்துடன் கட்டுண்டு இருக்கிறது. உண்மையில் பதிக்கும் பசுவிற்கும்தான் இணைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டும்தாம் அறிவு தொடர்புடையன.
சரி. இந்த மயக்கம், இந்தத் தொடர்பு எப்பொழுது ஏற்பட்டது என்றால் இதுவும் அநாதி காலம் தொட்டே ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள்.
ஆதி என்றால் தொடக்கம். அநாதி என்றால் தொடக்கம் இல்லை. அவ்வளவே.
எப்பொழுதும் உயிரின் இயல்பு கீழ் நோக்கியே இருக்கும். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எல்லாரும் ஆசையை அறுத்த புத்தர்களே!
எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு ஒத்திகை பார்ப்பார்கள். அந்த விழாவினில் நானும் பட்டம் பெற்றேன். எப்படிதான் என் பெருமையைச் சொல்வது!
பட்டமளிப்பு விழா (Convocation ceremony) என்பது பல்கலைக்கழகங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் உச்சபட்ச நிகழ்வு. கட்டுக் கோப்பாக நிகழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு விழா. எனவே, ஒத்திகை என்பது மிக முக்கியம். ஒத்திகைகள் பல முறைகூட நிகழும்!
இந்த விழாவில்தான் தொகுப்பாளர் (MC – Master of ceremony or Compere) என்று ஒருவரும் இருக்கமாட்டார்கள். பல்கலையின் வேந்தர்தாம் எல்லாம். அவர்தாம் அந்த விழாவினை நடத்திச் செல்லல் வேண்டும். அவரோ அந்தப் பல்கலைக்கு வெளியில் இருந்துவருபவர்! மாணவர்களுக்கு அவர் அந்நியர்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments