top of page
Search

22/10/2024, பகவத்கீதை, பகுதி 68

அன்பிற்கினியவர்களுக்கு:

நான்காம் அத்தியாயமான ஞான கர்ம சந்நியாச யோகத்தின் சுருக்கம்:

நமக்கு எழும் ஐயங்களைப் போக்கிக் கொள்வது ஞானம்;


தன்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு செயல்களைச் செய்பவது கர்மம்;


அச்செயல்களின் மேலோ அவற்றின் விளைவுகளின் மேலோ உள்ள பற்றுகளை விடுவது சந்நியாசம்;


இவ்வழியிலியே பொருந்தி இருப்பது யோகம்.


இவ்வாறு இருப்பின் கர்மத் தளைகள் கட்டுப்படுத்தா.


இவ்வாறு பயணிக்க முதலில் செயல்களின் தன்மை தெரிந்திருக்க வேண்டும். செயலிலும் செயலின்மை இருக்கும்; செயலின்மையிலும் செயல் இருக்கும்.


கடமைகளை வேள்விகளாகக் கருதி வேட்பவன் முழுமையடைகிறான். வேள்விகளைப் பல வகையாகச் செய்யலாம். இவை அனைத்துமே செயல்கள்தாம் அடிப்படை. (ஆனால், இந்தச் செயல்களில் பற்று இருந்தால் பயனில்லை.) இதனை அறிந்து இவற்றில் இருந்து விடுபடுவாய்.

வேள்விகளைக் காட்டிலும் உன்னுடைய அறிவின் தெளிவில் உள்ள ஞானத்தைக் கொண்டு உன் கடமைகள் என்னும் வேள்வியினைச் செய்வாயாக. அதுவே சிறந்தது.


பணிவாலும், உன் அறிவு மிகுந்த கேள்விகளாலும், தன்னலமற்ற சேவைகளாலும் இந்த ஞானத்தை அறிந்து கொள்வாய். உனக்கு மெய்ப்பொருள் கண்ட சான்றோர்கள் துணை நிற்பார்கள்.


இந்த ஞானத்தைப் பெற்றால் உன்னில் மயக்கம் இருக்காது. எல்லாமும் நீயாகக் காண்பாய். நீயே எல்லாமுமாக இருப்பாய். முழுமையடைவாய்.

சந்தேகத்தையே இயல்பாகக் கொண்டவன் அழிந்து போகிறான். எனவே அதனை அறிவென்னும் வாள் கொண்டு அறுத்து எறி. இந்த யோக நிலையிலே பொருந்தி செயல்களைச் செய்வாய்.


எழுமின்; விழிமின்; குறி சாரும்வரை நில்லாது செல்மின் என்றார் விவேகானந்தர் பெருமான்.


அர்ஜுனனக்குச் சொல்வது போல இல்லறத்தில் மயங்கி இருக்கும் நமக்குச் சொல்கிறார்.


அடுத்து வரும் அத்தியாயம்: சந்நியாச யோகம்.


நம் அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் வந்து விடுகிறது!


அது என்ன ஐயம்?

செயலைச் செய் என்கிறார். செயலில் செயலின்மையும் உண்டு என்கிறார். செய் என்கிறார்; செய்யாதே என்றும் சொல்கிறார்! ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று நினைக்கிறான்.


வரும் ஐயங்களை உடனுக்குடன் கேட்டுவிட்டால் நாம் ஒரு முறைதாம் முட்டாள்; கேட்காமல் விட்டாலோ நாம் எப்பொழுதும் முட்டாளாகவே இருப்போம்!


பரந்தாமா, எனக்கு ஒரு ஐயம் என்று கேள்வியை எழுப்புகிறான் அர்ஜுனன்.

கண்ணா, செயலின்மையைப் (துறவினைப்) புகழ்கிறாய்; செயலைச் செய் என்றும் முடுக்கிவிடுகிறாய். இவ்விரண்டில் எதனைப் பின்பற்றுவது என்பதனைத் தெளிவுபடுத்து. – 5:1


இது நிற்க. பொதுப்படையான செய்திகளைப் பார்த்துவிட்டு பரமாத்மாவிற்குச் செவி சாய்ப்போம்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





 

5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page