top of page
Search

22/11/2024, பகவத்கீதை, பகுதி 98

அன்பிற்கினியவர்களுக்கு:

மனத்தினை புருவ மத்தியில் நிறுத்தி உண்மைப் பொருளைக் குறித்துத் தியானம் செய்யச் செய்யத் தெளிவும் மனம் அமைதியும் கிடைக்கும். – 8:9-10

 

அனைத்து அருளாளர்களும் புருவ மத்தி என்னும் புள்ளியைக் குறிக்கிறார்கள்.

 

அது ஏன் புருவ மத்தி?

அது எப்படிப் புருவ மத்தியைப் பார்ப்பது என்கிறீர்களா?

 

ஒரு இடத்தில், கண்களை மூடாமல், நேராக அமர்ந்து கொண்டு கண்களை மட்டும் சிறிது உயர்த்தி விட்டத்தைப் பாருங்கள். தலையை உயர்த்தக் கூடாது. அப்படிப் பார்க்கும் பொழுது, தானாகவே உங்கள் மூச்சு சீராகும், நிதானமாகும். இப்பொழுது கண்களை மூடிக் கொள்ளலாம் என்று தோன்றும். அப்பொழுது, அப்படியே, மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டே அந்த விட்டத்திலேயே பார்வை இருப்பது போலப் பாவனையில் இருங்கள். நீங்கள் இப்பொழுது புருவ மத்தியைத்தான் பார்க்கிறீர்கள்.

 

அதற்காக கடுமையான முயற்சி தேவையில்லை. இதுதான் மிக முக்கியமானது: எதனையும் வலிந்து செய்யாதீர்கள். தியானத்திற்கு மென்மை முக்கியம். கண்களை மூடிக் கொண்ட பிறகு அந்தத் தியானத்தில் உங்களுக்குத் தேவையான எண்ணங்களைப் பாருங்கள் என்றார் என் ஆசிரியர். தியானம் முடிந்து கண்களைத் திறந்து பார்க்கும் பொழுது உங்கள் தலை தரையை நோக்கித் தாழ்ந்திருக்கலாம். தவறில்லை!

 

தியானத்தில் மனம் ஒருமைப்பட இன்னுமொரு வழியையும் சொன்னார். கண்களை மூடிக் கொண்டபின் மெதுவாக மனத்திற்குள் ஐநூறிலிருந்து ஒன்றுவரை, நூறிலிருந்து ஒன்றுவரை, அல்லது ஐம்பதிலிருந்து ஒன்று வரை, அல்லது ஏதோ ஒரு பெரிய எண்ணிலிருந்து ஒன்றுவரை சொல்லுங்கள்.

 

சரியாகச் சொல்ல வேண்டும் என்று முயலாதிர்கள். சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த எண்ணிக்கை மறைந்துவிடும். சில சமயம் மறந்தும்விடும். அந்த நொடிதான் மனம் ஒருமைப்படும் நொடி. அந்த நொடியில் அப்படியே இருக்க முயலுங்கள் என்றும் சொன்னார். இந்த நொடியைப் பயிற்சியால் நீட்டலாம் என்றார். முயன்றுதான் பாருங்களேன். எந்தப் பயிற்சியும் வீண் போவதில்லை என்று பரமாத்மாவே சொல்லியிருக்கிறார்.

 

ஒரு படி மேலே சென்று, நம் திருவள்ளுவர் பெருமானும் அல்லவா சொல்லியிருக்கிறார்! தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும் என்றாரே அதனை நினைவில் வையுங்கள்.

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 


 

3 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page