அன்பிற்கினியவர்களுக்கு:
ஒத்திகைக்கு வருவோம். இஃது உள்ளரங்கில் நிகழ்ந்த நிகழ்வு. அந்த ஒத்திகை மும்முரமாக நிகழ்ந்து கொண்டுள்ளது. முக்கியமான ஒரு கட்டம். பட்டம் பெறுவோரை வேந்தர் அழைக்கும் தருணம். அப்பொழுது பார்த்து மின்சாரம் தடைபட்டுவிட்டது.
ஒரே இருட்டு. அவ்வளவுதான் எங்களிடையே இருந்து விசில் சத்தமும் பல் வேறு இரகமான குரல்களும் எழும்பி அந்த அரங்கைப் பிளந்தன. எல்லார் கைகளில் இருந்த தாள்களும் அவையினில் பறக்க சில நொடிகளில் அரங்கம் அலங்கோலமாகிற்று. மின்சாரம் மீண்டும் வந்துவிட்டது.
அவர்களா இவர்கள் என்பது போல அனைவரும் அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தோம்!
வேந்தராகப் பொறுப்பேற்று ஒத்திகை நிகழ்த்திக் கொண்டிருந்த பேராசிரியர் சிரித்துக் கொண்டே எழுந்தார். மாணவர்களே, இந்த மின்சாரத் தடையும் ஓர் ஒத்திகைதான்!
அவர் பேச ஆரம்பித்தார். கணிரென்ற வென்கலக் குரல் அவருடையது.
“மாணவர்களே, நண்பர்களே, யாரும் கவனிக்காத பொழுதும் ஒருவர் என்ன செய்கிறாரோ அதுதான் அவரை உயர்த்தும்.
தனியாக நீங்கள் இருக்கும் பொழுது அஃதாவது யாரும் உங்களைப் பார்க்கமாட்டார்கள், உங்கள் செயலுக்குச் சாட்சியாக இருக்க மாட்டார்கள் என்னும் நிலையில் நீங்கள் எப்படிச் செயலாற்றுகிறீர்களோ அவைதாம் உண்மையான நீங்கள்!
யாரும் கவனிக்கவில்லை என்றவுடன் மனது கீழ்த்தரமாகச் செயல்படத் துணியும். அவ்வாறு செயல்படுபவர்கள் சாதாரணமானவர்கள். நீங்கள் அவர்கள் அல்லர்!
உங்கள் இருக்கையின் அருகில் இருக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு மீண்டும் அமருங்கள். மீண்டும் மின்சாரம் தடைபடும். நீங்கள் பட்டம் பெற்றவர்கள் என்பதனை எல்லார்க்கும் காட்டுங்கள். உயர்வு நிச்சயம்” என்றார்.
உங்களுக்குத் தெரிந்திருக்கும், இடமும் காலமும் நெருக்கடி என்னும் காரணத்தினால், நம் இந்தியப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் பட்டமளிக்கும் விழாவிற்கு அழைப்பதில்லை. அதில் பங்கு பெற வேண்டும் என்றால் அந்த மாணவர் ஏதேனும் ஒரு சிறப்புத் தகுதி பெற்று இருக்க வேண்டும். அமர்களம் செய்தார்களே அதுதான் அவர்களின் சிறப்புத் தகுதி! மனம் யாரையும் விட்டு வைக்காது.
பல ஆண்டு காலம் படித்துப் பெறாத அறிவை (ஞானத்தை) அந்தச் சில மணித்துளிகளில் ஏற்பட்ட பட்டறிவு அல்லது அனுபவம் (விஞ்ஞானம்) கற்றுத் தந்தது என்றால் மிகையில்லை. ஆகையினால்தான், ஞான விஞ்ஞான யோகம் என்னும் ஏழாம் அத்தியாயத்தில் ஞானத்தைவிட விஞ்ஞானம் சிறந்தது என்றார்.
உனக்கு இப்பொழுதெல்லாம் மனம் அலை பாயவில்லையா என்று கேட்கிறீர்களா? விடுமா மனம்? அது அதன் வேலையைச் செய்யும். கீழ் நோக்கிப் பாயும்! சில நொடிகள் சலனம் இருக்கும்! சில மணி நேரமாகக்கூட விரியும். நாள் கனக்கில்கூட இருக்கலாம். ஆண்டு கணக்கில்கூட இருக்கலாம். அந்தத் தருணங்களில் அந்த விழா கற்றுக் கொடுத்த பாடம் நினைவிற்கு வரும். வர வேண்டும்! அறுந்த பட்டத்தை உடனே தாவிப் பிடிக்கும் முயற்சிதான் வாழ்க்கை!
மனத்தின் போக்கை அதன் போக்கில் விட்டு விட்டு ஒரு பார்வையாளனாக மட்டும் ‘கம்’மென்று இருக்க வேண்டியதுதான்! அந்த மனம் அப்படியே அடுத்த எண்ணத்திற்குச் சென்றுவிடும். இஃதே என் தியானம்! என் இரகசியம் ஒன்றினை உங்களுடன் இப்பொழுது பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நான் யோக்கியனா என்றால் இல்லை. இல்லவே இல்லை!
ஏன் என்கிறிர்களா?
இப்பொழுதுதான் பாடல் 13:7 இல் தற்பெருமை பேசாதே என்றார். இருப்பினும் என் மனம் எங்கே கேட்கிறது? இதோ என் பெருமை என்றேனே! கவனித்தீர்களா? அதுதான் மனத்தின் இயல்பு. இது நிற்க.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments