அன்பிற்கினியவர்களுக்கு:
தியானம் செய்ய மனம் அமைதியாகும்; உண்மைப் பொருளைக் குறித்த தெளிவு பிறக்கும்.
மறை பொருள்களை உணர்ந்தவர்கள் எதனை அழிவில்லா உண்மைப் பொருள் என்று அறிகிறார்களோ, பற்றுகளைத் துறந்து தன் செயல்களைச் செய்பவர்கள் எங்கனம் மன அமைதி அடைகிறார்களோ, கற்கும் பருவத்தில் இருப்பவர்கள் எவற்றைக் கற்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார்களோ அவற்றை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன். – 8:11
புலன்களைக் கட்டுப்பாட்டில் இருத்தி, மன சாட்சிக்குக் கட்டுப்பட்டு மனத்தை ஒரு நிலையில் நிலை பெற செய்து, மூச்சுக் காற்றை நன்றாக மூளைக்குள் செலுத்தி “ஓம்” என்னும் ஒரெழுத்தினைத் தொடர்ந்து உள்ளூக்குள்ளே எழுப்ப எழுப்ப அவன் உடலைக் கடந்த அறிவினைக் காண்கிறான். - 8:12-13
அது என்ன ஓம்? அதற்கு என்ன சிறப்பு?
அந்த எழுத்து தமிழில் உள்ள ஒரு முக்கியமான எழுத்து. தமிழ் நெடுங்கணக்கினுள் குறிப்பிடப்படாத ஒரு கூட்டெழுத்து ஓம்.
(தமிழ் நெடுங்கணக்கு என்று 247 தமிழ் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்.)
ஓ என்ற நெடிலே ஒரு சிறப்பெழுத்துதான். அஃதே ஓம் என்கிறார் திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேய பாவாணர். அவரின் கருத்துகளை இன்னும் சிறிது நேரத்தில் பார்ப்போம்.
ஓ என்னும் ஓரெழுத்து பல பொருள்களைத் தரும் பண்பினைக் கொண்டது.
ஓம் என்பது ஒரு சிறப்பு எழுத்து. அகர உகர மகர கூட்டுதாம் ஓம். சங்கினை எடுத்துக் காதருகினில் வைத்தால் நம் காதுக்குள்ளே ஒரு ஒலி புலப்படும். சங்கு மட்டுமல்ல பானை, குடம் என்று எதனைக் காதருகினில் வைத்தாலும் ஒலியின் அதிர்வுகள் புலனாகும்.
அஃது, அந்த ஓம் என்னும் ஒலியைப் போல இருக்கும். அந்த ஒலி நம் காதுக்குள் இருந்து வருவதா அல்லது சங்கினில் இருந்து வருவதா என்பது ஆராயத்தக்கது! அந்த ஒலி எங்கும் இருப்பதுதான் உண்மை.
ஓலியானது வெற்றிடங்களில் இருந்து கொண்டே இருக்கும். அதனைக் குவிக்க ஒரு கருவி இருந்தால் அந்த ஒலிகளைப் பிரித்தறியலாம். சங்கும் ஒரு ஒலி பெருக்கிதான்.
அகரம் என்னும் எழுத்து வடிவம் ஒரு முக்கியமான முதிர்ந்த ஒரு வரி வடிவம் என்கிறார் கிருபானந்த வாரியார் சுவாமிகள். எதனையும் ஒரு வித்தியாசமான பார்வையில் பார்ப்பவர் அவர்.
அவர் என்ன சொல்கிறார் என்றால் அகர எழுத்தில் சுழி (circle), பிறை அல்லது வளைவுக் கோடு (crescent / curve), கிடைக் கோடு (Horizontal line), செங்குத்துக் கோடு (Vertical Line) என்று வரைகலைக்குத் (graphics) தேவையான அனைத்து மூலக்கூறுகளையும் (primitives) கொண்ட ஒரு சிறந்த வரி வடிவம் என்கிறார்.
அகரம் என்பது இயல்பாகத் தோன்றும் ஒலி என்பது நமக்குத் தெரியும். எனவே அந்த ஓசை “அகர முதல எழுத்து” என்று அனைத்து மொழிகளுக்கும் அகரம் முதல் (capital) போன்றது என்றார் நம் வள்ளுவர் பேராசான். அதே போன்று அனைத்து வரைகலைகளுக்கும் (graphics) அந்த அகர வரிவடிவம்தாம் முதல் (capital) என்றும் எடுத்துக் கொள்ளலாம்!
ஓம் என்ற கூட்டு எழுத்திற்கு வருவோம். திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேய பாவானர் அவர்கள் தமிழர் மதம் என்னும் நூலில் ஓம் குறித்துத் தம் ஆராய்ச்சியைப் பதிவிட்டுள்ளார், அவர் பதிவிட்டுள்ளது அப்படியே:
“… ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக உணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.”
“வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.”
மேலும், தமிழ் இலக்கியங்களில் இருந்து சான்றுகளைத் தருகிறார்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments