அன்பிற்கினியவர்களுக்கு:
துறவு என்பது இல்லறவியலின் நான்கு பருவங்களுள் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழும் வகையினில் உள்ளது.
இல்லறம் என்பது பிறப்பின் இயல்பு; இல்லறத்தைத் துறந்து துறவறம் என்பது சிறுபான்மை. துறவறத்தில் இருப்பவர்கட்கும் துணை நிற்பது இல்லறத்தில் இருப்போரே!
பரமாத்மா தொடர்கிறார்:
துறவறவியலும் (முற்றும் துறக்கும் முதல் நிலை சந்நியாசம்) இல்லறவியலும் (கர்மம்) இரண்டுமே உயர்வினைத் தரும். இவற்றுள் இல்லறவியலே இயல்பானது. அஃதாவது, சிறப்பானது. – 5:2
துறவி என்பதற்கு விளக்கம் அளிக்கிறார் பரமாத்மா. அந்த விளக்கத்தில் நான் புரிந்து கொண்டது:
மரவுரி தரித்து காடேகியவர்கள் துறவியா என்றால் இல்லையாம்!
காவி உடை அணிந்து கமண்டலம் ஏந்தியவர்களும் துறவிகள் இல்லையாம்!
நித்தம் நித்தம் தீ மூட்டி தியானங்கள் செய்வோரும் துறவிகளா என்றால் அவர்களும் இல்லையாம்!
அப்படி என்றால் யார் உண்மையான துறவி? எந்தச் செயலிலும் விருப்பு வெறுப்பு அற்றவன் துறவி என்கிறார். அஃதாவது பற்று அற்றவன் துறவி என்று அறி என்கிறார்.
அந்தப் பாடலைப் பார்ப்போம்:
ஜ்ஞேயஹ ஸ நித்யஸந்நியாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே – 5:3
யஹ = எவன்; ந த்வேஷ்டி = வெறுப்பற்றவனோ; ந காங்க்ஷதி = விருப்பும் அற்றவனோ; ஸஹ = அவன்; நித்யஸந்நியாஸீ = என்றும் துறவியே என; ஜ்ஞேயஹ = அறியத்தக்கவன்; மஹாபாஹோ = மகா விரனே; ஹி = நிச்சயமாக; நிர்த்வந்த்வஹ= இருள் சேர் இரு வினைகளினின்றும் விடுபட்டவன்; பந்தாத் ஸுகம் ப்ரமுச்யதே = கர்மத் தளைகளிலில் இருந்தும் எளிதில் விடுபடுகிறான்.
எவன் (செயல்களில்) வெறுப்பற்றவனோ விருப்பும் அற்றவனோ அவன் என்றும் துறவியே என அறியத்தக்கவன். மகா விரனே நிச்சயமாக (அவன்) இருள் சேர் இரு வினைகளினின்றும் விடுபட்டவன். கர்மத் தளைகளிலில் இருந்தும் எளிதில் விடுபடுகிறான். – 5:3
இல்லறத்தில் இருப்போரும் துறவிகள் ஆகலாம்! கர்மத் தளைகளைத் தவிர்க்கலாம். அவர்களே நித்ய சந்நியாசிகள் என்கிறார்.
நம்மாளு: ஐயா, கர்மத் தளைகள் என்றால் என்ன?
ஆசிரியர்: கர்மத் தளைகள் என்பன வேறு ஒன்றும் அல்ல. ஒரு செயலைச் செய்துவிட்டு அல்லது செய்யாமல் விட்டுவிட்டு பின்னர் அதற்காக வருந்துவதும், அங்கலாய்ப்பதும், தன்னைத்தானே தண்டித்துக் கொள்வதும் ஆகும்.
சிலர் அடுத்த பிறவியில் அனுபவிப்பீர்கள் என்பர்! இதனை நம்மால் நிச்சயாமாக உறுதிப் படுத்தமுடியாது!
ஆனால், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இந்தப் பிறப்பிலேயே விளையும்!
எங்கே பலருக்கு விளையவில்லையே என்று கேட்கலாம். விளைவது நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். உள்ளே இருக்கும் மனசாட்சி (ஆத்மா) அதனைப் பார்த்துக் கொள்ளும்.
இது நிற்க. செயல்களுக்கு வருவோம்.
செயலைச் செய்வதை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்.
ஒன்று (செய்ய வேண்டியது) - பற்றுகள் அற்றுச் செய்வது;
இரண்டு (செய்யக் கூடாதது) - பற்றுகள் அற்றுச் செய்வது என்பதாலேயே சிரத்தையின்றி செய்வது கூடாது.
ஒரு கருமத்தைச் (செயலை) செய்யத் துணிந்தால் அதனைத் திறம்பட செய்து முடிக்கும் வகையறிந்து செய்ய வேண்டும்.
இதனை நம் வள்ளுவப் பேராசான் குறள் 467 இல் மிகத் தெளிவாகச் சொல்கிறார். காண்க https://foxly.link/easythirukkural_467.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. - குறள் 467; அதிகாரம் – தெரிந்து செயல்வகை
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Komentáre