அன்பிற்கினியவர்களுக்கு:
திருவருட் பயன் என்னும் நூலில் இருந்து ஒரு பாடலைப் பார்ப்போம்.
உமாபதி சிவாச்சாரியர் பெருந்தகை இந்தப் பாடலில் என்ன சொல்கிறார் என்றால் அவன் தன்னை நாடாதவர்க்கு நன்மையைக் கொடுக்காதவன்; தன்னை நாடுபவர்க்கு இன்பத்தைக் கொடுப்பவன்; ஆனால், அவன் தம்மட்டில் விருப்பு வெறுப்பு அற்றவன்! அவன் பெயர்தான் சங்கரன்!
நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன். - பாடல் 9; திருவருட் பயன்
இது என்ன கதை?
நாடியவர்க்கு உதவுவானாம்; நாடாமல் இருந்தால் உதவ மாட்டானாம். ஆனால் விருப்பு வெறுப்பு அற்றவனாம்! நல்லா இருக்கே இந்தக் கதை என்கிறீர்களா?
எனக்கும் இஃதே ஐயப்பாடு! ஆசிரியர் என்ன சொன்னார் என்றால் இரவினில் தெரு விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருக்கிறதல்லவா? அதனை நெருங்க நெருங்க அந்த ஒளியினால் பயனுண்டு. விலகிச் செல்லச் செல்லப் பயனில்லை. ஆனால், அந்த விளக்கினைப் பொறுத்தவகையில் அது விருப்பு வெறுப்பு அற்றது என்றார்.
என்னுள்ளும் ஒரு விளக்கு எரிந்தது!
இதற்குதான் ஆசிரியர்கள்! அதுவும் நல்லாசிரியர்கள் வேண்டும் என்பது!
ஒரு நிலைக் கண்ணாடி இருக்கிறது. காலையில் கண் விழித்த உடன் அதனைப் பார்த்தால் நாம் தூங்கி வடிந்த முகம் தெரியும். பின்னர் நன்றாகக் குளித்து முடித்து அழகு படுத்திக் கொண்டு மீண்டும் அதே கண்ணாடியில் பார்த்தால் நம் முகமே அழகாகத் தெரியும். கண்ணாடி என்பது ஒன்றுதான். நம் பிம்பங்கள்தாம் அதில் தெரிவன. இஃதும் குறிப்பே! கண்ணாடி தம்மட்டில் சிவனே என்று இருக்கும்! அதற்கும் விருப்பு வெறுப்பு கிடையாது.
பதி தாமே இயங்கமாட்டார். அவரின் சந்நிதானத்தில் எல்லாம் நிகழும். சந்நிதானம் என்றால் அருகில் என்று பொருள்.
ஒரு வகுப்பில் இடைவெளி நேரம். ஒரே கூச்சல், குழப்பம். ஆசிரியர் உள்ளே சென்று தம் இருக்கையில் அமர்ந்து கொள்கிறார். மாணவர்கள் அனைவரும் தாமே ஒரு ஒழுங்குக்கு வருகிறார்கள். ஆசிரியர் எதுவும் செய்ய வேண்டாம். நல்லாசிரியராக இருப்பின்! அவரின் சந்நிதானத்தில் அமைதி நிலவும்!
இதற்குப் பெயர்தான் சந்நிதான மாத்திரை!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント