top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

25/08/2024, பகவத்கீதை, பகுதி 11

அன்பிற்கினியவர்களுக்கு:

பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்துள்ளப் பாடலும், பெரும் விவாதப் பொருளாக இன்றளவிலும் இருக்கும் ஒரு பகவத்கீதை பாடல்:

(இந்தப் பாடலை அது இருக்கும் இடத்தைக் கொண்டு பொருள் காண்பதுதான் பொறுத்தமாக இருக்கும் என்றாலும் ஒரு முன்னோட்டமாகப் பார்ப்போம்.)


சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகசஹ

தஸ்ய, கர்தாரம் அபி மாம் வித்தி அகர்தாரம் அவ்யயம் – 4:13


(4:13 என்றால் நான்காவது அத்தியாயம், பதிமூன்றாவது பாடல் என்று பொருள்)


சாதுர் வர்ண்யம் = நான்கு வர்ணங்கள்; மயா ஸ்ருஷ்டம் = எனது கண்டுபிடிப்பு; குண கர்ம = குணங்களையும் செயல்களையும் கொண்டு; விபாகசஹ = பிரிக்கப்படுகின்றன; தஸ்ய = இவற்றினை; அபி மாம் கர்த்தாரம் = நான் தான் கண்டுபிடித்தவன் என்றாலும்; அவ்யயம் = மாறுபாடில்லாத (அந்த வேறுபாடுகளுக்கு); அகர்த்தாரம் = நான் பொறுப்பாளி அல்லன்; வித்தி = (என்பதை) அறி.


நான்கு வர்ணங்கள் எனது கண்டுபிடிப்பு; குணங்களையும் செயல்களையும் கொண்டு அவை பிரிக்கப்படுகின்றன; இவற்றினை நான் தான் கண்டுபிடித்தவன் என்றாலும் மாறுபாடில்லாத அந்த வேறுபாடுகளுக்கு நான் பொறுப்பாளி அல்லன் என்பதை அறி.


(சமஸ்கிருதத்தில் ஒரு சொல்லொடு அ என்ற முன்னொட்டு இட்டால் அது எதிர்மறையாகும். உதாரணம்: கர்தா – அகர்த்தா; ஞானம் – அஞ்ஞானம்.)


(சிருஷ்டி என்ற சொல்லுக்குக் கண்டுபிடிப்பு (Discovery) என்ற பொருளே சிறப்பானதாகவும் பொறுத்தமானதாகவும் உள்ளது. புத்தாக்கத்திற்கும் கண்டுபிடிப்பிற்கும் உள்ள வேறுபாட்டினை நாம் முன்னர் சிந்தித்தோம். காண்க 24/08/2024.)


இயற்கையில் நிகழும் குண வேறுபாடுகளைக் கிருஷ்ண பரமாத்மா பல பாடல்களில் முன்னும் பின்னும் விளக்குவார்.


மேலும் ஒரு கேள்வி எழலாம். நான் தான் கண்டுபிடித்தேன் என்கிறார். நான் பொறுப்பாளி ஆக மாட்டேன் என்கிறார். அது எப்படி?


அது என்னவென்றால், பகவத்கீதையைப் படைத்தவர் அவர்தாம் என்றாலும் அதன் பயனாளிகளின் செயல்களுக்கு அவர் பொறுப்பாளியாக முடியாது என்பதனைப் போல.


வர்ணம் என்ற சொல்லுக்குப் பொருள் காணும் விதத்தில் பல பாட பேதங்கள் நிகழ்கின்றன. பின்னர் விரிவாகப் பார்ப்போம். அதுவரை உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.


இந்தப் பாடலுக்குப் பரமாத்மாவே மக்களை நான்கு வர்ணங்களாகப் பகுத்துப் பிரித்துவிட்டார் என்று பொருள் கொள்வது மூலப் பாடலுக்கு நாம் செய்யும் அநீதியாக இருக்கும்.


அண்மையில் சுவாமி முகுந்தானந்தா என்பவரின் பகவத்கீதை 4:13 பாடலுக்கான உரையைக் கேட்டேன்.


இவர் டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்திலிருந்து (IIT - Delhi), பி.டெக் (B.Tech) மற்றும் கல்கத்தா இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் (IIM, Calcutta)  இருந்து எம்.பி.ஏ (MBA) முடித்தவர். பல இடங்களில் பணியாற்றிவிட்டு தற்பொழுது துறவினை மேற்கொண்டுள்ளார்.


அவர் சொல்வது வருமாறு: வேதங்கள் மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கவில்லை; குணம் மற்றும் செயல்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்க உதவுகின்றன; மனிதர்களின் பன்முகத் தன்மையை எங்கும் எதனாலும் அடக்க முடியாது என்கிறார்.


நான்கு வகையான வேலை பகுப்புகள் (Division of Labour) உலகமெங்கும் இருகின்றன;  மேலும் சொல்கிறார்:


“… இந்த அமைப்பு காலப்போக்கில் சிதைந்து போனது. அது இறுக்கமாக மாறியது. சமூகத்தின் மீது பிராமணர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அதைத் தவறாகப் பயன்படுத்தினர்…


மேலும் என்ன சொல்கிறார் என்பதனை நாளைத் தொடர்வோம்.


நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





 

24 views1 comment

Recent Posts

See All

1 Comment


Unknown member
Aug 25, 2024

Most of the பிராமணர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அதைத் தவறாகப் பயன்படுத்தினர்…Very True. Also out of selfishness and to keep up their positions they kept many good things mentioned in Vedas , other scriptures ,manthras etc out of bounce for others. CHO ( Cho ramasamy ) explains this in his serial "Enke Brahmanan" so well. As you had earlier brought out ,Thiruvalluvar also talks about this division of work in தெரிந்துவினையாடல் ..அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு and so on.


Like
Post: Blog2_Post
bottom of page