அன்பிற்கினியவர்களுக்கு:
… எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் … – மகாகவி பாரதியார்தெளிவு பிறந்துவிட்டால் மரணமில்லை; பிறப்புமில்லை!
ரமண மகரிஷியிடம் இது குறித்த வினாக்களை வைக்கிறார்கள்:
கோள்வி: புனர்ஜன்மம் உண்மைதானா? (அஃதாவது, மீண்டும் மீண்டும் பிறப்பது என்னும் கருத்து உண்மைதானா?)
ரமண மகரிஷி: வாஸ்தவத்தில் இப்பொழுதோ இதன் முன்போ ஜன்மம் எடுத்ததே இல்லை. இனி எடுக்கப் போவதில்லை. இதுதான் உண்மை. ஆனால், அறியாமை உள்ளவரை புனர்ஜன்மம் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
கேள்வி: அதெப்படி?
ரமண மகரிஷி: வெட்டின மரத்தின் கிளைகள் மீண்டும் தளிர்க்கவில்லையா? அதன் வேர்கள் கெடாதிருக்கும் வரையில் மரமும் வளர்ந்து கொண்டிருக்கும். மரணத்தில் இதயத்தோடு ஒன்றுபடும் காரணத்தினால் மட்டும் ஸமஸ்காரங்கள் ஒழியா. தக்க காலத்தில் மறுபடியும் பிறக்கும். இதுவே ஜீவர்கள் மறுபிறவிக்கு ஏது.
(காண்க: பக்கம் 172, ஸ்ரீமத் பகவத் கீதை, அண்ணா சுப்பிரமணியம், ஸ்ரீ ராம கிருஷ்ண மடம், மயிலாப்பூர், பதிப்பு V111 5M 3C 1 85)
அஃதாவது, குழப்பம் உள்ளவரை மறுபிறப்பு என்னும் கருத்து வேர் ஊன்றும்.
இது நிற்க.
அடுத்து வரும் பாடல்களில் வரும் கருத்துகள் சற்று விலகி நின்று சிந்திக்கத் தக்கவை.
அர்ஜுனா, பிரம்ம உலகம் முதல் எல்லா உலகமும் அழிந்து மீண்டும் தோன்றும். ஆனால், குந்தி புத்திரனே, என்னை (இயற்கையை) அடைந்தபின் மறுபடி பிறத்தல் இல்லை. – 8:16
ஆயிரம் யுகம் பிரம்மாவிற்கு ஒரு பகல்; ஆயிரம் யுகம் அவர்க்கு ஓர் இரவு என்னும் தத்துவத்தை அறிந்தவர்கள் இராப்பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள். – 8:17
பகல் வந்ததும் மறைந்திருக்கும் அனைத்தும் வெளிப்படுகின்றன; இரவு வந்ததும் அவை ஒடுங்குகின்றன – 8:18
பார்த்தா! தாவர சங்கம பொருள்கள் அனைத்தும் எப்பொழுதும் தோன்றித் தோன்றி மறையும் தன்மை கொண்டன. – 8:19
ஆனால், தோற்றம் – மறைவு என்னும் சுழற்சிக்கு அப்பாற்பட்டு என்றும் நிலையாக உள்ளதோ அதற்கு அழிவில்லை. - 8:20
அக்ஷரம் என்று அறியப்படுகின்ற கருத்துகள் என்றும் நிலையானவை. அந்த இயற்கை விதிகளை அறிந்தவனுக்கு இறப்புமில்லை; மறு பிறப்புமில்லை. இதுவே என்னுடைய பரமபதம். – 8:21
மேற்கண்ட பாடல்கள் எனக்குப் புரிந்த வரையினில் சுருக்கமாக:
நம் வாழ்நாளில் பிறப்பு, இறப்பு என்பது குறுகிய காலக் கணக்கு. இந்த உலகம் என்றும் மீண்டும் புத்துருவாக்கிக் கொள்ளும் தன்மைத்து. இதன் காலம் மிகவும் நெடிது. கணக்கிட இயலாது. யுகக் கணக்கு என்பது நமக்கு அதன் அகன்ற பரிமானத்தைக் காட்டும் முயற்சி. பனை மரம் போல வளர்ந்திருக்கிறான் என்றால் அவன் உயரம் கொஞ்சம் அதிகம் என்று பொருள். அவ்வளவே.
இயற்கை விதிகளை (பிரம்ம அக்ஷரம்) அறிந்து கொண்டால் நம் மனம் அமைதியாகும். வீண் பயமோ அல்லது வீம்போ; நம்மால்தான் எல்லாம் நிகழ்கின்றன என்னும் தேவையில்லா நடுக்கமோ அல்லது இறுமாப்போ தோன்றா. இதுவே மனம் சம நிலைக்குச் செல்லும் வழி. இதுவே பரமனின் இருக்கை!
கற்றது கையளவு; கல்லாதது உலகளவு!
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments