அன்பிற்கினியவர்களுக்கு:
இந்தப் பதி இருக்கிறதே அதுவும் இரு கூறுகளாக இயங்குமாம். அவை சிவமும், சத்தியும்.
சிவம் நிலைத்து இருக்க, சத்தி மட்டும் இறங்கி வருமாம். அது எப்படி ஒன்றே இரண்டாக இருக்கும் என்பதுதானே உங்கள் வினா?
விட்டேனா என் ஆசானை! அந்த வினாவினை எழுப்பினேன்!
அவரும் ஒரு வினாவைத் தொடுத்தார். ஒரு விளக்கினை ஏற்றினால் என்ன ஆகும் என்றார்.
இது என்ன பிரமாதம். வெளிச்சம் வரும் என்றேன்!
வெளிச்சம் மட்டுமா என்றார்?
நான் வாயை மூடிக் கொண்டேன். அவரின் வினாக்களுக்கு அவரே விடையளிப்பார்.
வெளிச்சத்தொடு வெம்மையும் தோன்றும் என்றார்! இவை ஒன்றுதாம்! ஆனால் இரு வேறு கூறுகள் அது போல!
சத்தி இறங்கி நம்மை நெருங்கிவருமாம். அன்னையல்லவா அவள்! மிகக் கருணை மிக்கவள்!
பாசமும் மூன்று வகையினில் வெளிப்படும் என்று பார்த்தோம். அவற்றை ஆனவம், கன்மம், மாயை என்கிறார்கள்.
மூன்றாவதாக உள்ள மாயை என்னும் மல நிலையில் பல் வேறு தத்துவங்கள் வடிவமைக்கப்படுமாம்! அஃதாவது, பொய்யை மெய் போலக் கட்டமைக்கப்படுமாம்!
இங்கே, நாரதரின் கதையையும் சொன்னார். அந்தக் கதை அப்படியே உங்களுக்கு!
நாரதருக்கு மாயை என்றால் என்னவென்ற சந்தேகம் எழ பரந்தாமனிடம் விளக்கச் சொல்லிக் கேட்டாராம்.
அவரோ, உனக்கு ஏன் இந்த வேலை? அது உனக்குத் தேவையில்லாத பொருள் என்றாராம். நாரதர் விடுவாரா?
சொல்லச் சொல்லி அழுத்தம் கொடுத்தாராம். அப்பொழுது அவர்கள் இருவரும் ஒரு குளத்தின் அருகில் இருந்தார்களாம்.
சரி, நீ போய் அந்தக் குளத்தில் மூன்று முறை முக்கி எழுந்து வா சொல்கிறேன் என்றாராம்.
உடனே, நாரதர் அந்தக் குளத்தில் ஒரு முக்கு, இரண்டாம் முக்கு மூழ்கி எழுந்தாராம். மூன்றாம் முக்கு மூழ்கி எழுந்த பொழுது அவர் ஒரு பேரழகி உருவத்துடன் வெளிப்பட்டாராம். அப்பொழுது நாராயணன் அங்கில்லை என்பது சொல்லவும் வேண்டுமோ?
அந்தக் குளத்தின் அருகில் ஒரு அரசன் வந்தானாம். அந்த அழகியைப் பார்க்க, அவளும் அவனைப் பார்க்க அவ்வளவுதான். இனிதே இல்லறம். பல ஆண்டுகள் கழிய அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறக்க இப்படி நீண்ட காலம் கழிந்ததாம். ஒரு நாள் அந்த முதிய அரசன் ஊர்வலம் செல்லப் போகிறேன் என்றானாம். அவள் விடுவாளா? அவளும் உடன் சென்றாளாம்.
அந்தக் குளமும் வந்ததாம்! அதில் குளிக்கலாமா என்றாளாம். அதற்கென்ன குறை என்று அந்த அரசன் தடுப்புகளெல்லாம் அமைத்து அவளைக் குளிக்கச் சொன்னானாம்.
இப்பொழுது இந்தக் கதையின் போக்கு உங்களுக்குப் புரிந்திருக்கும். அவள் மூழ்கி எழுந்தவுடன் நாரதராக வெளியே வந்தாராம்! ஐயகோ, எங்கே என் கணவன், எங்கே என் குழந்தைகள் என்று கதறினாராம். அங்கே நாராயணன் நின்று கொண்டு “நீ அவளல்ல! நாரதர் என்று அறி” என்று சொல்லி நிகழ்ந்தை விளக்கினாராம். இதுதான் மாயை என்றாராம்!
அதனைப் போல மாயையில் நமக்கும் வெவ்வேறு வடிவங்களும் வாழ்க்கைகளும் கட்டமைக்கபடுமாம். நமக்கு என்பது ஆன்மாவிற்கு என்று எடுத்துக் கொள்ளுங்கள். இவை ஏன் என்றால் இதற்கும் விளக்கம் பின்னர் வரும். அதுவரை சுகமாக இந்தக் கதையைக் கேளுங்கள்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios