அன்பிற்கினியவர்களுக்கு:
சுவாமி முகுந்தானந்தா மேலும் தொடர்கிறார்.
… ஆனால் இப்படிப்பட்ட பாகுபாடு, தவறாகப் பயன்படுத்துதல் என்பன இந்து தர்மத்திற்கு மட்டும் உரியதல்ல. அதற்கு இந்து மதத்தை மட்டும் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?
மேற்குலகில் மக்கள் என்னிடம் கேட்கும்போது, நான் சொல்வேன், “பாருங்கள் மேற்கத்திய உலகின் சாதனை என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைத்தனம்,
இன அழிப்பினால் (Holocaust) ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு நீங்கள் கிறுஸ்துவத்தைக் குறை கூற இயலுமா? இந்த நாடு (அமெரிக்கா) அடிமைத்தனத்தை கடைப்பிடித்தது. சாதி அமைப்பைப் பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
“ஓ, இல்லை. அடிமைத்தனம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. (இப்போது இல்லை)” என்றும் நீங்கள் சொல்லலாம்.
முற்றிலும் சரியல்லவே. 1960 களில் கூட சிவில் உரிமைகளுக்காகப் போராட்டம் நிகழ்ந்தது. கறுப்பர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.
எனவே இது (வலியவர் மெலியவரை ஒடுக்குதல்) மனிதகுலத்தின் இயல்பு. யார் ஆட்சிக்கு வந்தாலும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். நிச்சயம் அப்படி இருக்கக்கூடாது. ஆனால், அது நடக்கிறது.
அதே சீரழிவு இந்திய சமூகத்திலும் நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு (ஜென்மம்) பற்றி பேசவில்லை. “குணங்கள் மற்றும் செயல்கள்" என்றுதான் அவர் கூறுகிறார் …”
அஃதாவது, Lord Acton இன் “Power tends to corrupt and absolute power corrupts absolutely” (அதிகார வர்க்கம் ஒடுக்கதான் முயலும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் சிதைக்கத் துணியும் – லார்ட் ஆக்டன்) என்று சொல்லி அமைதிப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு விளக்கிய சுவாமி முகுந்தானந்தா அவர்கள், வர்ணம் சாதியானது எப்பொழுது? அதற்குக் கீதைக்குள் குறிப்புகள் உள்ளனவா? வலியவர் பிறரை ஒடுக்கலாமா? வலியவர் மெலியவரை ஒடுக்கினால் என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை!
வலியவர்கள் ஒடுக்குவதனை அனைத்துத் தளங்களிலுமே பார்க்கிறோமே!
இந்தப் புரிதலுடன் முயலுவோம்.
பகவத்கீதையில் பரமாத்மா சொல்வது என்னவென்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளைத்தாம்!
அஃதாவது, பாசமும் பந்தமும் கண்ணை மறைக்க முயன்றாலும் நீ செய்ய வேண்டிய கடமையை நடுவு நிலைமையாகிய கண்ணியத்துடன் செய்தே தீருவேன் என்ற கடப்பாட்டுடன் செய்திடல் வேண்டும் என்கிறார்.
அர்ஜுனன் என்ற பெயருக்குத் “தூய இயல்பு” உடையவன் என்று பொருள் சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
எனக்கு வேறு மாதிரி பொருள் இருக்குமோ என்று தோன்றுகிறது.
ருஜுப்படுத்து, ருசுப்படுத்து என்றெல்லம் சொல்கிறோம் அல்லவா? அஃதாவது உறுதிப்படுத்து என்னும் பொருளில்! அதைப் போன்று ருஜ் என்றால் நிலையான, வளையாத, கோணாத, சஞ்சலம் இல்லாத என்றெல்லாம் பொருள்படும் என்று நினைக்கிறேன்.
சமஸ்கிருதத்தில் அ என்னும் முன்னொட்டு எதிர்மறை பொருள்தரும். எனவே அருஜ் என்றால் சஞ்சலம் என்று பொருளாகிறது.
அருஜ் உடன் அன் விகுதி சேர்த்துக் கொண்டால் அருஜுனன் என்றாகும். அஃது அர்ஜுனன் என்றாகலாம். இப்படிப் பார்த்தால் அர்ஜுனனைச் சஞ்சலம் நிறைந்தவன் என்று சொல்லலாம். இந்தச் சொல் ஆராய்ச்சி முழுக்க முழுக்க என் கற்பனையே!
ஏன் என்றால் மகாபாரதம் முழுவதும் அவன் சஞ்சலத்துடனே செயல்படுகிறான். பின்னர் விரிப்போம்.
அர்ஜுனன் என்பது ஒரு குறியீடு. அவ்வளவே.
கிருஷ்ண பரமாத்மா சொல்லும் கீதை சஞ்சலப்படுபவர்கள் அனைவர்க்குமானது.
அவன் காட்டும் விஸ்வரூபம் சஞ்சலப்படுபவர்கள் அனைவரும் காணவேண்டிய ஒன்று.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
கீதை சஞ்சலப்படுபவர்கள் அனைவர்க்குமானது. yes true i think that means for the whole humanity.....Every one loses the stability at some point or other when they face some situation in life...