அன்பிற்கினியவர்களுக்கு:
நம் நாட்டின் தற்காலக் கல்வி முறை தெரிந்தோ தெரியாமலோ வேறு பாதையினில் சென்று கொண்டுள்ளது. எந்தப் படிப்பும் ஒரு வேலையை நோக்கியே சென்று கொண்டுள்ளது. அதற்கு நாம் வைத்திருக்கும் பெயர் திறன்சார் பயிற்சி முறை. (Skill based learning / employable skills / job ready)
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் அவர்கள்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்;
கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள் … என்றார்.
இது முக்கியம்தான். ஆனால், இதனை இக்காலத்திற்கு ஏற்றார் போல மாற்றிட வேண்டும்,
கைத்தொழில் என்பதனைச் செய்முறைப் பயிற்சி (Hands on) என்று மாற்றல் வேண்டும்.
செய்முறைப் பயிற்சியோடு கற்றுக் கொள்;
உயர்ச்சி உனக்குண்டு ஏற்றுக் கொள் … என்று மாற்றிடல் வேண்டும்.
செய்முறைப் பயிற்சி (Experiential learning) இப்பொழுது திறன்சார் பயிற்சி (Employment oriented learning) என்றாகிவிட்டது!
சரி, ஒரு திறன் சார் பயிற்சியைப் படித்துவிட்டால் வாழ்நாளை ஓட்டிவிட முடியுமா என்றால் அதுதான் முடியாது! ஏன் என்றால் புதிது புதிதாக வளர்ச்சிகள் உருவாகின்றன. காலத்தின் மாற்றத்தால் நாம் கற்றுக் கொண்ட திறன்களுக்குத் தேவையில்லாமல் போகின்றன.
Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) என்கிறார்கள்; இதனைப் போன்று பல தோன்றலாம். இதுவரை பயின்ற திறன்களை ஒன்றும் இல்லாமலும் செய்துவிடலாம்!
இரு வகையான பொருளாதாரம் தற்கால உலகில் நிலவுகின்றன. ஒன்று: தொழில்துறைசார் பொருளாதாரம் (Industrial based economy); இரண்டு: அறிவுசார் பொருளாதாரம் (Knowledge based economy).
தொழில்சார் பொருளாதாரம் வளங்களால் கட்டுப்படுத்தப்படுவது. வளங்களுக்கு ஓர் எல்லை உண்டு (Limited by resources). ஆனால், அறிவுசார் பொருளாதாரம் வளங்களால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.
எடுத்துக்காட்டு: மாருதி கார் நிறுவனம் ஓர் ஆண்டிற்கு இவ்வளவுதான் கார்களை உற்பத்திச் செய்ய இயலும். இது வளங்களால் (Man, Machines, Materials, Methods) கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால், மைக்ரோசாஃப்ட் (Microsoft) முதலான நிறுவனங்கள் அறிவுசார் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியின் எல்லைகள் பரந்து விரிந்து உள்ளன. இவற்றுக்கு அறிவுதான் மூலதனம்!
நம் நாடு தொழில்சார் பொருளாதாரத்தில்தான் பயணிக்கிறது. அறிவுசார் பொருளாதாரத்திற்கு மாற வேண்டும் என்றால் நம் கல்வி முறை அடியோடு மாற வேண்டும். முதலில் அடிப்படைக் கல்வி ஆழமானதாக இருக்க வேண்டும். எதனைக் கற்றாலும் அவற்றை கசடற கற்கும் விதத்தில் கல்வி முறை அமைய வேண்டும். சூத்திரங்களை மனனம் செய்யும் பழக்கம் மீண்டும் வரவேண்டும். செய்முறைப் பயிற்சி (Experiential learning) இருக்க வேண்டும்.
ஏன்? இப்பொழுது இல்லையா என்பீர்கள்? இப்பொழுதும் செய்முறைப் பயிற்சி (Practicals) என்று இருக்கிறதே என்று அடித்துச் சொல்வீர்கள்!
உண்மை நிலவரம் உங்களுக்கும் தெரியும். எடுத்துச் சொன்னால் உங்களுக்குக் கலவரம் நிச்சயம்!
பயிற்சிகள் (Practicals) என்பார்கள்! பல பள்ளிகளில் எதுவும் நிகழாது. பள்ளிகள் மட்டுமல்ல, கல்லூரிகளிலும் அதே நிலைதான். பயிற்சிகளுக்கும் இப்பொழுது கோணார் உரை போன்று பல உரைகள் வந்துவிட்டன. அந்த உரைகளை அப்படியே பார்த்துப் பதிவுக் குறிப்பேட்டில் (Record Note / Book) எழுதுகிறார்கள். யார் மிகச் சரியாக அப்படியே மீள்பதிவு (copy அடிக்கிறார்களோ) செய்கிறார்களோ அவர்களுக்கு அதிக மதிப்பெண்கள்!
என்ன கற்றுக் கொடுக்கிறோம்? உண்மையில் கெடுக்கிறோம். பின்னர் என் பிள்ளை இதனைப் படித்தான், அதனைப் படித்தான். வேலை கிடைக்கவில்லை என்கிறோம்.
படித்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியது முக்கியம்தான். அது மட்டுமே முக்கியமன்று.
விதை நெல்கள் வேண்டும்; பதர்கள் என்றும் விதையாவதில்லை!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios