அன்பிற்கினியவர்களுக்கு:
மனிதர்களை இணைக்கும் கருவி கருத்தியல்.
சரி. எந்தக் கருத்தியலை விதைப்பது முக்கியம்?
அன்பும் அருளும் அடிப்படையாகக் கொண்ட கருத்தியல்தாம் நாளும் நம்பிக்கையுடன் விதைக்க வேண்டும்.
அக்ஷரப் பிரம்ம யோகமென்னும் எட்டாம் அத்தியாயத்திலிருந்து சில கருத்துகள் மீள்பார்வைக்காக:
அக்ஷரப் பிரம்மம் என்றால் அழிவில்லாத உண்மையான உண்மைப் பொருள். அதன் இயல்புகள் ஒவ்வொரு உயிரிலும் கலந்து இருக்கும். அஃதே அதியாத்மம் அல்லது ஆத்ம ஞானம்; இயக்கத்திற்குக் காரணமான செயல்கள் கர்மம் எனப்படும்.
அதிபூதம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டு. இக் கூட்டினால் பொருள்கள் தோன்றும், வளரும், பிரியும், மறையும், அழியும் தன்மைத்து. அதிதைவம் என்பது இயற்கையின் இயல்பு. அதியக்ஞம் என்பது செயல்களின் இயல்பு.
அக்ஷரம் என்று அறியப்படுகின்ற கருத்துகள் என்றும் நிலையானவை. அந்த இயற்கை விதிகளை அறிந்தவனுக்கு இறப்புமில்லை; மறு பிறப்புமில்லை.
இந்த உலகிற்கு இரு பாதைகள் எப்பொழுதுமே உள்ளன. ஒன்று ஒளி பொருந்திய பாதை; மற்றொன்று இருளில் மூழ்கும் பாதை.
இவ்விரு பாதைகள் உள்ளன என்று அறிந்து கொண்டவர்கள் மயங்கி நிற்பதில்லை. ஆகையினால், எக்காலத்திலும் இந்தச் சிந்தனைகளில் பொருந்தி நில். அறிவுடையனாக இரு என்று இந்த அத்தியாயத்தை முடித்தார்.
அடுத்து வருவது ஒன்பதாம் அத்தியாயமான ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்!
வித்தைகளுள் சிறந்ததும் இரகசியமானதையும் சிந்திக்கும் பகுதி இந்த அத்தியாயமாகும்.
அது என்னவென்பதை உங்களுடன் சேர்ந்து நானும் கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
நாளைத் தொடர்வோம், நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Комментарии