அன்பிற்கினியவர்களுக்கு:
புருடன் என்னும் சூக்கும வடிவம், அஃதாவது, கண்ணுக்குத் தெரியா உருவம், கண்ணுக்குத் தெரியும் உருவமாக மாறும் பொழுது அதற்கு ஒரு உடல், செயற்பட கருவிகள், வாழும் இடம், மேலும், அந்த வாழ்க்கையில் ஏற்படப் போகும் அனுபவங்களைக் கூட்ட வேண்டும்.
இந்த நான்கினைத்தாம் தனு, கரண, புவன, போகம் என்பர் சித்தாந்திகள்.
இவை பிரகிருதி மாயையில் நிகழும். இங்கே தோன்றும் தத்துவங்கள் இருபத்து நான்கு. முன்னர் பார்த்தோமே அவைதாம்.
ஆன்மாவிற்கு அனுபவங்கள் நிகழ வேண்டும். அதுதான் இலக்கு!
அனுபவங்கள் வேண்டும் என்றால் பொருள்கள் குண வயப்பட வேண்டும்.
கண்ணா லட்டு திண்ண ஆசையா?
லட்டினைச் சாப்பிட வேண்டுமென்றால் நாக்கிற்கு அந்த இனிப்புச் சுவையை அனுபவிக்கும் தன்மை, அஃதாவது, குணம் இருக்க வேண்டும். மிக முக்கியம் லட்டினில் இனிமை என்னும் குணம் இருத்தல் வேண்டும்!
முக்கியமான ஒரு இரகசியம் சொன்னார் ஆசிரியர். நாக்கில் ஈரம் இருந்தால்தான் சுவை தெரியும் என்றார். நாக்கு வரண்டுவிட்டால் சுவையறியாது. நம் புலன்கள் இரண்டினில் எப்பொழுதும் ஈரம் இருப்பதுபோல படைக்கப்பட்டுள்ளது. ஒன்று நாக்கு; மற்றொன்று கண். கண்ணில் ஈரம் இல்லையேல் பார்வை இல்லை!
இஃதும் ஒரு குறியீடு. நம் பார்வையிலும் ஈரம் இருத்தல் வேண்டும்; நம் சொல்லிலும் ஈரம் இருத்தல் வேண்டும்!
நாம் பொருள்களில் குணங்கள் தங்கியுள்ளன என்று நினைக்கிறோம்.
ஆனால், பொருளிலே குணங்கள் அமைவதில்லையாம்! குணங்கள் சேருவதனால்தாம் பொருள்கள் உருவாகின்றன என்கிறார்கள். கொஞ்சம் கடினம்தான் விளங்கிக் கொள்ள!
எடுத்துக்காட்டினைப் பார்ப்போம். மல்லிகைப் பூ இதில் வாசனை என்னும் குணம் இருக்கின்றது; வென்மை என்னும் நிறக் குணம் உள்ளது; இதழ்கள் மென்மையாக உள்ளன! இப்படிக் குணங்களின் கூட்டாக உள்ளது மல்லிகை.
இந்த மல்லிகையிலிருந்து ஒவ்வொரு குணமாக நீக்கிக் கொண்டே வந்தால் இறுதியில் அங்கு மல்லிகை என்ற ஒன்று இருக்காதல்லவா? அதனைத்தான் சொல்கிறார்கள் பொருள்கள் குணங்களின் கூட்டு என்று!
குணங்கள் பல கோடியாக இருப்பினும் அவற்றை மூன்றாகப் பகுக்கிறார்கள். அவைதாம்: சாத்விக குணம், இராசச குணம், தாமச குணம்.
அது எப்படி?
நாக்கால் உணரும் சுவை பல கோடியாக இருந்தாலும் அவையாவும் ஆறு சுவைகளின் கலப்பாகவே இருக்க இயலும். அதனைப் போலவே குணங்கள் எண்ணிறந்தவையாக இருப்பினும் அவையாவும் மூன்றின் கூட்டுதாம்!
இந்த உலகில் உள்ள பேதங்கள் அனைத்தும் குண பேதங்களே. குணத்தை மாற்றினால் நம் வடிவமே மாறிவிடும்! இது ஒரு பெரும் இரகசியம்.
இந்த மூன்று குணங்களின் இயல்புகளைப் பார்ப்போம். சாத்விக குணம் பொறுமை, அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக அமைகின்றன.
இராசச குணம் முயற்சி முதலானைவையைத் தீர்மானிக்கும்.
தாமச குணம் தாமதம் செய்யும்!
ஓவ்வொன்றும் முக்கியமான குணங்களே. தாமசம் மோசம் என்று சொல்ல முடியாது; சாத்விகம் உய்ர்ந்தது என்றும் சொல்ல இயலாது.
தாமசம் இல்லையாகின் உயிர்ப் பெருக்கம் நிகழாது!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare