அன்பிற்கினியவர்களுக்கு:
இந்த அத்தியாயத்தில் நெருடலான சில கருத்துகள் உள்ளன. அந்தப் பாடல்களை முதலில் பார்த்துவிடுவோம்.
மாம் ஹி பார்தா வ்யாபாச்ரித்ய யேபிஸ்யுஹு பாப-யோனயஹ ஸ்த்ரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தேபி யாந்தி பராங் கதிம். – 9:31
கிம் புனர்ப்ராஹ்மணாஹா புண்யா பக்தா ராஜார்ஷயஸ்ததா
அநித்யமஸுஹம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம். – 9:32
பாப-யோனயஹ = தாழ் பிறவியினர்;
ஸ்த்ரியஹ = பெண்கள்;
வைஸ்யாஹா = வைசியர்கள்;
சூத்ராஹா = சூத்திரர்கள்;
கிம் புனர் = மீண்டும் சொல்லவும் வேண்டுமோ;
ப்ராஹ்மணாஹா = பிராமணர்கள்;
புண்யா = புண்ணியவான்
பக்தா = பக்தர்கள்;
ராஜார்ஷயச்ச = ராஜரிஷிகளும்.
மேலே கண்டவை பாடல்கள் 9:32 மற்றும் 9:33 இல் வரும் சில சொல்களின் பொருள் விளக்கம்.
இந்தச் சொல்களைக் கூட்டிப் பொருள் காணும்விதத்திலும் உரையாசிரியர்கள் மாறுபடுகிறார்கள்.
பாப-யோனயஹ ஸ்த்ரியஹ வைஸ்யாஹா சூத்ராஹா = பாப யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று சிலர் உரை எழுதுகிறார்கள்.
பாப-யோனயஹ ஸ்த்ரியஹ வைஸ்யாஹா சூத்ராஹா = இழி பிறப்பினர், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று சொல்களைப் பிரித்துச் சிலர் உரை எழுதுகிறார்கள்.
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பாரதூரமானது.
பாப யோனிகள் என்று ஒரு பிரிவு இருப்பது போலவும் அதனில் இருந்து பிறப்பவர்கள் பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பதும் எப்படிச் சரியாக இருக்க இயலும்?
அப்படியென்றால் அந்தப் பாப யோனி என்பது வரையறுக்கப்பட்டுள்ளதா? இதைக் குறித்த குறிப்பு கீதையில் இருக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் அளிக்க இயலும்!
அதே போன்று பாடல் 9:33 இல்:
ப்ராஹ்மணாஹா புண்யா பக்தா ராஜார்ஷயச்ச = பிராமணர்கள், புண்ணியவான்கள், பக்தர்கள், ராஜ ரிஷிகளும் என்று சிலரும்:
புண்யா ப்ராஹ்மணாஹா பக்தா ராஜார்ஷயச்ச = புன்ணியவான்களாகிய பிராமணர்கள், பக்தர்களாகிய ராஜரிஷிகளும் என்று சிலரும் உரை காண்கிறார்கள்!
உரை வேறுபாடு என்று சொல்வதனைவிட மாறுபாடு என்றே சொல்ல வேண்டும்.
பாவம் செய்தவர்கள் அல்லது இழி பிறவிகள் ஒரு சாரார் என்று சுட்டும் பொழுது புண்ணியம் செய்தவர்கள் மறு சாரார் என்று காட்டுகிறார்கள்.
ஆனால், நூல் ஆசிரியர் உள்ளம் அவ்வாறானதா? அல்லது இந்தப் பாடல்களே இடைச் செருகல்களா என்ற கேள்வி எழத்தானே செய்கின்றது.
சரி, இவர்களையெல்லாம் குறிப்பிட்டு இந்த இரு பாடல்களும் தெரிவிப்பது என்னவென்றால் நம்பிக்கை வைத்தால் அவனை அடையலாம் என்கிறார்கள்!
எல்லாரும் அடையலாம் என்று சொல்லிச் செல்லாமே ஏன் இந்தப் பிரிவுகளை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும்.
மேலும் அந்த அத்தியாயத்தில் முன்னர் சொல்லிய கருத்துகளையே மீண்டும் வேறு விதத்தினில் விரிக்கப்படுகின்றன. இடைச் செருகலா இந்த அத்தியாயம் என்ற கேள்வி மீண்டும் எழுகின்றது.
என் மேல் பாரத்தைப் போடாதே! நான் பொறுப்பல்லன் என்று முன்னர் தெளிவாக கூறியவர் (5:15) இந்தப் பகுதியில் என்னை மட்டும் நம்பு கரை சேரலாம் என்பாரா தெரியவில்லை!
கண் மூடித்தனமான பக்தியை வளர்ப்பாரா என்ற ஐயமும் எழுகின்றது.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments