அன்பிற்கினியவர்களுக்கு:
தொடக்க வகுப்புகளில் (Formative period) கவனக் குறைவாக இருந்துவிட்டு கல்லூரிகளுக்கு வந்த பின்னர் பிறரிடம் எவ்வாறு தொடர்பு கொள்வது (Communication skills) என்பது குறித்துப் படிக்கச் சொல்கிறோம்! படித்து வருவதா அது?
தமிழிலும் சரளமாக சரியான உச்சரிப்புடன் பேச முடியவில்லை, பிழையின்றி எழுதவும் முடியவில்லை! ஆங்கிலத்திலும் அவ்வாறே! இதுதான் பெருங்குறை.
பிழையின்றி எழுதக் கற்றுக் கொள்வோம் என்றால் ஒரு புலவர் இதுதான் சரி என்கிறார்! இன்னுமொரு புலவர் அது தவறு, நான் சொல்வதுதான் சரி என்கிறார்!
ஆங்கிலத்தில் நவீன ஆங்கில இலக்கணம் (Modern English Grammer) என்று தொடர்ந்து பல புத்தகங்கள் காலம் தோறும் வெளிவந்து கொண்டே உள்ளன. இவை போன்று தமிழில் நவீன இலக்கணப் புத்தகங்கள் வெளிவருதல் வேண்டும். Wren and Martin (ரென் மற்றும் மார்ட்டின்) என்னும் பழைய இலக்கணப் புத்தகம் ஒன்றே போதும் என்று யாரும் சொல்வதில்லை!
எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் … பாவேந்தர் பாரதிதாசன்
நூற்றுக்கு முப்பது அல்லது முப்பத்து ஐந்து மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்பது சிந்திக்கத் தக்கது. மொழிப் பாடங்களுக்குத் தேர்ச்சிப் பெற மதிப்பெண்களே வேண்டா. தேர்ச்சி பெற்றாரா இல்லையா என்பதுதான் முக்கியம். தேர்ச்சி பெற்றார் என்றால் அவர் மொழியை நன்றாகக் கையாளுவார் என்னும் நிலை வர வேண்டும். இவ்வாறு செய்தால் பின்னர் தொடர்புத் திறன் பயிற்சியின் (Communication skills training) தேவை குறையும்.
ஆராய்ச்சிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் விதத்தினில் கல்வி இருக்க வேண்டும். முதலில் ஆசிரியர்களின் மனநிலை, தரம் போன்றவை உயர வேண்டும்!
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்
எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். -பாவேந்தர் பாரதிதாசன்
செய்ய வேண்டியதைச் செய் என்றார் பரமாத்மா! எனவே, சில நாள்களாகத் தமிழைக் குறித்துச் சிந்தித்தோம். நாளை முதல் பரமாத்வைத் தொடர முயலுவோம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments