அன்பிற்கினியவர்களுக்கு:
முக்கியமான புரிதல் என்னவென்றால் குணங்களின் கூட்டுதாம் பொருள்கள்; குணங்கள் மாற வடிவமும் மாறும்.
ஓசை அல்லது மொழி அல்லது வார்த்தை மிக முக்கியம். அதுதான் ஆகாசம் உள்ளிட்டவைகளுக்கு முதல் காரணம்.
வார்த்தைகள் வடிவமாகும்!
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி என்றார் நம் பேராசான் வள்ளுவப் பெருந்தகை. அந்த வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்றும் சொன்னார். காண்க https://foxly.link/குனமென்னும்_குறள்_29
நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டிவிடும் என்றும் சொன்னார். காண்க https://foxly.link/நிறைமொழி_குறள்_28
இந்தக் குறளுக்கு உரை செய்த பரிமேலழகர் பெருமான் நிறை மொழி என்பதற்கு அவர்களின் மொழி “அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும்” அவ்வவ் பயன்களைப் பயத்தேவிடும் என்றார்.
அஃதாவது, குணங்களைச் செம்மைப்படுத்த அவர்களின் வார்த்தைகள் வடிவங்களாகும்!
இயல்பாகவே வார்த்தைகளை நாம் அளந்து பேச வேண்டும்! நம் குணங்களுக்கு ஏற்றார்போல் பயன் விளைவித்துவிடும்.
இன்னும் கொஞ்சம் சித்தாந்தம் பார்ப்போம்.
இப்பொழுது “அனுபவி இராஜா” என்று இந்த நிலத்தில் நம்மாளு இருக்கிறார்.
நம்மாளையும் மூன்றாகப் பிரிக்கலாம். அவை: உடல், உள்ளம், உயிர்.
உலக ஓட்டத்தில் சிக்குண்ட நிலையில் களைப்பும் சலிப்பும் தோன்றும். அக்களைப்பும் மூன்று வகையினில் வரும். உடல் களைப்பு, உள்ளக் களைப்பு, உயிர்க் களைப்பு.
அஃதாவது, அடிபட அடிபடக் களைப்புத் தோன்றும். அப்பொழுது ஓய்வு எடுப்போம்.
இரவினில் உறக்கம் வருகிறதல்லவா அது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுக்கும். அப்பொழுதுதான் மறுநாள் எழுந்து மீண்டும் உதைபட ஏதுவாக இருக்கும்!
மாணிக்கவாசகர் பெருமான் புல்லாகி பூண்டாகி இன்னும் பலவும் ஆகி இந்தத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார்.
உயிர்க் களைப்பு நம் அனுபவத்திற்கு வராது. ஆனால், மற்ற இரு களைப்புகளையும் அனுபவிக்கலாம். அந்த இரண்டனுள் எந்தக் களைப்பு அதிகம் பாதிக்கும் என்று கேட்டால் உள்ளக் களைப்புதான்.
உள்ளம் களைத்துவிட்டால் உடல் இயங்காது. ஆகையினால்தான் மாயை தேவைப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இருக்க உள்ளம் உற்சாகம் கொள்ளும். உடலை இயங்கச் செய்யும்!
இப்பொழுது கிழே வந்த நம்மாளு மீண்டும் மேலே போக வேண்டும். ஆமாம். இரு வேறு வழிகள்!
வணிக வளாகங்களில் (Shopping mall) பார்க்கிறோமே இயங்கும் படிக்கட்டு (Escalator) அது போல! இறங்குவதற்கு ஒரு வழி; ஏறுவதற்கு ஒரு வழி!
நான் வந்த வழியிலேயே தான் திரும்பிப் போவேன் என்று மீண்டும் மீண்டும் அந்த இறங்கும் வழியில் ஏறினால் அது கிழேதான் தள்ளிவிடும். கவனம் தேவை!
சிலர் அடுத்த பிறப்பிலாவது அவனைப் போல பிறக்கணும் என்கிறார்கள். அவர்கள் தங்கள் இருக்கையை உறுதி செய்துவிட்டுப் போகிறார்கள் என்று பொருள். புரிந்தவன் பிஸ்தா!
கீழே இறங்குவது சத்தி; மேலே ஏறுவது முத்தி!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments