அன்பிற்கினியவர்களுக்கு:
பகவத்கீதைக்குள் நுழைவோம்.
இல்லறத்தில் இருப்போரும் துறவிகள் ஆகலாம்! கர்மத் தளைகளைத் தவிர்க்கலாம். அவர்களே நித்ய சந்நியாசிகள் என்கிறார். காண்க 24/10/2024, பகவத்கீதை, பகுதி 69.
பரமாத்மா தொடர்கிறார்:
சரியான புரிதல் இல்லாமல் இருப்பவர்கள்தாம் சாங்கியமும் யோகமும் வெவ்வேறென்று சொல்வார்கள். இந்த இரண்டனுள் எந்த ஒன்றைப் பற்றினாலும் இரண்டின் பயனையும் எய்தலாம். எனவே சாங்கியமும் யோகமும் ஒன்றே. இவ்வாறு ஒன்றென்று காண்பவன் உண்மையைக் காண்கிறான். – 5:4-5
அஃதாவது, அறிவில் தெளிவு இருப்பின் செயல்களில் பற்றுத் தலை தூக்காது; செயல்களில் பற்றில்லாமல் இருப்பின் அச் செயல்களைச் செய்யும் அறிவு தானாக வந்து எய்தும் என்கிறார்.
அர்ஜுனா, செயல்களில் பற்று இல்லாமல் பொருந்தி நிற்பது (யோகம்) இல்லாமல் துறவு என்பது வாய்க்காது. அவனே இயற்கையோடு இயைகிறான். (பிரம்மத்தோடு இணைகிறான்) – 5:6
பாடல் 5:3 இல் எந்தச் செயலிலும் விருப்பு வெறுப்பு அற்றவன் துறவி என்றார். அஃதாவது பற்று அற்றவன் துறவி.
யோகத்தில் நின்றவனும், தன்னைத்தான் வென்றவனும், புலன்களை வெற்றி கண்டவனும், தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் போற்றுபவனும் தாம் செய்யும் செயல்களினால் எந்தவித பாதிப்பும் அடையமாட்டான். – 5:7
கண்டாலும், கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், உண்டாலும், சென்றாலும், உறங்கினாலும், மூச்சுவிட்டாலும், பேசினாலும், விட்டாலும், கண் விழித்தாலும், கண் மூடினாலும் இந்தச் செயல்கள் எல்லாம் இயல்பாக அந்த அந்தப் புலன்கள் செய்கின்றன என்று நிச்சயமுடையவனாய் இரு. இந்தச் செயல்கள் எதனையும் தாம் செய்யவில்லை என்பதனை அறி. – 5:8-9
அஃதாவது, புலன்களின் செயல்கள் இயல்பானவை. அவற்றை அப்படியே விட்டுவிட்டால் நலம். அதன் பின்னே நம் மனத்தைச் செலுத்திப் பற்று வைத்தால்தான் குழப்பம் உண்டாகும் என்கிறார்.
நபிகள் பெருமானார் “முதல் பார்வை உம்முடையது; அடுத்த பார்வை சைத்தானுடையது” என்கிறார். ஆழ்ந்த பொருள் கொண்ட கவித்துவமான வரிகள் இவை!
அஃதாவது, முதல் பார்வை இயல்பாக நம் முன் தோன்றுவது. நாம் தொடர்ந்து பார்ப்பதும் அதன் மீது பற்று வைத்து மீண்டும் மீண்டும் பார்ப்பதும்தாம் சிக்கலுக்கு வழி வகுக்கும்!
நபிகள் பெருமானாரின் வரிகளில் பார்வை என்ற சொல்லை எடுத்துவிட்டுப் பாடல் 5:8-9 இல் உள்ள எந்த வினையையும் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்!
பகவத்கீதை 4:24 பாடலுக்கு, மகாகவி பாரதி உரையில், பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானம் எய்தினோன். அவன் பிரம்மத்தை அடைவான் என்றார் .
பிரம்மம் என்ற சொல்லுக்கு இயற்கை என்று பொருள் கொண்டால்:
இயற்கையோடு இயைந்து செயல்களை ஒரு வேள்வி போலச் செய்து அதனை இயற்கைக்கே அர்ப்பணிப்பவன் இயற்கையாகவே மாறிவிடுகிறான் என்று பொருள்படுகிறது என்று பார்த்தோம். காண்க https://foxly.link/பகவத்கீதை_பகுதி_65
ஐந்தாம் அத்தியாயத்தின் பத்தாம் பாடலில் இந்தக் கருத்தினை வேறு வடிவினில் மீண்டும் சொல்கிறார்.
செய்யும் செயல்களையெல்லாம் பிரம்மத்தில் சார்த்திவிட்டுப் (இயல்பாகப்) பற்றற்றுச் செயல்களைச் செய்பவனுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் தாமரை இலை மேலே நீர்த்துளி போல ஒட்டாது. – 5:10
பற்றற்றுச் செயல்களைச் செய்வதனை இயல்பாக்கு, இயற்கை பண்பாக்கு என்கிறார். அதற்குதான் இயற்கையில் இருந்து ஓர் எடுத்துக்காட்டினைத் தருகிறார்.
தாமரை இலை என்பது நம் மனத்திற்குக் குறியீடு.
மனம் இறப்பதுதான் முக்கியம் என்கிறார் தாயுமானவர் சுவாமிகள்.
சினம்இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம்இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே! - பராபரம் – 189, தாயுமானவர் சுவாமிகள்
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios