அன்பிற்கினியவர்களுக்கு:
நம்மாளு மலத்தில் கட்டுண்டு கேவல நிலையில் இருந்தார் என்று பார்த்தோம். அவர் இப்பொழுது சகல நிலைக்கு வந்துவிட்டார். இப்பொழுது அவர் மேலேறி சுத்த நிலைக்குப் போக வேண்டும்.
ஆக மூன்று பெரும் நிலைகள். அவை: கேவல நிலை, சகல நிலை, சுத்த நிலை.
பாத்திரத்தைப் பளிச்சிட வைக்க வேண்டும் என்றால் அவற்றைச் சாம்பல் என்னும் அழுக்கிட்டுதான் தேய்த்துக் கழுவ வேண்டும்.
என்ன சாம்பல் பயன்படுத்துவதில்லையா? சபீனாதானா? சரி, சபீனாவோ, மீனாவோ எதனையாவது தெய்த்துக் கொண்டு அவர் மேலே போகட்டும் என்று விட்டுவிட்டு நாம் அவரின் உயிரைப் பார்ப்போம்.
உயிர் இருக்கிறது அல்லவா உயிர்?
உயிர் இருக்கா? ஆமாம் உயிர் இருக்கத்தான் செய்யுது. இல்லைன்னா சங்கு ஊதி இருப்பாங்களே!
சரி, அந்த உயிர் இந்த உடலில் எங்கெல்லாம் தங்கும்? எங்கு தங்கினால் ஓய்வு கிடைக்கும்? என்ன விதமான ஓய்வு கிடைக்கும்? என்றெல்லாம் ஆராய்ந்தார்கள் சித்தாந்திகள்.
உயிர் வியாபகத் தன்மை கொண்டது என்று பார்த்தோம். இந்த உடலில் அஃது ஓடிக்கொண்டே இருக்கும். இருப்பினும் அவருக்கும் சில மணித்துளிகள் தங்க நிறுத்தங்கள் இருக்கும்.
நாம் இந்த விழிப்பு நிலையில் அஃதாவது நனவு நிலையில் இருக்கும் பொழுது உயிரின் நிறுத்தம் நெற்றிப் பொட்டு என்கிறார்கள். ஆகையினால்தான் அந்த நெற்றிப் பொட்டைப் பாருங்கள் என்கிறார்கள் தியானம் செய்ய அமரும் பொழுது!
நாம் பிறரிடம் பேசும் பொழுதும் அந்த நெற்றிப் பொட்டைப் பார்த்துதான் பேச வேண்டும். செய்தி உள்ளே செல்லும்.
இரு வழி கூர்மையான கத்தி இது. சிலர் தீய எண்ணங்களைச் செலுத்துகிறார்கள் என்று தோன்றினால் நாம் நம் நெற்றிப் பொட்டை அவர்களிடம் காண்பிக்கக் கூடாது. என் ஆசிரியப் பெருமக்களின் பாதங்களைத் தொட்டுப் பல இரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
நனவு நிலையில் நமக்குள் முப்பத்து ஐந்து கருவிகள் வேலை செய்து கொண்டுள்ளன.
அவையாவன: அறிவுக் கருவிகள் ஐந்து, செயல் கருவிகள் ஐந்து, சப்தாதி வசனாதி (அனுபவங்களை உள் வாங்கும் உணர்வுக் கருவிகள்) பத்து, வாயுக்கள் பத்து, அந்தக்கரணங்கள் நான்கு, ஆன்மா அல்லது புருடன் ஒன்று. ஆக மொத்தம் முப்பத்து ஐந்து.
ஒரு கதை போல கேளுங்கள். அவ்வளவே! புரியும் பொழுது புரியட்டும். சிறு வயதில் பதினாறாம் வாய்ப்பாடு படித்தோம். படித்தோஒம்ம்ம்… நினைவில்தான் நிற்கவில்லை!
பதினாறு பதினாறு இருநூத்து ஐம்பத்தாறு என்று மனப்பாடம் செய்தோம். புரிந்தா செய்தோம்? புரிந்துதான் படிக்கணும் என்பது சரியான வழிமுறையாக இருக்காது! இதுவும் ஒரு இரகசியம்தான்.
(காதைக் கொடுங்கள். ஒரு உண்மையைச் சொல்கிறேன். பதினாறாம் வாய்ப்பாடு எனக்குக் கவனம் வரவில்லை! கணிப்பான் என்கிறார்களே (Calculator) அவர்தான் உதவினார். யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்)
இது நிற்க. நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் கருவிகள் முப்பத்து ஐந்து.
களைத்து உறங்குகிறோம் அல்லவா?
ஆமாம். அதுதான் ஜாலியாக இருக்கு. நாம நினைப்பதெல்லாம் நடக்கும் களமாக கனவாக வருகின்றது என்கிறீர்களா? மிகச் சரி. இந்த நிலைக்குக் கனவு நிலை என்று பெயர்.
கனவு நிலையில் முப்பத்து ஐந்து கருவிகளில் ஒரு பத்து கருவிகள் அணைக்கப்படும். அஃதாவது, Switch-off செய்யப்படும். மற்றபடி இருபத்து ஐந்து கருவிகள் வேலை செய்து கொண்டிருக்கும். அதனால்தான் கனவுத் தூக்கம் முழு ஓய்வினைக் கொடுக்காது என்கிறார்கள்.
என்னென்ன கருவிகள் அணைக்கப்படும் என்று கேட்கிறீர்களா?
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários