அன்பிற்கினியவர்களுக்கு:
பகவத்கீதை மகாபாரதத்தில் ஒரு பகுதி. இஃது உரையாடல் போன்று அமைந்த பகுதி. பீஷ்ம பருவத்தில் இருபத்தி ஐந்தாவது அத்தியாயமாக அமைந்துள்ளது.
பகவத் கீதையில் வரும் பாத்திரங்கள்:
திருதராஷ்டிரர் – துரியோதனன் முதலான கௌரவர்களின் தந்தை;
சஞ்ஜயன் – திருதராஷ்டிரருக்குத் துணையாக அரண்மனையில் உள்ளவர்; தொலை நோக்குப் பார்வையினால் போர்க்கள நிலவரங்களை எடுத்துச் சொல்லுபவர்;
கிருஷ்ணன் – இறைவனின் மனித வடிவம். வாசுதேவர் – தேவகியின் பிள்ளை;
அர்ஜுனன் – பாண்டவர்களுள் ஒருவர், வில்லாளி. கிருஷ்ணனைத் தேரோட்டியாகப் பெற்றவர்.
பத்தாம் நாள் பீஷ்மர் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் சாய்கிறார். அது நாள் வரை உறுதியாக இருந்த திருதராஷ்டிரர் பீஷ்மரின் வீழ்ச்சியைக் கேட்டவுடன் கலங்குகிறார். போரின் நிலவரம் மற்றும் இதுவரை நிகழ்ந்தவைகளைக் குறித்துச் சஞ்ஜயனைத் தெளிவாகச் சொல்லுமாறு பணிக்கிறார்.
திருதராஷ்டிரரின் இக்கேள்விதான் பகவத்கிதையின் முதல் பாடல்;
சஞ்ஜயன் சொல்வதாக வரும் பாடல்கள் 41;
அர்ஜுனன் பேசுவதாக அமைந்த பாடல்கள் மொத்தம் 89;
கிருஷ்ண பரமாத்மா பேசுவதாக அமைந்துள்ள பாடல்கள் 569;
ஆக மொத்தம் 700 பாடல்கள். இது நிற்க.
போர் தொடங்குவதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வினைப் பார்க்கலாம்.
கௌரவர்கள், தாம் வெற்றி பெறுவர் என்ற எண்ண ஓட்டம் அவர்களிடையே வேரூன்றி இருந்தது. அவர்களின் சேனைகளின் பலம் அத்தகையது.
துரியோதனன், பிதாமகர் பீஷ்மரிடம் சென்று களம் பல கண்ட பீஷ்மரே வரும் போரில் எதிர் நிற்கப் போகும் ஏழு அக்குரோணி சேனைகளையும் உமக்கு வெல்ல எவ்வளவு நாள்கள் ஆகும் என்று வினவுகிறான்.
பீஷ்மர்: ஏழு அக்குரோணி சேனைகளையுமா?
துரியோதனன்: ஆம், ஏழையும் அழிக்க உமக்கு எவ்வளவு நாள் தேவை?
பீஷ்மர்: ஒரு நாள்
துரி: சபாஷ், சபாஷ், முதல் நாளிலேயே வெற்றி. மறு நாள் நான்தான் அனைவர்க்கும் அரசன். ஆனால், ஆனால் ,,,
பீஷ்மர்: என்ன ஆனால் என்று இழுக்கிறாய்
துரி: நீங்கள் வெற்றி கண்டால் ஒரு நாள். ம்ம் .. இல்லை, இல்லை
பீஷ்மர்: என்ன துரியோதனா என்ன சொல்ல வருகிறாய்?
துரி: பிதாமகரே நீங்கள் ஒரு நாளில் வென்றுவிடுவீர்கள் ஐயமில்லை, இருப்பினும் ஒரு வேளை நீங்கள் அதற்குள் மரணித்துவிட்டால் …
பீஷ்மர்: ஓஒ… அப்படி ஒரு சந்தேகமா உனக்கு? அப்படியென்றால் கவலை வேண்டாம். உன் குரு துரோணர் இருக்கிறாரே அவர் தலை சிறந்த போர் வீரர். அவருக்கு வெறும் மூன்று நாள்களே பிடிக்கும். கவலையை விடு.
துரி: மகிழ்ச்சி, மகிழ்ச்சி. நீங்கள் ஒரு நாள், குரு துரோணர் மூன்று நாள். ஒன்றும் மூன்றும் நான்கு நாள். ஐந்தாம் நாள் நான் அதிபதி. ம்ம்… ஆனால், ஆனால் ...
பீஷ்மர்: மீண்டும் என்ன ஆனால்?
துரி: இல்லை பிதாமகரே. எனக்கு மீண்டும் ஒரு ஐயம். குரு துரோணரும் மாண்டுவிட்டால்?
பீஷ்மர் என்ன சொல்லப் போகிறார் என்பதனை நாளைப் பார்ப்போம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
"பத்தாம் நாள் பீஷ்மர் வீழ்ந்து, அம்புப் படுக்கையில் சாய்கிறார். அதுவரை உறுதியுடன் இருந்த திருதராஷ்டிரர், பீஷ்மரின் வீழ்ச்சியைப் பற்றி கேட்டவுடன் மிகவும் கலங்குகிறார். போரின் நிலவரம் மற்றும் இதுவரை நடந்த எல்லாவற்றையும் சஞ்சயனைத் தெளிவாகச் சொல்லுமாறு பணிக்கிறார்." நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வுகளின் அடிப்படையில், எனக்குத் தோன்றுவது, திருதராஷ்டிரர் முதல் நாளிலிருந்தே சஞ்சயனை அனைத்து விவரங்களையும் கேட்டிருப்பார் என்பதே. இந்த எண்ணம் எனக்கு வருவதற்கு முக்கிய காரணம், ஒரு சுலோகத்தில் சஞ்சயர் கூறுகிறார்: துரியோதனன், (பீஷ்மரிடம் சந்தேகம் கொண்டிருந்ததால்,) துரண ஆச்சார்யரை பீஷ்மரின் நடவடிக்கைகளைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறான், பீஷ்மர் சங்கை ஊதும் வரை. மேலும், திருதராஷ்டிரருக்கு உண்மையில் உறுதி இல்லை; அவர் தனது மகன்களிடம் இருந்த தீவிரமான பாசத்தின் காரணமாக போருக்கு உடன்பட வேண்டியிருந்தது. இந்த தொடர்ச்சியான நிகழ்வுகள் பகவத்கீதையின் முக்கியமான பகுதியாக இல்லாவிட்டாலும், I thought of mentioning my Doubt. I may be wrong too.