அன்பிற்கினியவர்களுக்கு:
இந்த உலகில் நாம் ஒரு கருவி அவ்வளவே. நமக்குக் கருவிகள் நம் புலன்கள். உடலாலும், மனத்தாலும், புத்தியாலும் அன்றி புலன்களைக் கொண்டுமட்டும் செயல்களைச் செய்பவர்கள் துறவிகள். – 5:11
பற்றற்று இருப்பவன் நிட்டை கூடி மன அமைதி பெறுகிறான்; பற்றுக் கொண்டு செயல்களைச் செய்பவன் அதனிலேயே கட்டுண்டு உழல்கிறான். – 5:12
ஒன்பது வாசல் கொண்ட இந்த உடலில் உள்ள புலன்களைக் கட்டி மனத்தில் எந்தவிதச் சலனமும் இல்லாமல் செயல்களின் மேல் ஏற்படும் பற்றுகளைக் களைந்து இருப்பவன் தம்மட்டில் எதுவும் செய்யாமலும் செய்விக்காமலும் சுகமாக இருப்பான். – 5:13
நம்மாளு: இவ்வாறு தாம் சொன்ன கருத்துகளைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமாக விரிக்கிறார். சுருக்கமாக, சந்நியாச யோகம் என்பது இல்லறத்தான் தன் கடமைகளை பற்றில்லாமல் செய்து இன்பமாக இருக்கும் நிலை என்கிறார். சந்நியாசம் என்றால் செயல்களைச் செய்யாமல் அனைத்தையும் துறந்து காடேகிச் செல்வதுமன்று என்னும் தெளிவினை ஏற்படுத்துகிறார்.
அடுத்துவரும் பாடல் மிகவும் கவனிக்கத் தக்கது.
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபுஹு
ந கர்ம-பல-ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்த்ததே – 5:14
ப்ரபுஹு = இறைவன் என்பவன்; லோகஸ்ய ஸ்ருஜதி = உலகத்தில் உள்ள உயிர்களின் தன்மையாகத்: ந கர்த்ருத்வம் = தாம்தாம் எல்லவற்றிற்கும் காரணம் (கர்த்தா) என்ற எண்ணத்தை உருவாக்குவதுமில்லை; ந கர்மாணி = செய்ய வேண்டிய செயல்களையும் உண்டாக்குவதில்லை; ந கர்ம-பல-ஸம்யோகம் = செயல்களினால் ஏற்படும் விளைவுகளின் அனுபவத்தையும் கூட்டுவதில்லை; ஸ்வபாவஸ்து ப்ரவர்த்ததே = (இவை அனைத்தும்) இயல்பான குணங்களால் இயக்கப்படுகின்றன.
இறைவன் என்பவன் உலகத்தில் உள்ள உயிர்களின் தன்மையாகத் தாம்தாம் எல்லவற்றிற்கும் காரணம் (கர்த்தா) என்ற எண்ணத்தை உருவாக்குவதுமில்லை; செய்ய வேண்டிய செயல்களையும் உண்டாக்குவதில்லை; செயல்களினால் ஏற்படும் விளைவுகளின் அனுபவத்தையும் கூட்டுவதில்லை; (இவை அனைத்தும்) இயல்பான குணங்களால் இயக்கப்படுகின்றன. – 5:14
இந்தப் பாடலுக்கு ஸ்ரீமான் ஸ்ரீநிவாச அய்யங்கார் தம் மொழி பெயர்ப்பில் (பக்கம் 150, ஸ்ரீமத் பகவத்கீதை, 1954 மூன்றாம் பதிப்பு, சுதேச மித்திரன் பதிப்பகம்) கீழ்க்காணுமாறு ஒரு குறிப்பினைக் கொடுக்கிறார்:
“(கர்மங்களுக்குத் தகுந்த பலன்களைக் கொடுப்பதே ஈசுவரனுடைய காரியமென்ற மதமும் இங்கே மறுக்கப்படுகிறது)” என்கிறார்.
அஃதாவது, நீ புலன்களின் பின் செல்வதற்கெல்லாம் இறைவன் தான் காரணம் என்று சொல்லாதே! அப்படி யாராவது சொன்னாலும் நம்பாதே என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare