அன்பிற்கினியவர்களுக்கு:
கனவு நிலையில் அறிவுக் கருவிகள் ஐந்தும், செயல் கருவிகள் ஐந்தும் அணைக்கப்படும். மற்றபடி அனுபவங்கள் நிகழும்!
நாம் மனம் மொழி மெய்களால் இயங்குகிறோம். மனத்தின் வினைகள் கணவில் கழியும்!
மனத்தினில்தான் நாம் பெரும்பாலும் பாரிய தவறுகளையும் தப்புகளையும் செய்கிறோம். பாரிய என்றால் மிகப் பெரிய என்று பொருள். இலங்கையில் இந்தச் சொல் வழக்கில் உள்ளது என்பது கொசுறுத் தகவல். தடுக்கி விழுந்தால் தமிழ்ப் புலவர்களின் மடியிலும் தமிழன்னையின் மடியிலும்தாம் விழ வேண்டும் என்ற நிலையில் இருந்த ஊர் அஃது!
சாதியப் பாகுபாடுகளாலும் வீழ்த்தப்பட்ட நாடு அது! வரலாற்றினை மறத்தல் மன்னிக்கக் கூடிய குற்றமாக இருக்காது. அனுபவிக்க வேண்டிய நிலையாகத்தான் இருக்கும். இது நிற்க.
கணவு நிலையில் இருபத்து ஐந்து கருவிகள் வேலை செய்யும். அப்பொழுது உயிர் தங்கும் நிறுத்தம் எது தெரியுமா?
கழுத்து அல்லது தொண்டைப் பகுதி. இந்த நிலையில் அனுபவங்கள் இருக்கும் என்று பார்த்தோம். ஆழ்ந்த நித்திரை இருக்காது.
அடுத்த நிலைதான் உண்மையான உறக்க நிலை. இங்கே முப்பத்து ஐந்து கருவிகளுள் முப்பத்து மூன்று கருவிகள் அணைக்கப்படும். எஞ்சியுள்ள மூன்றாவன: அந்தக் கரணங்களுள் சித்தம், தச வாயுக்களுள் பிராணன் மட்டும், மற்றும் புருடன். இம் மூன்று மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும்.
பிராண வாயுதான் உயிரினை அங்கும் இங்கும் கொண்டு செலுத்துவது.
“அப்பாடா நல்லா தூங்கினேன்” என்கிறோமோ அது எப்படி? சித்தம் வேலை செய்வதனால் அந்தப் பதிவு சித்தத்தில் இருக்கும். அங்கிருந்து எடுத்துச் சொல்கிறோம். மற்றபடி பிற அனுபவங்கள் இருக்கா. நல்ல ஓய்வு கிடைக்கும்.
இந்தச் சமயத்தில் நம்மாளு உயிர் எங்கே தங்குவார் என்றால் நெஞ்சுப் பகுதியில் அமர்ந்திருப்பார்.
இதற்கும் அடுத்த நிலைதான் பேருறக்கம் அல்லது மயக்க நிலை.
இப்பொழுது இரு கருவிகள் மட்டும்தாம் இயங்கிக் கொண்டிருக்கும்.
அஃதாவது, பிராணனும், புருட தத்துவமும். எஞ்சிய முப்பத்து இரண்டும் அணைக்கப்பட்டிருக்கும்.
விழிப்பு வந்தவுடன் “எனக்கு என்னாச்சு?” என்று கேட்கிறார்களே அந்த நிலை இது! இந்த நிலையில் நம்மாளு உயிர் கொப்பூழ் (தொப்புள்) பகுதியில் அடங்கிவிடுவார்.
இதற்கும் மேலே ஒரு நிலை இருக்காம். அந்த நிலையில் பிராணனும் அடங்கிவிடும். புருடன் மட்டும் இயங்கும். அதாங்க, “உயிர் போய் வந்துச்சு” என்கிறார்களே அந்த நிலை.
அப்பொழுது உயிர் எங்கே இருக்கும் என்கிறீர்களா?
மூலாதாரத்தில் ஒடுங்கும். தலையின் உச்சியில் இருந்து ஒரு நேர் கோடு கீழ் நோக்கி வரைந்தால் தொப்புளுக்கு கீழே ஆசன வாயிற்கு சற்று மேலே உள்ள இடம்தான் மூலாதாரம் என்கிறார்கள். மூலாதாரம் என்னும் இடம் ஒரு இரகசியச் சுரங்கம். குண்டலினி சக்தி ஒடுங்கி இருக்கிறது என்கிறார்களே அதே இடம்தான் இந்த மூலாதாரம்.
தண்ணீரில் மூழ்கியவர்கள், பாம்பு தீண்டியவர்கள் பேச்சு மூச்சற்று இருப்பார்கள். அவர்களை இப்படி, அப்படிப் புரட்டிப் போட்டு உலுக்குவார்கள். அப்பொழுது புருடன் மெல்ல அசைந்து பிராணனை மேலே ஏற்றும். உயிர் மீண்டும் இயக்கதிற்கு வந்துடும்!
நாமும் பகவத்கீதையை விட்டுவிட்டு மூலாதாரத்திற்குள் நுழைந்துவிட்டோம்! இப்பொழுது மேலேறி பகவத்கீதையைப் பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துகளையும் பரிமாறவும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments