25/02/2021 (39)
நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துகள்
வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரிக்கறாங்க. ஒன்று – கற்கும் பருவம், இரண்டு – வாழும் பருவம், மூன்று – ஒய்வு எடுக்கும் பருவம், நான்கு – விலகும் பருவம்.
நம்மாளு: சின்னப்பசங்க, வளர்ந்தவங்க, வயசானவங்க, மேலும் கிளம்பத்தயாரா இருக்கிறவங்க அவ்வளோதானே ஐயா?
நன்று, ரொம்ப சரி.
இதைத்தான், பிரம்மச்சரியம், கிருகஹஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சந்நியாஸம்ன்னு நாலு ஆச்சிரமங்கள்ன்னு சமஸ்கிருத்ததிலே சொல்றாங்க.
இது கூட, நாலு வர்ணங்களைச் சேர்த்து ‘வர்ணாஸ்ரமம்’ன்னு சொல்றங்க! அதை பின்னாடி சமயம் வரும்போது பார்க்கலாம். நிற்க.
தம்பி சொன்னாப்போல, சின்னப்பசங்க, வளர்ந்தவங்க, வயசானவங்க, மற்றும் கிளம்பத்தயாரா இருக்கிறவங்க நாலு பேருக்கும் ஒரே மாதிரி rule (சட்டம்) போட முடியுமா? முடியாது இல்லையா.
உதாரணமாக, நம்ம இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution of India) இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் பொது. எல்லோரும் சட்டத்தின் பார்வையில சமம்ன்னு சொல்லுது. (all are equal before the law). ‘சமம்’ ங்கிற வார்த்தை சமமா இருக்கிறவங்க இடையே தான் ‘சமம்’ன்னு எடுத்துக்கனும். (equal among equals). ஒன்னாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு போடற சட்டம் (சட்டை) பத்தாம் வகுப்பு படிக்கிறவனுக்கு பொருந்தாது.
அது போல, திருக்குறள் பொதுவான அற நூலாக இருந்தாலும் அது யார், யாருக்கு பொருந்துமோ அப்படித்தான் பயன் படுத்தனும். யாருக்கு பொருந்தும்னு பார்கனும்னா, வள்ளுவப்பெருந்தகை குறள்களை வைத்துள்ள முறைமையை வைத்து பொருள் எடுக்கனும். அப்படி இல்லைன்னா, பொருளிலே முரண் வந்துடும்.
இந்திய அரசியலமைப்பு சட்டமும், திருக்குறளும் ஒரு வகையிலே ஒன்னு தான். என்ன ஒன்னு, நாம சட்டத்தை அப்ப, அப்ப மாற்றிக்கலாம். தலைப்பை மட்டும் அப்படியே வைச்சுட்டு உள்ளே அதுக்கு புறம்பானதையும் வைச்சுக்கலாம்!
இல்லைன்னா, ‘வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ன்னு வியாக்யானங்களை அடுக்கி அச் சட்டங்களுக்கு புது, புது அ(ன)ர்தங்களை கற்பிக்கலாம்!
என்ன இன்னைக்கு ஒரே ‘வியாக்யானமா’ இருக்கேன்னு தானே நினைக்கறீங்க, என்ன பண்றது, பின்னாலே பார்க்க போகிற குறள்களுக்கு பொருள் சரியான முறையிலே விளங்க இந்த புரிதல் உதவலாம்ங்கிறது எனது தாழ்மையான கருத்து. உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க ப்ளிஸ். ரொம்ப நாளா அமைதியா இருக்கிறா மாதிரி தோணுது. தொலைபேசியில கூட அழைக்கலாம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
コメント