03/06/2023 (821)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
கிரேக்க மொழியில் போபோஸ் (Phobos) என்றால் பயம். அதாங்க, அந்த போபியா (phobia), இந்த போபியா (phobia) என்று ஆயிரம் பயங்கள் மனிதனுக்குள் இருக்குமாம். பயங்களின் பட்டியல் வேண்டுமென்றால் தெனாலி என்ற திரைப்படத்தில் நடிகர் கமல் பேசும் வசனத்தைக் கேட்க:
“... எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம்; எனக்கு எல்லாம் பயமயம்;
காலன் உன்னை காலால் உதைக்கும் என்று காலமான பாரதி சொன்னவர்
காலணி காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு;
கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு;
பீமனிண்ட கதைக்கும் பயம்; அனுமனிண்ட கதைக்கும் பயம்;
உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்;
கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம்;
முழுசா மூடின கதவும் பயம்; பூட்டு போட்ட கதவு என்றாலும் பயம் எனக்கு;
பேர்ந்து திறக்க இயலாமல் மாட்டுபட்ட கதவு என்றால் திறந்தே சொல்லுவேன்
பெத்த பயம் எனக்கு.
காடு பயம் எனக்கு; நாடு பயம் எனக்கு
கூடு பயம் எனக்கு; குளம் பயம் எனக்கு
நண்டு கண்டாலும் பயம் எனக்கு; பூச்செண்டு கண்டாலும் பயம் எனக்கு;
செண்டுக்குள்ளார இருக்கும் வண்டு கண்டாலும் பயம் எனக்கு.
கடிக்கிற நாயும் பூனையும், பூனை திங்கிற எலியும் பயம் எனக்கு;
வெடிச்சு சிதறுற செல்லும், செல்லுகாக பதுங்குற பங்கரும் பயம் எனக்கு;
பங்கருக்குள் இருக்கிற பாம்பும் பூரானும் கடிக்குமோ என்ற பயம் எனக்கு;
சன கூட்டம் பயம் எனக்கு; தனிமை பயம் எனக்கு;
தொங்க பயம்; தாவ பயம்.
இந்தக் காசு பயம்; மாசு பயம்;தூசு பயம்; தும்மல் பயம்; அழுக்கு பயம்;
குளிக்க பயம், ஆடை பயம்; அது இல்லை என்றாலும் பயம்;
இங்கிலீஸும் பயம் எனக்கு.
சீனோ போபியா, ஏரோ போபியா; ஷுபோபியா, அத்யோ போபியா;
ஒரிட்டோ போபியா; ஹீமோ போபியா; செப்ரோ போபியா; டாபோ போபியா;
சைக்ரோ போபியா;
கிளோசா போபியா என பல போபியோக்கள் ஆங்கிலத்தில்
உண்டு என சொல்லுவினம்
இந்த எல்லா போபியாக்களும் உனக்கு உண்டடா கடவுள்தான் உன்னை காப்பாற்ற வேண்டும் என சொல்லி டாக்டர் பஞ்சபூதம் சாமி கிட்ட அனுப்பினார்
அங்கே போனால்:
செபிக்க பயம், சபிக்க பயம்; எடுக்க பயம்; கொடுக்க பயம்;
சுகிக்க பயம்; சகிக்க பயம்; எதையும் உயரத்தில் வச்சி அடுக்க பயம்;
யாரையும் கோவிச்சி அடிக்க பயம்;
அண்டை மனுசரை அணுக பயம்; அணுகிய மனுசரை இழக்க பயம்;
உறவு பயம்; துறவு பயம்; இரவு பயம்; விடியும் பயம;
புதியம் பார்க்க ஏனோ பயம்; மதியம் தூங்கி எழுந்தாலும் பயம்;
சோக பயம்; வேக பயம்; ரோக பயம்; நோக பயம்;
போக பயம்; வாரதும் பயம்; வாழ பயம்; சாகவும் பயம்;
கன நேரம் இப்படி கதைத்தால் நாவறண்டு போகுமோ என்ற தாக பயம் ... “
இந்த வசனம் பல பயங்களை அடுக்கியிருந்தாலும் அதனைக் கேட்கும்போது நமக்கு சிரிப்பு வந்தாலும், இதில் ஒரு குறிப்பினைக் காட்டியுள்ளார் இயக்குநர்.
காலக் கொடுமையைச் சித்தரிக்கும் வசனம் இது.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு, இந்த அனைத்து பயங்களும் இன்றளவிலும், போக வில்லையோ என்று எனக்கு பயம்!
அண்மையில், சில நாள்கள் இலங்கைக்குச் சென்று தங்கும் வாய்ப்பு கிட்டியதால் வந்த பயம் எனக்கு. அவ்வளவையும், எழுத இயலுமா என்றும் பயம்.
சூழ்நிலை வாய்ப்பளித்தால் எழுதுவேன். இது நிற்க.
அந்த தெனாலியில், கிரேசி மோகன் குழுவினரின் வசனத்தில் “கிளோசா போபியா” என்று ஒன்றைக் குறிப்பிடுவார். அது என்னவென்றால் அதுதான் அவைக்கு பயம்!
நேரம் அதிகம் எடுத்துக் கொண்டதால், நாளை அவையஞ்சாமையைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments